×

கட்சியை காப்பாற்றும் வல்லமை ஸ்டாலினுக்கு மட்டுமே உள்ளது: அமைச்சர் துரைமுருகன் புகழாரம்

பெரம்பூர்: சென்னை வேப்பேரி, பெரியார் திடலில் நேற்றிரவு சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில் வியர்வைக்கு வெகுமதி எனும் பெயரில் பாராட்டு விழா நடைபெற்றது. இதில், திமுக மற்றும் கொள்கைகளை காப்பாற்றும் வல்லமை ஸ்டாலினுக்கு மட்டுமே உள்ளது என அமைச்சர் துரைமுருகன் புகழ்ந்து பேசினார். திமுகவின் தலைவராக 2வது முறை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டதை பாராட்டு தெரிவிக்கும் வகையில், ‘வியர்வைக்கு வெகுமதி‘ என்ற தலைப்பில் நேற்றிரவு சென்னை வேப்பேரி, பெரியார் திடலில் சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது. இதில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, பி.கே.சேகர்பாபு, தயாநிதி மாறன் எம்பி, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா உள்பட பலர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் அமைச்சர் பொன்முடி பேசுகையில், அரசு பேருந்தில் பெண்கள் இலவச பயணம் செய்வது குறித்து அண்மையில் ஓசி என பேசியது சர்ச்சையாகியது. இதுபோல் பேசவேண்டாம் என முதல்வர் அறிவுறுத்தியுள்ளார். இதில் யார் மனதாவது புண்பட்டிருந்தால் வருந்துகிறேன்.

தற்போது வாயா, போயா வார்த்தையை சொல்லவே பயமாக இருக்கிறது. நம்மை பாஜ டார்கெட் செய்து தாக்கி கொண்டிருக்கிறார்கள். தலைவர் ஆட்சியில் வேறு எதை வைத்து, அவர்கள் அரசியல் செய்ய முடியும் என்று தெரிவித்தார். பின்னர் அமைச்சர் துரைமுருகன் பேசுகையில், திமுகவில் 2வது முறையாக தலைவர், பொது செயலாளராக அதே நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவது ஆச்சரியம்தான். ஒரு கோடி உறுப்பினர்களை வைத்துள்ள கட்சி திமுக. எவ்வித பிரச்னையும் இன்றி, ஒருவராக தலைவராக மீண்டும் தேர்வாவது சாதாரண விஷயம் இல்லை. கட்சியையும் கொள்கையையும் சேர்த்து காப்பாற்றும் வல்லமை அண்ணா, கலைஞருக்கு பிறகு மு.க.ஸ்டாலினுக்கு மட்டுமே உள்ளது. திமுகவின் பொது செயலாளராக அண்ணா, நாவலர், பேராசியருக்கு பிறகு, நான் உட்காருவதில் பயம். அவர்கள் கட்டிய கோபுரத்தில், நான் கொட்டிய செங்கல்லாக இருக்கிறேன். நிச்சயம் கோபுரமாக முயற்சிப்பேன் என்று பேசினார். திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி பேசுகையில், திமுகவின் தலைவராக மு.க.ஸ்டாலின் வியர்வை மட்டுமல்ல, ரத்தமும் சிந்தித்தான் வந்துள்ளார்.

கடந்த 44 ஆண்டுகளுக்கு முன் மிசாவில் கைதாகி, சிறையில் ரத்தம் சொட்டும் நிலையில் இருந்த ஸ்டாலினின் கரத்தை பிடித்தோம். அந்த கரத்தை இன்றுவரை பிடித்து கொண்டிருக்கிறோம். திமுக ஆட்சிமீது குறை சொல்ல எதுவும் இல்லை. இதனால் மிசாவில் ஸ்டாலின் கைதாகவில்லை என அரைவேக்காட்டு அண்ணாமலை கூறி வருகிறார். தமிழகத்தில் பாஜாவுக்கு சரக்கு இல்லாததால், வேடிக்கையாக பேசுவதைக்கூட விஷமத்தனமாக, சிண்டு முடியும் வேலையை செய்து வருகின்றனர். கலைஞர் மறைவுக்கு பிறகு திமுகவில் வெற்றிடமாகும் என சிலர் நினைத்தனர். திமுக தலைவராக ஸ்டாலின் பொறுப்பேற்றதால், தற்போது வெற்றிடம் இந்தியாவுக்கே காற்றிடமாக மாறியிருக்கிறது. ஆட்சி, கட்சி என்ற சக்கரத்தை லாவகமாக ஓட்டக்கூடியவர் ஸ்டாலின். தமிழகத்தில் எதிர்க்கட்சி என்பது பெயர்தான். ஆனால், அங்கு யாருக்கு யார் எதிர்க்கட்சி என்று தெரியாமலே உள்ளனர். கோஷ்டி மோதலும் நீதிமன்ற வாசலிலும்தான் அவர்கள் பழியாக கிடக்கின்றனர். இது பதவிக்காக கூட்டிய கூட்டணி அல்ல, இது கொள்கைக்காக கூட்டிய கூட்டணி. இதை நெருங்க நினைத்தால் காணாமல் போய்விடுவீர்கள் என கி.வீரமணி பேசினார்.

Tags : Stalin ,Minister ,Duraimurugan , Only Stalin has the power to save the party: Minister Duraimurugan eulogy
× RELATED வாக்குச்சாவடி முகவர்கள் விழிப்புடன்...