×

அப்போலோ மருத்துவமனையில் 370 ரோபோட்டிக் மூட்டுமாற்று அறுவை சிகிச்சை: மருத்துவர்களுக்கு ப்ரீத்தா ரெட்டி பாராட்டு

சென்னை: கடந்த 10 மாதங்களில் அப்போலோ மருத்துவமனையில் 370  ரோபோட்டிக் மூட்டுமாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அப்போலோ மருத்துவமனையின் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை நிபுணர் மதன் மோகன் ரெட்டி கூறுகையில், “ரோபோ மூலம், ஒவ்வொரு முறையும், துல்லியமான முறையில் நோயாளிகளுடைய எலும்பு அமைப்பு முறைகளை முதலில் ஒரு மெய்நிகர் முப்பரிமாண மாதிரியில் பார்த்து பின்னர் அறுவை சிகிச்சை அரங்கிலும் பார்த்து சிறப்பான சிகிச்சையை மேற்கொள்ள முடியும். கையால் மேற்கொள்ளப்படும் அறுவை சிகிச்சையுடன் ஒப்பிடும்போது ரோபோடிக் உதவியுடனான அறுவை சிகிச்சையில் அதிக பலன்கள் உள்ளன. நோயாளிகளின் மேம்பட்ட ஆரம்ப கட்ட செயல்பாடு, அறுவை சிகிச்சைக்குப் பின் குறைந்த வலி, வலி நிவாரணிகளுக்கான தேவைக் குறைவு, விரைவான குணம் மற்றும் நோயாளிக்கு மிக அதிக திருப்தி போன்ற பலன்கள் இந்த ரோபோட்டிக் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை மூலம் ஏற்படுவதாக பல ஆய்வுகள் நிரூபித்துள்ளன.

வழக்கமான முழங்கால் மாற்று அறுவை சிகிச்சையின் வெற்றி விகிதம் சுமார் 90 சதவீதம் முதல் 95 சதவீதம் வரை உள்ளது. ஆனால் ரோபோடிக் உதவியுடனான அறுவை சிகிச்சைகளில், வெற்றி என்பது 100 சதவீதமாக உள்ளது. அத்துடன் நோயாளிகள் விரைவாக குணமடைவதுடன் அந்த நிவாரணம் நீண்ட காலம் நீடித்து நிற்கிறது என்றார். அப்போலோ மருத்துவமனை குழுமத்தின் செயல் துணைத் தலைவர் ப்ரீத்தா ரெட்டி கூறுகையில் அப்போலோவில், நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக புதிய கண்டுபிடிப்புகளை அறிமுகப்படுத்தி அடுத்த தலைமுறை செயல்முறைகளை நோயாளிகளுக்கு வழங்கும் விதமாக அதிநவீன மருத்துவ தொழில்நுட்பங்களை உடனுக்குடன் கொண்டு வருகிறோம். 2022ம் ஆண்டில் அப்போலோவில் ரோபோடிக் எலும்பியல் சிகிச்சை நடைமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டன. இது நோயாளிகள், மூட்டு மற்றும் முழங்கால் நோய்களில் இருந்து எளிதில் குணமடைய உதவுவதோடு, விரைவாக குணமடையவும் உதவுகிறது.

இந்த மையம் ஜனவரி 2022 முதல் ஏற்கனவே 370 ரோபோடிக் முழங்கால் மாற்று சிகிச்சை நடைமுறைகளை வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளது. இதன் மூலம் இந்தப் பிரிவில் மிகவும் அதிக சிகிச்சைகளை மேற்கொள்ளும் மையமாக இது மாறியுள்ளது. டாக்டர் மதன் மோகன் ரெட்டி மற்றும் அவரது குழுவினர், இப்போது தமிழ்நாட்டில் அதிகபட்ச ரோபோட்டிக் முழங்கால் மாற்று சிகிச்சைகளைச் செய்த பெருமையைப் பெற்றுள்ளனர். இந்த உலகத்தரம் வாய்ந்த தொழில் நுட்பத்தை வழங்குவதிலும் முழங்கால் மற்றும் இடுப்பு மாற்று சிகிச்சை தேவைப்படும் நோயாளிகளுக்கு இதன் மூலமாக மிகச் சிறப்பாகச் சிகிச்சை அளிப்பதிலும் அப்போலோ மருத்துவமனை மகிழ்ச்சி அடைகிறது என்றார். தொடர்ந்து, சிறப்பாக அறுவை சிகிச்சை மேற் கொண்ட மருத்துவ குழுவினருக்கு அப்போலோ மருத்துவமனை குழுமத்தின் செயல் துணைத் தலைவர் ப்ரீத்தா ரெட்டி பாராட்டு தெரிவித்தார்.

Tags : Apollo ,Preetha Reddy , 370 Robotic Arthroplasty at Apollo Hospitals: Preetha Reddy praises doctors
× RELATED மாதவரம், மணலி ஏரியில் நாளை படகு சவாரி துவக்கம்