×

எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கமான கான்ட்ராக்டர் ரூ.2,000 கோடி சொத்து குவித்தது அம்பலம்: புதுக்கோட்டை வீட்டில் 2வது நாளாக ரெய்டு

புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கமான கான்ட்ராக்டர் வீட்டில் வருமான வரித்துறையினர் நேற்று 2வது  நாளாக சோதனை நடத்தினர். இதில் ரூ. 2,000 கோடிக்கு சொத்து குவித்துள்ளது அம்பலமாகி உள்ளது. புதுக்கோட்டை பெரியார் நகரை சேர்ந்தவர் பாண்டிதுரை (47). நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட அலுவலக உதவியாளர். இவர், முதற்கட்டமாக நெருக்கமானவர்களுக்கு நெடுஞ்சாலையோரம் உள்ள மரங்களுக்கு வர்ணம் பூசும் பணியை கொடுத்து வந்துள்ளார். பின்னர் படிப்படியாக வளந்து வந்த இவருக்கு, கடந்த அதிமுக ஆட்சியில் நெடுஞ்சாலைத்துறை அமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமியிடம் நெருக்கம் ஏற்பட்டது.

இதில் அவர் மூலமாக பல்வேறு அரசு ஒப்பந்தங்கள் எடுக்க வாய்ப்பு கிடைத்ததால் தனது பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்று வெளியேறினார். நெடுஞ்சாலைத்துறையில் அரசு ஒப்பந்ததாரராக பதிவு செய்து கொண்ட பாண்டித்துரை, தொடர்ந்து கோடிக்கணக்கில் அரசு பணிகளை ஒப்பந்தம் எடுத்து பணி செய்ய தொடங்கினார். பின்னர் ஜெயலலிதா இறந்த பிறகு, தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமி பதவி ஏற்றார். அதன் பின்னர், பாண்டித்துரையின் வளர்ச்சி கிடு கிடுவென உயர்ந்தது. எடப்பாடி பழனிசாமியின் நம்பிக்கை வட்டத்தில் இருந்ததால் அவருக்கு பல கோடி ரூபாய் அளவில் அரசு ஒப்பந்தங்கள் கிடைத்தது.

இதனால் இவரது சொத்து மதிப்பு ஆயிரக்கணக்கான கோடி அளவில் உயர்ந்தது. எடப்பாடி பழனிசாமி அதிகாரத்தை பயன்படுத்தி முறைகேடாக ரூ. 5ஆயிரம் கோடியில் ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டது என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இந்த வழக்கு உயர்நீதிமன்றம் சென்று, பின்னர் உச்சநீதிமன்றம் வரை சென்றது. முறைகேடாக விடப்பட்ட இந்த ஒப்பந்தத்தில் பாண்டித்துரை ரூ.500 கோடிக்கு மேல் ஒப்பந்தங்கள் எடுத்து பணி செய்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த முறைகேடு ஒப்பந்தத்தில் ஒன்றிய அரசு, எடப்பாடி பழனிசாமியை சிக்க வைக்க பான்டித்துரை வீட்டில் வருமானவரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

கோயம்புத்தூரில் பாண்டித்துரை குடும்பத்தினருடன் வசித்து வரும் நிலையில், புதுக்கோட்டை பெரியார் நகரில் உள்ள ``ஹரிவே லயன்ஸ்’’ என்ற பெயரில் இயங்கும் அவரது அலுவலகம், அதே பகுதியில் உள்ள அவரது வீடு, அவரது மேலாளர் பீட்டரின் வீடு உள்ளிட்ட இடங்களில் 30க்கும் மேற்பட்ட வருமானவரித்துறை அதிகாரிகள் நேற்றுமுன்தினம் காலை 8 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை அதிரடி சோதனை நடத்தினர். இதில் முதல் நாளில் கைப்பற்றப்பட்ட முக்கிய ஆவனங்களை வீட்டில் உள்ள ஒரு சிறிய அறையில் பூட்டினர். சோதனையை முடித்துக்கொண்டு புதுக்கோட்டையில் உள்ள ஒரு ஓட்டலில் வருமான வரித்துறை அதிகாரிகள் தங்கினர்.

இந்நிலையில் 2வது நாளாக நேற்று காலை 8.30 மணிக்கு மீண்டும் பாண்டித்துரை வீட்டிற்கு சென்ற வருமானவரித்துறை அதிகாரிகள், கைப்பற்றப்பட்ட முக்கிய ஆவணங்களை ஆய்வு செய்து முறைகேடு குறித்து பதிவு செய்தனர். இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறும்போது, கான்ட்ராக்டர் பாண்டித்துரை வீட்டில் 2 நாட்கள் நடந்த சோதனையில் ரூ.2,000 கோடி மதிப்புள்ள சொத்து ஆவணங்கள் சிக்கி உள்ளது. இவ்வளவு சொத்துக்கள் வாங்குவதற்கு பாண்டித்துரையிடம் பணம் எங்கிருந்து வந்தது என தொடர்ந்து விசாரணை நடக்கிறது. இன்றும் (14ம்தேதி) விசாரணை தொடரலாம் என தெரிகிறது. புதுக்கோட்டை பெரியார் நகரில்  கான்ட்ராக்டர் பாண்டித்துரை வீட்டில் வருமானவரித்துறை அதிகாரிகள் 2வது  நாளாக நேற்று சோதனை செய்ததால் புதுக்கோட்டை நகர் பகுதியில் பெரும்  பரபரப்பை ஏற்படுத்தியது.

* சொத்து பத்திரங்களை ஆய்வு செய்ய தனி டீம்
பாண்டித்துரை கோயம்புத்தூர், பொள்ளாச்சி, சேலம், சென்னை உள்ளிட்ட பல இடங்களில் கோடிக்கான சொத்துக்களை பாண்டித்துரை வாங்கி குவித்துள்ளார். இந்த ரூ. 2,000 கோடி சொத்து பத்திரங்கள் புதுக்கோட்டை வீட்டில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த சொத்து தொடர்பான அனைத்து ஆவணங்களும் வருமானவரித்துறை அதிகாரிகளிடம் கிடைத்துள்ளதாகவும், அவற்றை வைத்து இவ்வளவு சொத்து வாங்கியது எப்படி, இதற்கு பணம் கொடுத்தது யார் என்று ஒரு தனி குழு அமைத்து ஆய்வில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

* சோதனையை விரிவுபடுத்த அதிகாரிகள் திட்டம்
கான்ட்ராக்டர் பாண்டித்துரை வீட்டில் கிடைத்த சில தகவல்களை உறுதிப்படுத்த அவருக்கு தொடர்புடைய இடங்கள், வீடுகள், அலுவலகங்கள் மற்றும்  பாண்டித்துரையின் நண்பர்கள், அவர் மூலம் ஒப்பந்தம் எடுத்தவர்களின் வீடுகள், அலுவலகங்களில் அதிகாரிகள் தொடர்ந்து சோதனை நடத்த  திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.


Tags : Edappadi Palaniswami ,Ambalam ,Pudukottai , A contractor close to Edappadi Palaniswami amassed assets of Rs 2,000 crore Ambalam: Raid for 2nd day at Pudukottai house
× RELATED எடப்பாடி பழனிசாமி ரோடு ஷோ சென்றால்...