யு மும்பாவுடன் இன்று மோதல்: வெற்றி கணக்கை தொடங்குமா தமிழ்தலைவாஸ்?

பெங்களூரு: 12 அணிகள் பங்கேற்றுள்ள 9வது சீசன் புரோ கபடி லீக் தொடர் பெங்களூருவில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த 14வது லீக் போட்டியில் பெங்கால் வாரியர்ஸ் 42-33 என்ற புள்ளி கணக்கில் பெங்களூரு புல்ஸ் அணியை வீழ்த்தியது. முதல் 2 போட்டியிலும் வென்றிருந்த பெங்களூரு நேற்று முதல் தோல்வியை சந்தித்தது. பெங்கால் 2வது வெற்றியை ருசித்தது. தொடர்ந்து நடந்த மற்றொரு போட்டியில் நடப்பு சாம்பியன் தபாங் டெல்லி-உ.பி.யோத்தா மோதின. முதல்பாதியில் 25-19 என உ.பி. முன்னிலை பெற்றிருந்த நிலையில் 2வது பாதியில் டெல்லி கை ஓங்கியது. கடைசிவரை த்ரிலாக நடந்த இந்த ஆட்டத்தில் 44-42 என டெல்லி வெற்றி பெற்றது.

ஹாட்ரிக் வெற்றி பெற்றுள்ள டெல்லி புள்ளிபட்டியலில் முதல் இடத்தில் நீடிக்கிறது. இன்று 3 போட்டிகள் நடக்கிறது. இரவு 7.30 மணிக்கு தமிழ் தலைவாஸ்-யு மும்பா மோதுகின்றன. தமிழ்தலைவாஸ் முதல் போட்டியில், குஜராத்திடம் டிரா செய்த நிலையில் 2வது ஆட்டத்தில் அரியானாவிடம் தோல்வி அடைந்தது. இன்று வெற்றிக்கணக்கை தொடங்குமா என்ற எதிர்பார்ப்பு உள்ளது. கேப்டன் பவன்குமார், முதல் ஆட்டத்திலேயே முழங்காலில் காயம் அடைந்து பாதியில் வெளியேறினார். அவர் குணமாக ஒரு சில வாரங்கள் ஆகும். இதனால் தமிழ்தலைவாஸ் அணிக்கு பின்னடைவாக அமைந்துள்ளது. இரவு 8.30 மணிக்கு அரியானா ஸ்டீலர்ஸ்-ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், 9.30 மணிக்கு குஜராத் -புனேரி பால்டன் அணிகள் மோதுகின்றன.

Related Stories: