×

பப்ஜி, பிரீ பயர் போன்ற தடை செய்யப்பட்ட விளையாட்டுகளுக்கு குழந்தைகள் அடிமையாவது குறித்து நீதிபதிகள் வேதனை..!

மதுரை: பப்ஜி, பிரீ பயர் போன்ற தடை செய்யப்பட்ட விளையாட்டுகளுக்கு குழந்தைகள் அடிமையாவது குறித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் வேதனை தெரிவித்துள்ளனர். இந்தியாவில் தடை செய்யப்பட்ட பப்ஜி, பிரீ பயர் விளையாட்டுகள் தொடர்ந்து இன்று வரை இளைஞர்களால் விளையாடப்பட்டு வருகிறது. குறிப்பாக கடந்த மாதம் கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரீ பயர் விளையாடிய ஒரு பெண் ஆண் நண்பருடன் பழக்கம் ஏற்பட்டு கடத்தப்பட்டார் என்ற ஒரு வழக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

அந்த வழக்கில் பிரீ பயர் விளையாட்டு என்பது தடை செய்யப்பட்ட ஒன்று அது எவ்வாறு விளையாடப்படுகிறது? என்று நீதிபதிகள் பல்வேறு கேள்விகளை எழுப்பியிருந்தனர். அது VPN ஆப் மூலம் தொடர்ந்து பதிவிறக்கம் செய்யப்பட்டு விளையாடப்பட்டு வருகிறது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனை தொடர்ந்து நீதிமன்றம் இன்று தாமாக ஒரு வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. இந்த வழக்கு நீதிபதி மகாதேவன் அடைங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது நீதிபதிகள் VPN ஆப் என்பது குறிப்பிட்ட ஒரு பயன்பாட்டுக்காக உள்ளது.

தொடர்ந்து இது எவ்வாறு அனைவராலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த ஆப்பை பயன்படுத்தி பல்வேறு சட்ட விரோதமான நிகழ்வுகள் நடைபெறுவதாக கூறப்படுகிறது. எனவே இதை தடை செய்யப்பட எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? மேலும் இது போன்ற ஆப்களை பயன்படுத்துவது குறித்து யூடியூப் மற்றும் கூகுள்களில் பயன்படுத்துவது குறித்து விரிவான செயல்முறை விளக்கங்களும் கொடுக்கப்பட்டுள்ளது. எனவே இந்த வழக்கில் யூடியூப் நிறுவனம் மற்றும் கூகுள் நிறுவனங்களை எதிர்மனுதாரராக நீதிபதிகள் சேர்த்திருந்தனர். குறிப்பாக நீதிபதிகள் பல்வேறு கருத்துகளை இந்த வழக்கில் தற்போது தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக இளைஞர்கள் சுதந்திரமாக இருக்கக்கூடியவர்கள், ஆனால் தற்போது இது போன்ற விளையாட்டுக்களால் அவர்கள் முடக்கப்பட்டுள்ளனர். இளைஞர்கள் முடக்கப்பட்டால் எதிர்கால இந்தியா பாதிக்கப்படும். எனவே இது தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? என்பது குறித்து நீதிபதி கேள்வி எழுப்பினார். அப்போது தமிழக அரசு சார்பாக ஆஜரான மூத்த வழக்கறிஞர்; தமிழக அரசு ஆன்லைன் ரம்மிக்களை முற்றிலும் தடை செய்யும் விதமாக கடந்த வாரம் சட்டமன்றத்தில் சட்டம் கொண்டுவரப்பட்டு தடை செய்யப்பட்டுள்ளது.

எனவே இளைஞர்களை பாதிக்கக்கூடிய இது போன்ற விளையாட்டுகள் மற்றும் ஆப்களுக்கு தடை விதிக்க தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது. இது போன்ற விளையாட்டுகளை தடை செய்ய மத்திய அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். இதனை தொடர்ந்து VPN ஆப்பை எவ்வாறு தடை செய்வது? தடை செய்ய எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? என்பது க்ருய்த்து மத்திய அரசு விரிவான விளக்கம் அளிக்க உத்தரவிட்டனர். அதேபோல வழக்கறிஞர் நீலமேகம் என்பவரை இடையீட்டு மனுதாரராக சேர்த்து அவர் இந்த வழக்கிற்கு தேவையான அனைத்து ஆவணங்களையும் தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளனர்.

குறிப்பாக இந்த VPN மூலமாக ஆன்லைன் விளையாட்டு, ஆன்லைன் ஆப், ஆன்லைன் மோசடிகளை தடை செய்யாமல் இந்த நீதிமன்றம் ஓயாது என்ற ஒரு கருத்தையும் தெரிவித்து இந்த வழக்கில் யூடியூப், கூகுள், மற்றும் மத்திய அரசு விரிவாக பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.


Tags : Judges are worried that children are addicted to banned games like Pubji, Free Fire..!
× RELATED அவசர உதவி எண் “100” செயல்படவில்லை…...