நீலகிரி மலை ரயிலுக்கு உருவாக்கப்பட்ட புதிய டீசல் என்ஜின் குன்னூர் வந்தடைந்தது

குன்னூர்:  இயற்கை எழில் கொஞ்சும் நீலகிரியில் மலை ரயில் கடந்த 1899ம் ஆண்டு, ஜூன் 15ம் தேதி முதல் இயக்கப்பட்டு வருகிறது. நூற்றாண்டை கடந்தும் மலை ரயில், போக்குவரத்து நடைமுறையில் உள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைகளின் அழகை கண்களுக்கு விருந்தாக்கும் இந்த மலை ரயில், மேட்டுப்பாளையம் முதல் உதகை வரை 46.61 கிலோ மீட்டர் தூரம் பயணிக்கிறது.

குறிப்பாக, மேட்டுப்பாளையம் முதல் குன்னூர் இடையே மிகவும் சரிவான பள்ளத்தாக்கு நிறைந்த மலை பாதை என்பதால், தண்டவாளங்களுக்கிடையே பல் சக்கரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதனை பற்றிக்கொண்டே ரயில் பயணிக்கிறது. இதில், பயணிக்க உள்நாட்டு சுற்றுலா பயணிகளை மட்டுமல்லாமல், வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இந்த மலை ரயிலை கடந்த 2005ம் ஆண்டு யுனெஸ்கோ அமைப்பு உலக பாரம்பரிய சின்னமாக அறிவித்தது‌. மேட்டுப்பாளையத்தில் ஊட்டிக்கு அழகிய மலை ரயில் இயக்கப்பட்டு வருகிறது. மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூருக்கு டீசல் மூலம் இயங்கும் நீராவி ரயில் என்ஜின்களும் குன்னூரில் இருந்து ஊட்டிக்கு டீசல் மூலம் இயங்கும் ரயில் என்ஜின்களும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில் மலை ரயிலுக்கு டீசல் மூலம் இயங்கும் நீராவி ரயில் என்ஜினை தயாரிக்கும் பணி தொடங்கியது. மலை ரயில் என்ஜினின் பழமை மாறாமல் புதிய தொழில்நுட்பத்துடன் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட உபகரணங்களுடன் ரூ.9.30 கோடி மதிப்பில் 7 மாதத்தில் புதிய மலை ரெயில் என்ஜின் தயாரிக்கும் பணி நிறைவடைந்தது. அதனை தொடர்ந்து கடந்த 5ம் தேதி திருச்சி பொன்மனை ரயில்வே பணிமனையில் புதிதாக தயாரிக்கப்பட்ட மலை ரயில் என்ஜின் ட்ரெய்லர் வாகனத்தில் ஏற்றப்பட்டு மறுநாள் காலை மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தை வந்தடைந்தது. மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் இருந்து சோதனை ஓட்டம் தொடர்ந்து நடைபெற்று வந்தது.  

இந்நிலையில், நேற்று புதிய என்ஜின் குன்னூர் வரை சோதனை ஓட்டம் நடைபெற்றது. காலை 9 மணியளவில் மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு மதியம் 2 மணியளவில்  குன்னூர் ரயில் நிலையத்திற்கு வெற்றிகரமாக வந்தடைந்தது. புதிய என்ஜினை குன்னூர் ரயில் நிலையத்திற்கு எடுத்து வந்த ரயில்வே ஊழியர்கள் புகைப்படங்கள் எடுத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். தொடர்ந்து மலை ரயில் குன்னூர் பணிமனையில் நிறுத்தப்பட்டது. சுற்றுலா பயணிகளுக்கு விரைவில் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.

Related Stories: