கர்ப்பிணியான நடிகை திவ்யாவை தாக்கிய விவகாரத்தில் கைதுக்கு பயந்து நடிகர் அர்னவ் ஆந்திராவில் பதுங்கல்? மதம் மாற்றி தன் வாழ்க்கையை சீரழித்துவிட்டதாக மகளிர் ஆணையத்தில் நடிகை கதறல்

சென்னை: கர்ப்பிணியாக இருக்கும் நடிகை திவ்யாவை தாக்கிய விவகாரத்தில், போலீஸ் எந்த நேரத்திலும் தன்னை கைது செய்ய கூடும் என்ற அச்சத்தில் சின்னத்திரை நடிகர் அர்னவ் ஆந்திராவில் பதுங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கிடையே நடிகை திவ்யா மகளிர் ஆணையத்தில் ஆஜராகி, ‘என்னை மதம் மாற செய்து என் வாழ்க்கையை அர்னவ் சீரழித்துவிட்டதாக’ அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளார். கர்நாடகா மாநிலத்தை சேர்ந்தவர் திவ்யா(35). இவருக்கு 2012ல் நடந்த திருமணம் மூலம் 6 வயதில் மகள் உள்ளார். பிறகு கருத்துவேறுபாடு காரணமாக கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்றார். அதன் பின்னர், திவ்யாவின் பார்வை சின்னத்திரை பக்கம் திரும்பியது. அவர் ஒரு தொடரில் கதாநாயகியாக நடித்தபோது, அதே தொடரில் கதாநாயகனாக நடித்த அர்னவ் என்பவருடன் நெருக்கம் ஏற்பட்டது. இருவரும் ஆறு ஆண்டுகள் காதலித்த பின்னர், 27.6.2022ம் தேதி சென்னை வடக்கு மாவட்ட சார் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு திருமணம் செய்து கொண்டனர்.

தற்போது, திவ்யா 3 மாதம் கர்ப்பமாக உள்ளார். இந்நிலையில், நடிகை திவ்யாவுக்கு ஏற்கனவே திருமணம் நடந்து ஒரு மகள் இருப்பது தெரியவந்ததும், நடிகர் அர்னவ், நடிகை திவ்யாவை கர்ப்பிணி என்றும் பாராமல் கீழே தள்ளி காலால் எட்டி உதைத்துள்ளார். இதனால் திவ்யா கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் அர்னவ் தற்போது இது குறித்து தனது முகநூல் பக்கத்தின் வாயிலாக திவ்யா போலீசில் புகார் அளித்தார். அதேநேரம் நடிகர் அர்னவ், ஆவடி காவல் ஆணையரகத்தில் மனைவி திவ்யா மற்றும் ஈஸ்வர் என்பவர் மீது புகார் அளித்தார். அர்னவ் புகாரை கொண்டு நடந்த விசாரணையில், நடிகை திவ்யா, அர்னவ் குற்றச்சாட்டை மறுத்தார். அதேநேரம், அர்னவ் மீது சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கடந்த 7ம் தேதி திவ்யா புகார் அளித்தார். இவ்வாறு ஒருவர் மீது ஒருவர் புகார் அளித்ததால் இரண்டு புகார்கள் மீது விசாரணை நடத்த போரூர் அனைத்து மகளிர் போலீசாருக்கு அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

அதன்படி போரூர் அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தியதில், நடிகர் அர்னவ் தனது மனைவியை அடித்து துன்புறுத்தி, கொலை மிரட்டல் விடுத்தது தெரியவந்தது. அதை தொடர்ந்து நடிகர் அர்னவ் மீது 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகுமாறு நடிகர் அர்னவ்வுக்கு போரூர் மகளிர் போலீசார் உத்தரவிட்டனர்.ஆனால் அவர் போலீஸ் விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்து வந்தார். அதைதொடர்ந்து மீண்டும் போரூர் மகளிர் போலீசார் இன்று (14ம் தேதி) நேரில் ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பியுள்ளனர். ஆனால், போலீசாரின் சம்மனை அர்னவ் வாங்க வில்லை என்று கூறப்படுகிறது. அவர் சென்னையில் இல்லை என்றும், போலீசார் தன் மீது வழக்கு பதிவு செய்ததால், எந்த நேரமும் கைது செய்யப்படலாம் என்ற பயத்தில், முன் ஜாமீன் பெறும் நோக்கில் தற்போது ஆந்திராவில் பதுங்கி இருப்பதாக கூறப்படுகிறது.

சம்மன் படி இன்று காவல் நிலையத்தில் அவர் நேரில் ஆஜராகவில்லை என்றால் கைது செய்யப்படுவார் என்று போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதற்கிடையே நடிகை திவ்யா தனது கணவர் அர்னவ் மீது மகளிர் ஆணையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் படி நடிகை திவ்யாவிடம் 2 நாட்கள் மகளிர் ஆணைய அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையின் போது நடிகை திவ்யா, தனது காதல் கணவர் தன்னிடம் தகராறு செய்தது தொடர்பான வீடியோக்கள், செல்போன் உரையாடல்கள், அர்னவ்வின் தற்போதைய காதலியுடன் பேசிய ஆடியோ உள்ளிட்ட ஆதாரங்களை அவர் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், நடிகை திவ்யா தன்னை அர்னவ் காதலித்து திருமணம் செய்து கொள்வதற்கு முன்பு, எனது மதத்துக்கு நீ மாறினால் தான் நான் உன்னை திருமணம் செய்ய முடியும் என்று கட்டாயப்படுத்தி என்னை இந்து மதத்தில் இருந்து அவரது மதத்திற்கு மாற்றினார். அதன் பிறகே அர்னவ் தன்னை திருமணம் செய்து கொண்டார். ஆனால் எனது காதல் கணவருக்காக எனது தாய் மதத்தை விட்டு மதம் மாறிய என்னை மறந்துவிட்டார். தற்போது மற்றொரு நடிகையுடன் எனது வீட்டிலேயே இருந்து கொண்டு என்னை மிரட்டி வருகிறார். எனவே, அர்னவ் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விசாரணையின் போது நடிகை திவ்யா விளக்கம் அளித்துள்ளதாக மகளிர் ஆணைய வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியாகி உள்ளது.

Related Stories: