×

ஆங்கிலேயர் ஆட்சிக்கால கட்டிடத்தில் இயங்குகிறது குலசை ஆரம்ப சுகாதார நிலையம் தரம் உயர்த்தப்படுமா?.. அனைத்து வசதிகளுடன் புதிய கட்டிடம் கட்ட கோரிக்கை

உடன்குடி: ஆங்கிலேயர் ஆட்சிக் கால கட்டிடத்தில் இயங்கும் குலசேகரன்பட்டினம் ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயர்த்தி புதிய கட்டிடம் கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பண்டைய காலத்தில் இயற்கை துறைமுகமாக குலசேகரன்பட்டினம் விளங்கியது. பண்டமாற்று முறை மூலம் ஏற்றுமதி, இறக்குமதி நடந்து வந்தது. இதன் மூலம் இலங்கை, பர்மா, சிங்கப்பூர் என பல்வேறு வெளிநாடுகளுக்கு படகு, கட்டுமரம், பாய்மரப்படகு மூலம் தொழில் செய்து வந்தனர்.

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில், அதாவது 1896ம் ஆண்டில் காவல் நிலையம், சீனி ஆலை, ரயில் போக்குவரத்து, சுங்கத்துறை அலுவலகம் என பல்வேறு துறை அலுவலகங்கள் இங்கு செயல்பட்டு வந்தன. அந்த காலக்கட்டத்தில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் குலசேகரன்பட்டினத்தில் அரசு மருத்துவமனை அமைக்கப்பட்டது. கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு வரை அரசு மருத்துவமனையாக இயங்கி வந்த போது பிரசவ வார்டு, பிரேத பரிசோதனை அறை என பல்வேறு வசதிகள் இருந்தது. அப்போது குலசேகரன்பட்டினம், மெஞ்ஞானபுரம், தட்டார்மடம் ஆகிய போலீஸ் ஸ்டேஷன் எல்லைகளில் நடக்கும் உயிரிழப்புகளுக்கு குலசேகரன்பட்டினத்தில் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வந்தது.

இதற்கான மருத்துவர்களும் அப்போது இங்கு பணியாற்றினர். ஆனால் நாளடைவில் தரம் குறைக்கப்பட்டு குலசேகரன்பட்டினம் ஆரம்ப சுகாதார நிலையமாக மாற்றப்பட்டது. எனினும் குலசேகரன்பட்டினம், கல்லாமொழி, மணப்பாடு, ஆதியாக்குறிச்சி, மாதவன்குறிச்சி, சிறுநாடார்குடியிருப்பு, வெங்கட்ராமானுஜபுரம், கொட்டங்காடு உள்ளிட்ட பல பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள், கர்ப்பிணிகள் சிகிச்சை பெறவும், மருத்துவ ஆலோசனைகள் பெறவும் குலசேகரன்பட்டினம் ஆரம்ப சுகாதார நிலையம் வந்து செல்கின்றனர்.

தற்போது இந்த  ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடங்கள் மிகவும் சிதிலமடைந்த நிலையில், எப்போது விழும் என்ற நிலையிலும் காட்சியளிக்கின்றன. மேலும் உடை மரங்கள் அடர்ந்து வளர்ந்து காடுபோல் காணப்படுகிறது. அரசு மருத்துவமனையின் உள்ளே நோயாளிகள் பயன்படுத்தும் வகையில் உள்ள குடிநீர் தொட்டி காட்சிப்பொருளாகவே உள்ளது. ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சை பெற வரும் நோயாளிகள் மட்டுமின்றி இங்கு பணிபுரிபவர்களும் ஒருவித அச்சத்துடன் எப்போது எது நடக்குமோ? என்ற பீதியிலேயே பணியாற்றி வருகின்றனர்.

லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்ளும் தசரா திருவிழாவிற்கு பிரசித்தி பெற்ற முத்தாரம்மன் கோயில் அருகில் அமைந்திருக்கும் நிலையில் இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தை அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும். சிதிலமடைந்த கட்டிடங்களை இடித்து அகற்றிவிட்டு புதிய கட்டிடங்கள் கட்ட வேண்டும் என்பதே இப்பகுதி மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் நீண்டகால கோரிக்கையாக இருந்து வருகிறது.

குலசேகரன்பட்டினத்தை சுற்றித் தான் அனல்மின் நிலையம், துறைமுகம், ராக்கெட் ஏவுதளம் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. ஆனால் இங்கு அவசர சிகிச்சைக்கான மருத்துவ வசதி கேள்விக்குறியாகத் தான் உள்ளது. எனவே   ஆரம்ப சுகாதார நிலையத்தின் தரத்ைத உயர்த்தி 24 மணி நேரமும் மருத்துவர்கள் தங்கியிருந்து அவசர கால சிகிச்சை அளிக்கும் வகையில் தற்போது இருக்கும் இதே இடத்திலேயே அனைத்து வசதிகளுடன் புதிய மருத்துவமனை கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதுகுறித்து குலசேகரன்பட்டினம் பஞ்சாயத்து தலைவர் சொர்ணபிரியா துரை கூறுகை யில்,குல சேகரன்பட்டினம் ஆரம்ப சுகாதார நிலை யத்தை அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்துவதற்கு பஞ்சாயத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.  குலசேகரன்பட்டினத்தில் இருந்து 2 கிமீ தொலைவில்தான் அனல்மின் நிலையம், துறைமுகமும், 3 கிமீ தொலைவில் ராக்கெட் ஏவுதளமும் அமைக்கப்படுகிறது. ஆனால் குலசேகரன்பட்டினத்தில் மருத்துவ வசதிகள் ஏதும் இல்லை. கிழக்கு கடற்கரை சாலையில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. அவ்வப்போது விபத்துகள் ஏற்படுகிறது. அவசர முதலுதவி சிகிச்சை செய்யக் கூட மருத்துவர்களோ, சிகிச்சை அளிக்கும் வகையில் எவ்வித மருத்துவ வசதிகளோ இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் இல்லை.

எனவே புதிய கட்டிடங்களை இதே இடத்தில் கட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தை அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

‘‘25 படுக்கை வசதிகள்
பஞ். துணை தலைவர் வக்கீல் கணேசன் கூறுகையில், முற்காலத்தில் வியாபாரத்தில் புகழ்பெற்று விளங்கிய குலசேகரன்பட்டினத்தில் அடிப்படை தேவையான மருத்துவ வசதி குறைவுதான். பழமையான கட்டிடத்தில் இயங்கும் ஆரம்ப சுகாதார நிலையத்தின் கட்டிடங்கள் அனைத்தும் ஆங்கிலேயர்கள் ஆட்சியில் கட்டப்பட்டவை. இந்த கட்டிடங்களால் விபரீதம் நிகழும் முன் அவற்றை அகற்றிவிட்டு புதிய கட்டிடங்கள் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். நடந்து முடிந்து தசரா திருவிழாவின் போது கூட ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடம் சிதிலமடைந்து இருப்பதால் அரசு பிற்படுத்தப்பட்டோர் மாணவர் விடுதியில் 10 படுக்கை வசதிகள் கொண்ட தற்காலிக மருத்துவமனை ஏற்படுத்தி சிகிச்சை அளிக்கப்பட்டது. எனவே அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்தி 25 படுக்கை வசதிகள் கொண்ட அரசு மருத்துவமனையாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

‘‘குலசேகரன்பட்டினத்தை சுற்றித்தான் அனல்மின் நிலையம்,  துறைமுகம், ராக்கெட் ஏவுதளம் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.  ஆனால் இங்கு அவசர சிகிச்சைக்கான மருத்துவ வசதியோ கேள்விக்குறியாகத் தான் உள்ளது

Tags : English Rural Building ,Khulasa Initial Health Salon , British rule building, Kulasai Primary Health Centre, new building with all facilities
× RELATED விவிபேட் சீட்டு வழக்கு: விசாரணைக்கு ஏற்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு