×

மென் பொறியாளர் சுவாதி கொலையை போன்று மற்றொரு கொடூர சம்பவம் ஓடும் ரயில் முன் தள்ளி கல்லூரி மாணவி படுகொலை

* வேறு ஒருவருடன் நிச்சயம் செய்ய ஏற்பாடு செய்ததால் வெறிச்செயல்
* தலைமறைவான காதலனை பிடிக்க 7 தனிப்படை
* நேரில் பார்த்த பயணிகள் அலறி அடித்து ஓட்டம்
* சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் பயங்கரம்

சென்னை: சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் காதலர்களுக்கிடையே ஏற்பட்ட தகராறில் காதலனே கொடூரமான முறையில் கல்லூரி மாணவியை ஓடும் ரயில் முன்பு தள்ளி படுகொலை செய்தார். பொதுமக்கள் முன்னிலையில் நடந்த இந்த சம்பவத்தால் ரயில் நிலையத்தில் பதற்றம் நிலவியது. தலைமறைவான காதலனை பிடிக்க 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. சென்னை ஆலந்தூரில் உள்ள காவலர் குடியிருப்பை சேர்ந்தவர் ராமலட்சமி(43). இவர் ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வருகிறார். இவரது கணவர் மாணிக்கம்(47), சொந்தமாக கார் வைத்து வாடகைக்கு  ஓட்டி வருகிறார்.

இவர்களுக்கு 2 மகள்கள். மூத்த மகள் சத்யா தி.நகரில் உள்ள ஜெயின் கல்லூரியில் பி.காம் 2ம் ஆண்டு படித்து வந்தார். இவர் தினமும் கல்லூரிக்கு ரயில் மூலம் செல்வதை வாடிக்கையாக வைத்திருந்தார். இந்நிலையில் சத்யா நேற்று மதியமும் கல்லூரிக்கு செல்ல பரங்கிமலை ரயில்நிலையத்துக்கு தனது தோழியுடன் சென்றார். ரயில் வர தாமதமானதால் பரங்கிமலை ரயில் நிலைய நடைமேடையில் உள்ள இருக்கையில் நேற்று மதியம் 12.45 மணிக்கு தோழியுடன் அமர்ந்து இருந்தார். அப்போது அங்கு வந்த வாலிபர் ஒருவர், சத்யாவிடம் வெகுநேரம் பேசி கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

சரியாக 1.15 மணிக்கு தாம்பரத்தில் இருந்து கடற்கரை ரயில் நிலையம் நோக்கி மின்சார ரயில் வந்தது. அதை பார்த்த உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சத்யா அந்த வாலிபரிடம் இருந்து விலகி ரயிலில் ஏற நடைமேடை ஓரம் நின்று கொண்டிருந்தார். அப்போது யாரும் எதிர்பார்க்காத வகையில் அந்த வாலிபர், திடீரென ரயிலில் ஏற ரயில் நடைமேடை ஓரம் நின்று கொண்டிருந்த கல்லூரி மாணவி சத்யாவை பின்னால் இருந்தபடி முதுகில் எட்டி உதைத்தார். இதில் நிலை தடுமாறிய சத்யா ரயில் இன்ஜின் முன்பு தண்டவாளத்தில் விழுந்தார். அப்போது ரயில் சத்யா மீது ஏறி இறங்கி நின்றது.

அப்போது தண்டவாளத்தில் விழுந்த கல்லூரி மாணவி சத்யா தலை துண்டிக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் உடல் துடிதுடிக்க உயிரிழந்து கிடந்தார். துண்டிக்கப்பட்ட கழுத்தில் இருந்து ரத்தம் வெளியேறி கொண்டிருந்தது. இந்த கோர சம்பவத்தை பார்த்த பயணிகள் பலர் அலறி அடித்து ஓடினர். இதை பார்த்த பெண் பயணிகள் பலர் ‘யார் பெத்த மகளோ இப்படி இரண்டு துண்டா கிடக்கிறாளே’ என்று அழுதப்படி சென்றனர். உடன் வந்த சத்யாவின் தோழி அலறி துடித்தார். இந்த சம்பவம் அங்கு ரயில் ஏற வந்த பயணிகளிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. கல்லூரி மாணவியை ரயில் வரும்போது எட்டி உதைத்த அந்த வாலிபர் அங்கிருந்து மின்னல் வேகத்தில் தப்பி ஓடிவிட்டார். சம்பவம் குறித்து பயணிகள் பரங்கிமலை ரயில்வே போலீசாருக்கு தகவல் அளித்தனர். போலீசார் வரும் வரை ரயில் இயக்கப்படவில்லை. உடலை எடுத்த பிறகு ரயில் இயக்கப்பட்டது.

அதன் பிறகு 2 துண்டான சத்யா உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் சம்பவம் குறித்து தகவல் அறிந்த ரயில்வே உயரதிகாரிகள் மற்றும் பரங்கிமலை துணை கமிஷனர் பிரதீப் நேரில் சென்று சத்யாவை ரயில் முன்பு தள்ளி கொலை செய்யப்பட்ட இடத்தை பார்வையிட்டனர். அதைதொடர்ந்து குற்றவாளியை பிடிக்க ரயில்வே போலீசார் தலைமையில் 4 தனிப்படைகள், பரங்கிமலை துணை கமிஷனர் பிரதீப் தலைமையில் 3 தனிப்படைகள் என மொத்தம் 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டு பல்வேறு கோணங்களில் தேடி வருகின்றனர். இதற்கிடையே சம்பவம் குறித்து பரங்கிமலை ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

அந்த விசாரணை குறித்து போலீசார் கூறியதாவது: கல்லூரி மாணவி சத்யாவை ரயில் முன்பு எட்டி உதைத்து கொலை செய்த வாலிபர், ஆலந்தூர் காவலர் குடியிருப்பு அருகே உள்ள ராஜா தெருவை சேர்ந்த தயாளன் என்பவரின் மகன் சதீஷ்(24). தயாளன், பரங்கிமலை காவல் நிலையத்தில் சிறப்பு எஸ்.ஐ.யாக பணியாற்றி 4 ஆண்டுகளுக்கு முன்பு ஓய்வு பெற்றவர். சதீஷிக்கு சரியாக படிப்பு வராததால் அவர் 8ம் வகுப்பு வரை படித்துவிட்டு ஊதாரியாக சுற்றி வந்தது தெரியவந்தது. தயாளன் தற்போது ஓய்வு பெற்ற உதவி கமிஷனர் நடத்தும் செக்யூரிட்டி நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். தந்தையின் ஓய்வூதிய பணத்தில் விலை உயர்ந்த பைக் ஒன்று வாங்கி வைத்து கொண்டு நண்பர்களுடன் சுற்றி வருவதும் விசாரணையில் தெரியவந்தது.

சதீஷ் வசித்து வரும் வீட்டின் அருகே தான் காவலர் குடியிருப்பு உள்ளது. இதனால் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பே சத்யா பள்ளியில் படிக்கும் போதே சத்யாவை பின் தொடர்ந்து வந்துள்ளார். நீண்ட போராட்டத்துக்கு பிறகு சத்யாவின் தோழிகள் உதவியுடன் சத்யாவின் செல்போன் எண்ணை வாங்கியுள்ளார். அதன் மூலம் சத்யாவுக்கு தனது காதலை சதீஷ் கூறியுள்ளார். அதை சத்யா முதலில் ஏற்கவில்லை. ஆனாலும் சதீஷ் தொடர்ந்து சத்யாவை காதலிக்க சொல்லி தொந்தரவு தந்து வந்துள்ளார். ஒரு கட்டத்தில் பள்ளி படிப்பு முடித்த சத்யாவை அவரது பெற்றோர் தி.நகரில் உள்ள ஜெயின் கல்லூரியில் சேர்த்தனர்.

இதனால் சத்யா தினமும் கல்லூரிக்கு தனியாக சென்று வந்தார். இதை தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்ட சதீஷ் தினமும் சத்யா ஆலந்தூர் காவல் குடியிருப்பில் இருந்து பரங்கிமலை நிலையம் செல்லும்போது பின் தொடர்ந்து வந்து நேரில் தனது காதலை தெரிவித்துள்ளார். பல ஆண்டுகளாக பின் தொடர்ந்து வந்ததால் சதீஷின் காதலை சத்யா ஏற்றுக்கொண்டார். இதனால் சதீஷ் தினமும் பரங்கிமலை ரயில் நிலையத்தில் தனது காதலி சத்யாவை சந்தித்து பேசி வந்துள்ளார். சில நேரங்களில் சதீஷ் தனது பைக்கில் தி.நகரில் உள்ள கல்லூரிக்கும் அழைத்து சென்று விட்டுவிட்டு மீண்டும் தனது பைக்கிலேயே அழைத்து வந்துள்ளார். இதுபோல் பல நேரங்களில் இருவரும் பைக்கில் ஒன்றாக சுற்றிவந்துள்ளார்.

இது சத்யாவின் தாய் ராமலட்சுமிக்கு தெரியவந்தது. உடனே தனது மகளை கண்டித்துள்ளார். ஆனாலும் சத்யா தனது காதலன் சதீஷ் உடன் சுற்றுவதை நிறுத்தவில்லை. ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த சத்யாவின் பெற்றோர் இனி கல்லூரிக்கு செல்ல வேண்டாம் என்று கூறியும், காதல் விவகாரம் நமது குடும்பத்திற்கு ஏற்றது இல்லை. இனி தவறு செய்தால் நாங்கள் தான் சாக வேண்டும் என்று கூறி சத்யாவை கண்டித்துள்ளனர். அதன் பிறகு சத்யா தனது காதலன் சதீஷ் உடனான நட்பை படிப்படியாக நிறுத்தியுள்ளார். போன் பேசுவதை முதலில் நிறுத்தியுள்ளார். மெசேஜ் அனுப்புவதை நிறுத்தியுள்ளார். வீட்டில் இருந்து ரயில் நிலையம் வரை பெற்றோர்களில் யாராவது ஒருவர் சத்யாவை ரயில் ஏற்றுவதும், பிறகு கல்லூரி முடிந்து வரும் போது ரயில் நிலையத்தில் இருந்து வீட்டிற்கும் அழைத்து வருவதுமாக இருந்துள்ளனர். இதனால் சதீஷ் தனது காதலியை நேரில் பார்த்து பேச வாய்ப்பு கிடைக்கவில்லை. சத்யாவின் செல்போனும் பெற்றோர் வாங்கி வைத்து கொண்டனர்.

இதனால் ஆத்திரமடைந்த சதீஷ் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு சத்யா படிக்கும் கல்லூரிக்குள் சென்று ‘என்னிடம் ஏன் பேச மறுக்கிறாய்... நான் உன்னை உயிருக்கு உயிராக காதலிக்கிறேன். நீ இல்லை என்றால் நான் இல்லை’ என்று கூறி தகராறு செய்துள்ளார். இதுகுறித்து கல்லூரி நிர்வாகம், சத்யாவின் பெற்றோருக்கு தகவல் அளித்தனர். அதன்படி சத்யாவின் பெற்றோர் மாம்பலம் காவல் நிலையத்தில் தனது மகளை பின் தொடர்ந்து தொந்தரவு செய்து வருவதாக சதீஷ் மீது புகார் அளித்தனர். அந்த புகாரின் படி போலீசார் சதீஷ் மற்றும் அவரது பெற்றோரை நேரில் அழைத்து ‘இனி சத்யாவை தொந்தரவு செய்ய மாட்டேன்’ என்று கடிதம் எழுதி வாங்கி அனுப்பி வைத்தனர்.

ஆனாலும் சதீஷ் தனது காதலியை விடாமல் பின் தொடர்ந்து வந்துள்ளார். ஒரு கட்டத்தில் சத்யாவும் தனது காதலனை விட்டுவிட்டு பெற்றோர் சொல்வதை கேட்டு நடந்து வந்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையே சத்யாவுக்கு அவரது பெற்றோர் வரன் பார்த்து வந்துள்ளனர். பிறகு வசதியான குடும்பத்தை சேர்ந்த இன்ஜினியருக்கு சத்யாவை பேசி முடித்ததாக கூறப்படுகிறது. இதற்காக இரு தருப்பு வீட்டாரும் சந்தித்து பேசி முடிவு செய்துள்ளனர். சத்யாவுக்கு வரும் மாதம் நிச்சயதார்த்தம் செய்ய முடிவு செய்து அதற்கான வேலைகளில் அவரது பெற்றோர் செய்து வந்துள்ளனர்.

இந்த தகவல் காதலன் சதீசுக்கு தெரியவந்தது. உடனே சதீஷ் நேற்று வழக்கம் போல் சத்யா கல்லூரி செல்ல தனது தோழியுடன் பரங்கிமலை ரயில் நிலையத்திற்கு வந்ததும் பின் தொடர்ந்து நேரில் வந்து ‘ என்னை நீ காதலிக்க வில்லையா.. வேறு ஒருவருடன் திருமணம் நிச்சயதார்த்தம் நடக்க போவதாக சொல்றாங்களே அது உண்மையா.... என்று கேட்டுள்ளார். அதற்கு சத்யா ஆமாம் என்று கூறி என்னை இனி  தொந்தரவு செய்யாதே. தொந்தரவு செய்தால் என் அம்மாவிடம் சொல்லிவிடுவேன்’ என்று கூறியுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே ரயில் நிலையத்திலேயே மதியம் அரை மணி நேரம் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

அப்போது சத்யாவுடன் வந்த தோழி சண்டை போடாதே அமைதியாக இரு என்று சத்யாவிடம் கூறி உள்ளார்.  அப்போது ரயில் தாம்பரத்தில் இருந்து பரங்கிமலை ரயில் நிலையத்திற்கு வந்தது. அப்போது சத்யா தனது தோழியுடன் ரயில் ஏற வந்த போது, சதீஷ் ‘என்னையே ஏமாற்றுவியா’ என்று கூறியபடி பின்னால் இருந்து சத்யா முதுகில் ஓங்கி தனது காலால் எட்டி உதைத்ததில் நிலை தடுமாறி ரயில் இன்ஜின் முன்பாக தண்டவாளத்தில் விழுந்தார். இதில் அவர் மீது ரயில் ஏறியதில் சத்யா தலை துண்டித்த நிலையில் உயிரிழந்தார். இவ்வாறு விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

கடந்த 2016ம் ஆண்டு நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் ஐடி மாணவி சுவாதி காதல் விவகாரத்தில் கொடூரமாக ராம்குமார் என்பவரால் அரிவாளால் வெட்டி படுகொலை ெசய்யப்பட்டார். இந்த சம்பவம் தமிழகம் உட்பட நாட்டையே பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கிறது. அதேபோல், மற்றொரு சம்பவமாக பரங்கிமலை ரயில் நிலையத்தில் காதல் விவகாரத்தில் தனது காதலியை ரயில் முன்பு எட்டி உதைத்து காதலனே படுகொலை செய்த சம்பவம் சென்னையில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

* உடன் இருந்த தோழியிடம் போலீஸ் விசாரணை
கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் போது,  சத்யா உடன் அவரது நெருங்கிய தோழி உடன் இருந்தார். அவரிடம் தான் இறந்த சத்யாவின் கல்லூரி புத்தக பை, செல்போனை பயணிகள் எடுத்து கொடுத்தனர். இதையடுத்து சத்யா தற்கொலைக்கு முன்பு காதலன் சதீஷ் கொலை செய்யும் அளவுக்கு என்ன தகராறு செய்தான். என்பது குறித்து பரங்கிமலை ரயில்வே போலீசார் சத்யாவின் தோழியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

* கொலையை நேரில் பார்த்த துப்புரவு பணியாளர்
கல்லூரி மாணவி சத்யாவை காதலன் சதீஷ் காலால் எட்டி உதைத்த சம்பவத்தை பரங்கிமலை ரயில் நிலையத்தில் துப்புரவு பணி செய்து வரும் பிரசன்னகுமாரி என்பவர் நேரில் பார்த்துள்ளார். அதுகுறித்து அவர் கூறுகையில், நான் ரயில் நிலையத்தில் உள்ள கழிவறையை சுத்தம் செய்யும் வேலை செய்து வருகிறேன். வேலை முடிந்து நான் மதியம் 1 மணிக்கு ரயில் நிலைய நடைமேடையில் உள்ள இருக்கையில் அமர்ந்து இருந்தேன். அப்போது ரயில் நிலையத்தில் உள்ள சார்ஜரில் எனது செல்போனில் சார்ஜ் ஏற்றிக் கொண்டிருந்தேன்.

வெகு நேரம் காலேஜ் பெண்ணிடம் அந்த பையன் வாக்குவாதம் செய்து கொண்டிருந்தான். ரயில் வந்ததும் அந்த பெண் ரயிலில் ஏற உடன் வந்த பெண்ணுடன் நின்றபோது, ரயில் அருகே வரும் நேரத்தை பார்த்து அந்த பையன், தனது காலால் வாக்குவாதம் செய்த காலேஜ் பெண்ணை எட்டி உதைத்தான். இதில் அந்த பெண் தண்டவாளத்தில் விழுந்தது. அப்போது ரயில் அவர் மீது மோதியதில் தலைவேறு முண்டம் வேறாக தனித்தனியாக இருந்ததை கண்டு குலை நடுங்கிவிட்டது. ஒரு நிமிடம் இதயமே தூக்கி போட்டுவிட்டது. எட்டி உதைத்த அந்த பையன் அங்கிருந்து ஓடிவிட்டான். இவ்வாறு துப்புரவு பணியாளர் கூறினார்.

* தொடரும் சம்பவத்தால் மன வேதனை
ரயில் முன்பு தள்ளி கொலை செய்யப்பட்ட சத்யா குறித்து நங்கநல்லூர் மகளிர் மன்ற இணை செயலாளர் கோ.ஜமுனாராணி கூறியதாவது: பல இன்னல்களுக்கிடையே பெண்கள் தங்கள் வாழ்க்கை மற்றும் குடும்பத்தின் பொருளாதார நிலையை உயர்த்த இன்றைய காலகட்டத்தில் பாடுபடுகின்றனர். இந்த நிலையில் கல்லூரி மாணவிக்கு நேர்ந்த சம்பவம் மனதை உலுக்குகிறது வேதனை தரும் இதுபோன்ற பெண்களுக்கு எதிரான அவலநிலை கண்டிக்கத்தக்கது. இந்த இழப்பு அப்பெண்ணின் குடும்பத்திற்கு ஈடுசெய்யமுடியாத பேரிடியாகும்,  பெண்களுக்கு எதிரான இச்செயல்களுக்கு அரசாங்கம் கடும் நடவடிக்கையை விரைவில் எடுக்கவேண்டும்.

Tags : Swathi , Another gruesome incident like the murder of engineer Swathi was the murder of a college girl by pushing her in front of a moving train
× RELATED வல்லவன் வகுத்ததடா படத்தில் 5 பேரின் ஹைப்பர்-லிங்க் கதை