ஓபிஎஸ் ஆதரவு எம்பிக்கு ஒன்றிய அரசில் புது பதவி: எடப்பாடி அணி அப்செட்

சாயல்குடி: ஓ.பன்னீர்செல்வத்தின் தீவிர ஆதரவாளரான மாநிலங்களவை எம்.பி தர்மர், ஒன்றிய தொழிலாளர், ஜவுளி மற்றும் திறன் மேம்பாட்டு குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். இதனால் எடப்பாடி அணியினர் அப்செட் ஆகியுள்ளனர். கடந்த மே மாதம் நடந்த மாநிலங்களவை உறுப்பினர்கள் பதவிக்கான தேர்தலில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், ராமநாதபுரம் முன்னாள் மாவட்ட செயலாளரும், முதுகுளத்தூர் ஒன்றிய செயலாளருமான ஆர்.தர்மர் போட்டியிட்டனர். இவர்களில் தர்மர், ஓ.பன்னீர்செல்வத்தின் தீவிர ஆதரவாளர். இதன் பிறகு கட்சியின் பொதுச்செயலாளர் யார் என்ற பிரச்னையால் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இடையே பிளவு ஏற்பட்டது.  

இந்த நிலையில் ஓபிஎஸ் அணியை சேர்ந்த எம்.பி தர்மருக்கு, ஒன்றிய தொழிலாளர், ஜவுளி மற்றும் திறன் மேம்பாட்டுத்துறைகளுக்கான  நாடாளுமன்ற நிலைக்குழு உறுப்பினர் பதவி வழங்கியுள்ளது ஒன்றிய அரசு. தற்போது அதிமுகவில் நிலவி வரும் குழப்பங்களுக்கு மத்தியில் ஓபிஎஸ் அணியை சேர்ந்த எம்.பி தர்மருக்கு பதவி வழங்கப்பட்டிருப்பது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனை தொடர்ந்து டெல்லியில் நடந்த ஒன்றிய தொழிலாளர், ஜவுளி மற்றும் திறன் மேம்பாட்டு குழு கூட்டத்தில் உறுப்பினராக அதிமுக சார்பில் எம்.பி தர்மர் கலந்து கொண்டார். அதிமுக உறுப்பினர் என்ற முறையில் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதால் ஓபிஎஸ் அணி மகிழ்ச்சியடைந்துள்ளது. ஒன்றிய அரசின் இத்தகைய செயல் இபிஎஸ் அணியை அதிருப்தியடைய செய்துள்ளது.

Related Stories: