×

3 மாதத்துக்கு ஒருமுறை வன்கொடுமைகள் சட்ட செயல்பாடு கண்காணிப்பு தேவை: அமைச்சர் கயல்விழி செல்வராஜ் உத்தரவு

சென்னை: வன்கொடுமைகள் தடுப்பு சட்ட செயல்பாடுகளை கண்காணிக்க மாவட்ட அளவிலான விழிப்புணர்வு கூட்டத்தை மூன்று மாதங்களுக்கு ஒருமுறை நடத்த வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அமைச்சர் கயல்விழி செல்வராஜ் உத்தரவிட்டுள்ளார். ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் தலைமையில் மாநில அளவிலான துறை சார்ந்த வளர்ச்சி திட்ட பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் சென்னை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. இதில் அமைச்சர் கயல்விழி பேசியதாவது: பள்ளி,கல்லூரி மாணவர்களுக்கு நாட்டு நடப்பை தெரிந்து கொள்ளும் வகையில் செய்தித்தாள்கள் மற்றும் புத்தகங்களை படித்திட விடுதி காப்பாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஊக்குவிக்க வேண்டும். மேலும் அவர்களுக்கு அரசு கல்வி உதவித் தொகை கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். இலவச வீட்டு மனை பட்டா திட்டத்தை நல்ல முறையில் செயல்படுத்த வேண்டும். மயானம், மயானப்பாதை, சமுதாய நலக்கூடங்கள் ஆகிய திட்டங்களை நல்ல முறையில் செயல்படுத்த வேண்டும். வன்கொடுமைகள் தடுப்பு சட்ட செயல்பாடுகளை கண்காணிக்க மாவட்ட அளவிலான விழிப்புணர்வு கூட்டத்தை மூன்று மாதங்களுக்கு ஒருமுறை தவறாமல் நடத்த வேண்டும் என்றார். கூட்டத்தில் தாட்கோ வாரிய தலைவர் உ.மதிவாணன், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை செயலாளர் தென்காசி சு.ஜவஹர், ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குனர் ஆனந்த், உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Minister ,Kayalvizhi Selvaraj , Atrocities Act activity monitoring is required once in 3 months: Minister Kayalvizhi Selvaraj orders
× RELATED காங்கயத்தில் அம்பேத்கர் பிறந்தநாள் விழாவில் அமைச்சர் மலர் தூவி மரியாதை