திருப்போரூரில் நீதிமன்றத்திற்கு இடம் தேர்வு: நீதிபதி ஆய்வு

திருப்போரூர்: திருப்போரூரில் நீதிமன்றத்திற்கு இடம் தேர்வு செய்வதற்காக செங்கல்பட்டு மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி மேவிஸ் தீபிகா சுந்தரவதனா ஆய்வு செய்தார். சட்டமன்ற தொகுதி தலைமையிடம், வட்ட தலைமையிடம் ஆகியவை செயல்படும் திருப்போரூரில் நீண்ட காலமாக நீதிமன்றம் அமைக்க வேண்டும் என வழக்கறிஞர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில், கடந்த சட்டமன்ற கூட்டத் தொடரில் திருப்போரூரில் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் மற்றும் மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் ஆகியவை அமைக்கப்படும் என சட்டத்துறை மானியக் கோரிக்கையின்போது முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி அளித்திருந்தார். இதையடுத்து, திருப்போரூரில் நீதிமன்றம் அமைப்பதற்காக ஆரம்ப கட்ட நிர்வாகப் பணிகள் முடிவடைந்து. தற்காலிக நீதிமன்ற கட்டிடத்தை தேர்வு செய்ய முடிவு செய்யப்பட்டது.

இதைதொடர்ந்து, 11ம் தேதி செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் திருப்போரூரில் உள்ள பல்வேறு கட்டிடங்களை ஆய்வு செய்து கண்ணகப்பட்டு மற்றும் காலவாக்கத்தில் உள்ள 2 சமுதாயக் கூடங்களை பரிந்துரை செய்திருந்தார். இந்நிலையில், நேற்று செங்கல்பட்டு மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி மேவிஸ் தீபிகா சுந்தரவதனா, திருப்போரூர் பேரூராட்சியில் அடங்கிய கண்ணகப்பட்டு சமுதாயக் கூட கட்டிடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். முன்னதாக, திருப்போரூர் பேரூராட்சி தலைவர் மு.தேவராஜ், மாவட்ட நீதிபதிக்கு  பூச்செண்டு கொடுத்து வரவேற்றார். அப்போது, செயல் அலுவலர் குணசேகரன் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

Related Stories: