×

ஹிஜாப் தடைக்கு எதிரான வழக்கில் இரு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு: உச்ச நீதிமன்றத்தில் 3வது நீதிபதி விசாரிப்பார்

புதுடெல்லி: கர்நாடகா கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிவதற்கு தடை விதிக்கப்பட்ட வழக்கில், உச்ச நீதிமன்றம் 2 மாறுபட்ட தீர்ப்புகளை வழங்கியுள்ளது. இதனால், இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் 3வது நீதிபதியின் விசாரணைக்கு  செல்கிறது. கர்நாடக மாநிலம், குந்தாப்புராவில் உள்ள கல்லூரியில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வரக்கூடாது என்று அக்கல்லூரி முதல்வர் தடை விதித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து முஸ்லிம் மாணவிகள் போராட்டம் நடத்தினர். இதற்கு போட்டியாக, இந்து மாணவர்கள் காவி துண்டு அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, கர்நாடகா பள்ளி, கல்லூரிகளில் ஹிஜாப் அணிய அரசு தடை விதித்தது. இதை எதிர்த்து மாநிலம் முழுவதும் தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டது.

தடை உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்த கர்நாடக உயர் நீதிமன்றம், ‘கல்வி நிலையங்களில் ஆடை கட்டுப்பாட்டை கொண்டு வர மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது. அதன்படி, கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிய அரசு பிறப்பித்த தடை உத்தரவு செல்லும்,’ என்று தீர்ப்பு அளித்தது. இதை எதிர்த்து அகில இந்திய இஸ்லாமிய தனிநபர் சட்ட வாரியம், இஸ்லாமிய மாணவிகள் உள்ளிட்ட 40க்கும் மேற்பட்டோர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கை உச்ச நீதிமன்றம் விசாரித்தபோது, ‘ஆடை அணிவது அடிப்படை உரிமை. சிலுவை, ருத்ராட்சம் போன்றவையும் மத அடையாளங்கள்தான். அவற்றை அணிந்து கொண்டு மாணவர்கள் கல்வி நிலையங்களுக்கு வரும்போது ஹிஜாபுக்கு மட்டும் ஏன் தடை விதிக்க வேண்டும்,’ என்று மனுதாரர்கள் சார்பில் வாதிடப்பட்டது.

கர்நாடக அரசு தரப்பு முன்வைத்த வாதத்தில், ‘குறிப்பிட்ட உடைகளை உடுத்துவதால் மற்றவர்களுக்கு தாழ்வு மனப்பான்மை ஏற்படக் கூடாது என்பதே சீருடையின் நோக்கம். அந்த அடிப்படையில்தான் கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிந்து வர தடை விதிக்கப்பட்டதே தவிர, மதத்தின் அடிப்படையில் இது செய்யப்படவில்லை. இது,  நடுநிலையான நடவடிக்கை,’ என தெரிவிக்கப்பட்டது.
ஒன்றிய அரசு தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, ‘மதசார்பற்ற கல்வியில் ஆடை என்பது மத அடையாளத்தை வெளிப்படுத்தக் கூடாது,’ என தெரிவித்தார். அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்த நீதிமன்றம், தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது.

இந்நிலையில், இந்த வழக்கில் நீதிபதிகள் ஹேமந்த் குப்தா, சுதன்சு துலியா அமர்வு நேற்று தீர்ப்பு அளித்தது. இந்த தீர்ப்பு அனைவராலும் பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 2 நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கினர். நீதிபதி ஹேமந்த் குப்தா அளித்த தீர்ப்பில், ‘பள்ளி, கல்லூரிகளில் ஆடை வித்தியாசம் இருக்கக் கூடாது. அது சமத்துவமான ஒன்றாகும். ஹிஜாப் அணிந்து வருவது மதிரீதியான பாகுபாட்டை ஏற்படுத்தும். அதனால், இந்த விவகாரத்தில் கர்நாடக அரசு பிறப்பித்த அரசாணையையும், அம்மாநில உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பையும்  உறுதி செய்கிறேன்,’ என தெரிவித்து, ஹிஜாபுக்கு ஆதரவான அனைத்து மேல்முறையீட்டு மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

நீதிபதி சுதன்சு துலியா அளித்துள்ள தீர்ப்பில், ‘ஹிஜாப் அணிந்து வர தடை இல்லை. அது, இஸ்லாமிய பெண்களின் அடிப்படை உரிமை. மத நடைமுறைகளில் தலையிடுவது அவசியமற்றது.  ஹிஜாப் அணிவது அவரவரின் தனிப்பட்ட விருப்பம். இது சம்பந்தப்பட்ட வழக்கில் கர்நாடக உயர் நீதிமன்றம் தவறான வழியை தேர்வு செய்துள்ளது. எனவே, நீதிபதி ஹேமந்த் குப்தாவின் கருத்தில் இருந்து நான் முரண்படுகிறேன். இந்த வழக்கை உச்ச நீதிமன்றத்தின் உயர் அமர்வுக்கு மாற்றுவது குறித்து பரிசீலிக்க தலைமை நீதிபதி அமர்வுக்கு பரிந்துரை செய்கிறேன்,’ என கூறியுள்ளார். இதனால், 2 நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கி இருப்பதால், ஹிஜாப் விவகாரம் நீள்கிறது. அடுத்ததாக, இந்த வழக்கை 3வது நீதிபதியின் விசாரணைக்கு தலைமை நீதிபதி பரிந்துரை செய்வார் என்று தெரிகிறது. மேலும், உச்ச நீதிமன்றத்தின் இந்த மாறுபட்ட உத்தரவால், கர்நாடகாவில் ஹிஜாப் விவகாரத்தில் தற்போதைய நிலையே தொடரும்.

* ‘பள்ளி, கல்லூரிகளில் ஆடை வித்தியாசம் இருக்கக் கூடாது. கல்வி நிலையங்களுக்கு ஹிஜாப் அணிந்து வருவது மதரீதியான பாகுபாட்டை ஏற்படுத்தும்.’ - நீதிபதி ஹேமந்த் குப்தா
* ‘ஹிஜாப் அணிவது இஸ்லாமிய பெண்களின் அடிப்படை உரிமை. அவரவரின் தனிப்பட்ட விருப்பம். மத நடைமுறைகளில் தலையிடுவது அவசியமற்றது.’ - நீதிபதி சுதன்சு துலியா

Tags : Supreme Court , Two judges differ in case against hijab ban: 3rd judge to hear in Supreme Court
× RELATED மின்னணு வாக்கு எந்திரங்களை வாக்கு...