ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்: பழநி நகராட்சி நடவடிக்கை

பழநி: பழநி உழவர் சந்தை முன்பிருந்த கடைகளை நகராட்சி அதிகாரிகள் அகற்றினர். திண்டுக்கல் மாவட்டம், பழநி உழவர் சந்தையில் 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்களது விளைபொருட்களை கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர். நாளொன்றிற்கு சுமார் 12 டன் காய்கறிகள் விற்பனை செய்யப்படுகின்றன.

இந்நிலையில் உழவர் சந்தைக்கு அதிகாலையிலேயே செல்லும் வியாபாரிகள் சிலர் குறைந்த விலைக்கு காய்கறிகளை வாங்கி, அதனையே உழவர் சந்தைக்கு வெளியில் கடைகள் அமைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாக புகார் எழுந்தது. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்படுதாகவும், உழவர் சந்தைக்கு வெளியில் கடைகள் அமைப்பதால் போக்குவரத்து பாதிக்கப்படுவதாகவும் கூறி உழவர் சந்தை விவசாயிகள் அண்மையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் உழவர் சந்தை முன்பிருந்த கடைகளை அகற்ற வேண்டுமென ஈஸ்வரன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் ஆக்கிரமிப்புகளை அகற்ற உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. இதனைத்தொடர்ந்து நேற்று நகராட்சி அதிகாரிகள் உழவர் சந்தையின் முன்பு ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ள கடைகளை அகற்றினர். மீண்டும் ஆக்கிரமிப்பு செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென அதிகாரிகள் எச்சரித்து விட்டு சென்றனர்.

Related Stories: