சென்னை: சென்னை போக்குவரத்து காவல்துறை வெளியிட்ட அறிக்கை: வேளச்சேரி முதல் புனித தோமையார் மலை வரை பறக்கும் ரயில் கான்கிரீட் இணைப்பு தூண் அமைக்கும் பணி நடைபெற இருப்பதால் எம்.ஆர்.டி.எஸ் சாலை தில்லை கங்கா நகர் வெளிச் செல்லும் சாலையில் நாளை முதல் 4 மாதங்களுக்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.உள்வரும் எம்.ஆர்.டி.எஸ் சாலை இரண்டாக பிரிக்கப்பட்டு தூண் எண் 157 மற்றும் 158 இடையே 90 மீட்டர் நீளத்திற்கு வெளி செல்லும் சாலை தடை செய்யப்பட்டு மாநகர பேருந்துகள் மற்றும் வணிக பயன்பாட்டு வாகனங்கள் வலது புறம் திரும்பி உள்வரும் சாலையில் பயணித்து பின்னர் தூண் எண் 156-ல் அருகே இடதுபுறமாக திரும்பி வழக்கமான சாலையில் செல்லலாம்.
ஏனைய இலகு ரக வாகனங்கள் இடதுபுறம் திரும்பி 36வது ஜீவன்நகர் 3வது தெரு, 23வது தெரு விரிவாக்கம் சென்று இடது பக்கம் திரும்பி வழக்கமான எம்.ஆர்.டி.எஸ் சாலை சென்றடயலாம். வேளச்சேரியிலிருந்து எம்.ஆர்.டி.எஸ் சாலை வழியாக வரும் உள்வரும் அனைத்து மாநகர பேருந்துகள் மற்றும் வணிக பயன்பாட்டு வாகனங்கள் நேராக மாற்றம் ஏதுமின்றி சாலையில் இடதுபுறமாக செல்ல வேண்டும். தவிர இருசக்கர, மூன்று சக்கர வாகனங்கள் மற்றும் கார்கள் தில்லை கங்காநகர் 23வது தெருவில் இடதுபுறமாக திரும்பி 3வது பிரதான சாலை மற்றும் 32வது தெரு வழியாக சென்று எம்.ஆர்.டி.எஸ் சாலை தில்லை கங்காநகர் சுரங்கபாதையை அடையலாம். அவசர கால வாகனங்கள் வழக்கமான பாதையில் செல்லலாம். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
* திருமங்கலத்தில்...
திருமங்கலம் போக்குவரத்து காவல் நிலைய எல்லைக்குட்பட்ட எஸ்டேட் ரோடு நிழற்சாலையில் வரும் 16ம் தேதி ஞாயிற்றுக்கிழமை பொழுதுபோக்கு நிகழ்வு நடைபெற இருப்பதால் ஆபிசர் காலனி சந்திப்பு முதல் டிஏவி நிழற்சாலை சந்திப்பு வரை காலை 6 மணி முதல் 9 மணி வரை போக்குவரத்து முற்றிலுமாக தடை செய்யப்பட்டு மேற்கண்ட நிகழ்வுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
திருமங்கலத்திலிருந்து எஸ்டேட்ரோடு கோல்டன் பிளாட் வழியாக அம்பத்தூர், ஆவடி நோக்கி செல்லும் வாகனங்கள் மற்றும் மாநகர பேருந்துகள் பாடி மேம்பாலம் டிவிஎஸ் லூக்காஸ் பிரிட்டானியா கம்பெனி வழியாக செல்ல வேண்டும்.
திருமங்கலத்திலிருந்து ஜெஜெ நகர் முகப்பேர் மேற்கு நோக்கி செல்லும் வாகனங்கள் வளையாபதி சாலை வழியாக வலது புறம் திரும்பி பாரி சாலை வழியாக வலது புறம் திரும்பி திருவள்ளூர் சாலை வழியாக செல்லலாம். ஆவடி, அம்பத்தூர் ஓ.டி யிலிருந்து கோல்டன் காலனி வழியாக திருமங்கலம் அண்ணாநகர் செல்லும் வாகனங்கள் மற்றும் மாநகர பேருந்துகள் டிவிஎஸ் லூக்காஸ் பிரிட்டானியா கம்பெனி வழியாக 100 அடி சாலை வழியாக செல்ல வேண்டும். மேற்கண்ட போக்குவரத்து மாற்றங்களுக்கு வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் மற்றும் குடியிருப்புவாசிகளும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும், என போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.
