×

வேலூர் சத்துவாச்சாரியில் ஜலகண்ட விநாயகர் கோயிலுக்கு சொந்தமானது கேட்பாரின்றி ஆக்கிரமிப்பில் சிக்கி காணாமல் போன 500 ஆண்டுகள் பழமையான கோயில் திருக்குளம்: கண்டுபிடித்து சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

வேலூர்: வேலூர் சத்துவாச்சாரியில் 500 ஆண்டுகள் பழமையான விநாயகர் திருக்கோயில் குளம் ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் சிக்கி மாயமாகி உள்ளதை மீட்டெடுக்க வேண்டும் என்று பொதுமக்கள், பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழகத்தை பொறுத்தவரை கோயில்களுக்கு சொந்தமான காலியிடங்களும், நீர்நிலைகளுமே அதிகளவில் ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் சிக்கியிருக்கின்றன.

குறிப்பாக இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான கோடிக்கணக்கான மதிப்புள்ள இடங்களும், கட்டிடங்களும் என அசையா சொத்துக்கள் பல ஆண்டுகளாக ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் சிக்கி காணாமல் போயிருக்கின்றன. தற்போது அறநிலையத்துறை படிப்படியாக கோயில் சொத்துக்களை மீட்டெடுத்து வருகிறது. அந்த வகையில் அரக்கோணம் அடுத்த தக்கோலம் அழகுராஜ பெருமாள் கோயில் ஆக்கிரமிப்புகள் ஒட்டுமொத்தமாக அகற்றப்பட்டுள்ளதுடன், அங்கு அகழாய்வு நடத்தி புதிதாக கோயிலை நிர்மாணிக்கவும் அறநிலையத்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

அதேபோல் காவேரிப்பாக்கம் கொங்கணீஸ்வரர் கோயில் ஆக்கிரமிப்புகளையும் அகற்றுவதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்து வருகின்றன. அதேநேரத்தில் அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் வராத பழமையான பல கோயில்களின் நிலங்களும் சொத்துக்களும் கேட்பாரின்றி பலரது பிடியில் சிக்கியுள்ளது. அந்த வகையில் 500 ஆண்டுகளுக்கும் மேல் பழமையான வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோயில் வளாகம் மத்திய தொல்லியல்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. அதேநேரத்தில் அதன் பூஜைகள், திருவிழாக்களை ஜலகண்டேஸ்வரர் கோயில் தரும ஸ்தாபனம் என்ற அறக்கட்டளை நடத்தி வருகிறது.

ஜலகண்டேஸ்வரர் கோயிலின் வரலாற்றை பொறுத்தவரை விஜயநகர பேரரசு காலத்தில் கோயில் ராஜகோபுரம் எதிரில் உள்ள இரண்டு மைதானங்களும் சந்திரகுளம், சிம்ம குளமாகவும் இருந்தவை. கோட்டையின் தென்கிழக்கில் சில நூறு மீட்டர் தொலைவில் சூரிய குளம் இருந்தது. இந்த சூரிய குளம் 40 ஆண்டுகளுக்கு முன்பு வரை நன்னீருடன் மக்கள் பயன்பாட்டில் இருந்து வந்தது. நாளடைவில் சுற்றுப்புற மக்கள் அதில் குப்பைகளை கொட்டி தூர்ந்து போக செய்ததுடன், படிப்படியாக அக்குளமே குடியிருப்புகளாக மாறி, விரல்விட்டு எண்ணக்கூடிய நபர்களின் சொத்தாக மாறி அவர்களுக்கு வாடகை என்ற பெயரில் வருவாயை தந்து கொண்டிருக்கிறது.

அதேபோல் பீஜப்பூர் சுல்தான்களின் படையெடுப்பு காரணமாக கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோயில் மூலவரை மட்டும் காப்பாற்றிய அன்றைய வேலூர் மக்கள் அதை சத்துவாச்சாரி ஈஸ்வரன் கோயில் தெரு ஜலகண்ட விநாயகர் கோயிலில் கொண்டு சென்று மறைத்து வைத்தனர். அப்போது முதல் கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு வரை சாமியில்லா கோயிலாக இருளடைந்து காணப்பட்ட ஜலகண்டேஸ்வரர் கோயில் மூலவர், மக்களின் பல ஆண்டு கால போராட்டங்களுக்கு பிறகு மீண்டும் ஜலகண்ட விநாயகர் கோயிலில் இருந்து மீண்டு 400 ஆண்டுகளுக்கு பிறகு தனது பழைய இருப்பிடத்திற்கு எழுந்தருளினார். இப்போதும் ஜலகண்டேஸ்வரர் கோயில் மூலவர் எழுந்தருளிய தினத்தன்று ஜலகண்ட விநாயகர் கோயிலில் இருந்து ஜலகண்டேஸ்வரர் உற்சவ மூர்த்திகள் அலங்கரித்து ஊர்வலமாக கோட்டை கோயிலுக்கு கொண்டு வரப்படுகிறது.

