×

புளூடூத், இயர் பட்ஸ் மூலம் ரூ.1.25 கோடி தங்கம் பறிமுதல்: துபாயிலிருந்து கடத்தி வந்த 3 பேர் கைது

சென்னை: துபாயிலிருந்து சென்னைக்கு புளூடூத் இயர் பட்ஸ்களுக்குள் மறைத்து வைத்து கடத்தி வந்த ரூ.1.25 கோடி மதிப்புடைய 2.85 கிலோ தங்கத்தை சுங்கத்துறையினர் கைப்பற்றினர். இதுதொடர்பாக, 3 பயணிகள் கைது செய்யப்பட்டனர். துபாயில் இருந்து எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அதில் வந்த பயணிகளை சுங்க அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது, சென்னையை சேர்ந்த 3 பயணிகள் மீது சுங்க அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவர்களை நிறுத்தி சோதனையிட்டனர். அவர்கள் ஆடைகளுக்குள் மறைத்து வைத்திருந்த தங்கத் துண்டுகளை கைப்பற்றினர். மேலும் உடமைகளை பரிசோதித்தபோது, ஏராளமான ‘புளூடூத் இயர் பட்ஸ்கள்’ இருந்தன. சந்தேகத்தின் பெயரில் அந்த இயர் பட்ஸ்களை கழற்றி சோதித்தபோது, அவற்றுக்குள் 64 தங்க அச்சுகள் இருந்தன. சுங்க அதிகாரிகள் அவற்றை பறிமுதல் செய்தனர். இந்த 3 பயணிகளிடமிருந்து மொத்தம் 2.85 கிலோ தங்கம் கைப்பற்றப்பட்டது. அவைகளின் சர்வதேச மதிப்பு ரூ.1.25 கோடி. அவற்றையும் பறிமுதல் செய்து, 3 பேரை கைது செய்தனர்.

Tags : Dubai , 1.25 crore gold seized through bluetooth, ear buds: 3 arrested for smuggling from Dubai
× RELATED கனமழையால் ஐக்கிய அரபு அமீரகத்தில்...