×

அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தலைமையில் வேளாண் வணிகத் துறையால் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்த ஆய்வுக் கூட்டம்.!

சென்னை: வேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அவர்கள் தலைமையில் இன்று (13.10.2022) வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்  துறையால் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. மாண்புமிகு வேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அவர்கள் தலைமையில், இன்று (13.10.2022) கிண்டி, வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறையின் அலுவலகத்தில் துறையால் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.இக்கூட்டத்திற்கு தமிழக அரசின் வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் வேளாண்மை - உழவர் நலத்துறை அரசு செயலர், திரு.சி. சமயமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் முன்னிலை வகித்தார்கள்.

மாண்புமிகு வேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சர் அவர்கள் தனது உரையில், தமிழகத்தில் உள்ள விவசாயிகளின் வாழ்க்கைத்தரம் மேம்பட பல்வேறு பணிகளை அரசு மேற்கொண்டு வருகின்றது.  இதனை கருத்திற் கொண்டுதான் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் வழிகாட்டுதலின்படி,  வேளாண்மை - உழவர் நலத்துறைக்காக கடந்த இரண்டு ஆண்டுகளாக தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு நடைமுறைக்கு வந்துள்ளது. விவசாயிகளின் விளைபொருட்களுக்கு நியாயமான விலை கிடைக்க வழிவகைசெய்தல், விளைபொருட்களை சேமித்து வைத்து விற்பனை செய்ய உதவுதல், மின்னணு வேளாண் சந்தைத்திட்டம் மூலம் சந்தை செயல்பாட்டில் வெளிப்படைத்தன்மையை ஏற்படுத்துதல், உழவர் சந்தையினை உலகச் சந்தைக்கு கொண்டு செல்வதையும், விவசாயிகளை வர்த்தகர்களாக மாற்றுவதையும் மிக முக்கிய குறிக்கோளாக கொண்டு, வேளாண்மை - உழவர் நலத்துறை பணியாற்றி வருகின்றது.

விளைபொருட்களை சேமித்து வைத்து  நல்ல  விலை கிடைக்கப்பெறும் காலங்களில் விற்பனை செய்திட ஏதுவாக மாநிலம் முழுவதும் 284 ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் 510 கிடங்குகள் உள்ளன. இவற்றின் மூலம் 3.75 இலட்சம் மெட்ரிக் டன் விளைபொருட்களை சேமித்து வைக்கலாம். செப்டம்பர் காலம் வரை 14.16 இலட்சம் மெட்ரிக் டன் விளைபொருட்கள் பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளது. பொருளீட்டுக்கடனாக விவசாயிகளுக்கு ரூ.13.45 கோடியும், வணிகர்களுக்கு ரூ.2.65 கோடியும் வழங்கப்பட்டுள்ளது. சந்தை செயல்பாட்டில் வெளிப்படைத்தன்மையை ஏற்படுத்தும் வகையில் 63 ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் மின்னணு வேளாண் சந்தைத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

விவசாயிகள் மற்றும் வணிகர்களுக்கு பொருளீட்டுக் கடன் அதிகமாக வழங்கிடவும், சேமிப்பு கிடங்கினை முழுமையாக பயன்படுத்திடவும், எல்லா விற்பனைக்கூடங்களும் சுத்தமாகவும், சிறந்த முறையில் பராமரிக்கவும் துரித நடவடிக்கை எடுத்திடவும் அறிவுரை வழங்கினார்கள். மேலும், அனைத்து வணிக நிறுவனங்களை முறையாக அழைத்து பேசி விளைபொருட்களை வேளாண்மை விற்பனைக்குழு மூலம் எடுத்திட நடவடிக்கை எடுத்திடவும்,  ஒவ்வொரு கிராமசபை கூட்டத்திலும் இத்துறையின்  சார்பான பயனாளிகளின் பட்டியலை காட்சிப்படுத்திட நடவடிக்கை எடுத்திடவும், மின்னணு வேளாண் சந்தை மூலம் பரிவர்த்தனை செய்யும் விவசாயிகள் மற்றும் வணிகர்களின் எண்ணிக்கையினை அதிகப்படுத்திடவும்,    விவசாயிகள் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களை பயன்படுத்தி நியாயமான விலை கிடைப்பதை உறுதி செய்திடவும் துறை அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்கள்.

சிறு மற்றும் குறு விவசாயிகளை ஒருங்கிணைத்து அவர்கள் கூட்டாக பயிர் சாகுபடி திட்டம் தயாரித்து அதற்கு தேவையான இடுப்பொருட்களை மலிவு விலையில் பெற்று உற்பத்தி செய்யும் விளைபொருட்களை ஒருங்கிணைத்து நல்ல விலைக்கு விற்பனை செய்திடவும் மேலும் அதிக வருமானம் பெறுவதற்கு விளைப்பொருட்களை மதிப்பு கூட்டி விற்பனை செய்வதற்கும், 381 உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் உருவாக்கப்பட்டுள்ளது.  இதனை செயல்படுத்தும் விதமாக ஆதார நிறுவனங்கள் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு வணிக திட்டம் தயாரித்து அவர்கள் விளைபொருட்களை மதிப்பு கூட்டி விற்பனை செய்வதற்கும், உள்ளூர், மாநில, தேசிய மற்றும் சர்வதேச சந்தைகளில் விற்பனை செய்வதற்கும் வழிவகை செய்ய வேண்டும் என அறிவுறுத்தினார்கள்.

உழவர் உற்பத்தியாளர் அமைப்புகளை திறமையான நிறுவனமாக உருவாக்கிட திறன் மேம்பாட்டு பயிற்சிக்கு ஏற்பாடு செய்திடவும் அறிவுரை வழங்கினார்கள். மாநிலத்தில் உணவு பதப்படுத்துதலை ஊக்குவிக்கும் பொருட்டு அமைப்பு சாரா உணவுப்பதப்படுத்தும் குறு நிறுவனங்களை அமைக்கவும், மேம்படுத்தவும் “பாரத பிரதமர் உணவுப்பதப்படுத்தும் குறு நிறுவனங்களுக்கான முறைப்படுத்தும் திட்டம்” ஒன்றிய அரசு, மாநில அரசின் நிதி பங்களிப்புடன் தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. 3942 நபர்களுக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டு அதில் 1140 நபர்களுக்கு ரூ.30.03 கோடி கடனுதவி அளிக்கப்பட்டுள்ளது.  

மீதமுள்ள இலக்குகளை துரிதமாக நிறைவேற்றிட மாண்புமிகு அமைச்சர் அவர்கள் துறை அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்கள். கிராமப்புறங்களில் தேவைப்படும் சேமிப்புக் கிடங்குகள், குளிர்பதனக் கிடங்குகள், சிப்பம் கட்டும் வசதிகள், தரம் பிரிப்பு வசதிகள் போன்றவற்றை வேளாண் கட்டமைப்பு நிதி (Agri Infrastructure Fund) மூலம் தனியார் நிறுவனங்கள், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களின் கூட்டுறவு சங்கங்கள் மூலம்  உருவாக்கிடும் பொருட்டு வங்கிகளில் பெறப்படும் ரூ.2 கோடி வரையிலான கடன் மீது 7 ஆண்டுகளுக்கு 3 சதவீத வட்டி மானியம் வழங்கப்படுகின்றது.

இதுவரை, ரூ.245.93 கோடி  706 நபர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. விவசாயிகள் தங்கள் விளைபொருட்களான காய், கனிகளை இடைத்தரகர்கள் இல்லாமல் நேரடியாக நுகர்வோருக்கு விற்பனை செய்யும் வகையில் தற்போது தமிழ்நாட்டில் 181 உழவர் சந்தைகள் இயங்கி வருகின்றன.  உழவர் சந்தைகளில் வரத்தினை அதிகரித்திட  தோட்டக்கலைத் துறையும், வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிக துறையும் இணைந்து தேவையான நடவடிக்கைகளை எடுத்திட அறிவுறுத்தினார்கள்.

அறுவடைக்குப்பின் ஏற்படும் இழப்பினை குறைக்கவும், விவசாயிகளை பெரும் சந்தைகள், பதப்படுத்துவோர் மற்றும் நுகர்வோர்களுடன் ஒருங்கிணைக்கவும், காய்கறிகள், பழங்கள் மற்றும் பிற அழுகும் பொருட்களுக்கான விநியோக தொடர் மேலாண்மை திட்டத்தினை சிறப்பாக செயல்படுத்திடவும், 187    குளிர்பதன கிடங்குகளை விவசாயிகள் மற்றும் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் சீரிய முறையில் பயன்படுத்திட அறிவுறுத்தினார்கள். இந்த ஆய்வுக் கூட்டத்தில் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையின் மாவட்ட வேளாண் துணை இயக்குநர்கள் மற்றும் விற்பனைக்குழு செயலாளர்கள் கலந்து கொண்டனர். வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை இயக்குநர் முனைவர்.ச.நடராஜன், இ.ஆ.ப., அவர்கள் நன்றியுரை வழங்கினார்கள்.

Tags : Minister ,M. R.R. K. ,Department of Agriculture ,Pannerisselvam , Minister MRK Panneerselvam chaired a review meeting on the projects implemented by the Department of Agribusiness.
× RELATED காரைக்கால் மாவட்டத்தில் உளுந்து...