இத்தகைய சிறப்புமிக்க ஜலகண்ட விநாயகர் கோயில் தற்போது ஒரு கால பூஜையுடன், சிதிலமடைந்து பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இத்தனைக்கும் இக்கோயிலுக்கு மிகப்பெரிய அளவிலான குளமும், காலியிடங்களும் சொந்தமானதாக இருந்தது. தற்போது இந்த குளமும், காலியிடங்களும்தான் காணாமல் போயிருக்கின்றன. குளம் மட்டுமே பல ஏக்கர் விஸ்தீரணம் கொண்டதாக இருந்தது. இந்த குளமும் 50 ஆண்டுகளுக்கு முன்பு வரை அதன் தென்புறம் உள்ள மலையில் இருந்து வரும் ஊற்றுநீரால் நிரம்பிய நிலையில் மக்களின் பயன்பாட்டில் இருந்து வந்துள்ளதை அங்குள்ள பெரியவர்கள் பெருமையுடன் நினைவு கூறுகின்றனர்.

மேலும் அவர்கள் கூறும்போது, ‘இந்த குளத்தில்தான் ஆரம்பத்தில் ஜலகண்ட விநாயகர் உற்சவங்கள், பூஜைகளுக்கு தண்ணீர் எடுத்து செல்லப்படும். இந்த கோயிலும், அதன் குளமும், அதற்கு சொந்தமான காலியிடங்களும் கேட்பாரற்ற நிலையால் இன்று குடியிருப்பு பகுதிகளாகவும், வணிக வளாகங்களாகவும் மாறியிருப்பதுடன், மாற்று மத வழிபாட்டு தலங்களும் ஏற்பட்டு எங்களை வேதனையில் ஆழ்த்தியுள்ளது’ என்றும் அவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

இதுதொடர்பாக ஜலகண்டேஸ்வரர் கோயில் தரும ஸ்தாபன நிர்வாகிகளிடம் கேட்டபோது, ‘அந்த கோயிலும், குளமும், இடமும் ஜலகண்டேஸ்வரர் கோயிலுக்கு உரியதுதான். ஆனாலும், பல ஆண்டுகளுக்கு முன்பாகவே கோயில் குளமும், இடமும் ஆக்கிரமிக்கப்பட்டு வணிக வளாகங்களாகவும், குடியிருப்புகளாகவும் உருவாகியுள்ளது. அவற்றுக்கு பட்டா உட்பட அனைத்தும் வழங்கப்பட்டுள்ளன’ என்றனர்.

இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘அந்த கோயில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இல்லை. ஜலகண்டேஸ்வரர் கோயிலுக்கு சொந்தமானது என்றால், கோயில் தொடர்பான வழக்கு அறநிலையத்துறைக்கு சாதகமாக வந்தால், ஜலகண்டேஸ்வரர் கோயிலுடன் இணைந்த இந்த கோயிலும் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் வரும். அப்போது ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுவதற்கான வாய்ப்புகளும் உருவாகும்’ என்றனர்.

இதுகுறித்து வருவாய்த்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘கோயிலுக்கு சொந்தமான இடத்தை மீட்டெடுப்பதில் தரும ஸ்தாபனமோ அல்லது அறநிலையத்துறையோ நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் இவ்விஷயத்தில் அவர்கள் நழுவினாலும் பிரச்னையில்லை. கோயில் மீது அக்கறை உள்ள மக்கள் கோரிக்கை விடுத்து மனு அளித்தால் வருவாய்த்துறையே ஆக்கிரமிப்பை எடுக்கும்’ என்றனர்.

எனவே, சிதிலமடையும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ள சத்துவாச்சாரி ஜலகண்ட விநாயகர் கோயிலை புனரமைப்பதுடன், கோயிலுக்கு சொந்தமான குளத்தையும், காலியிடங்களையும் ஆக்கிரமிப்பாளர்களை அகற்றி மீட்டெடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வேலூர் சத்துவாச்சாரி மக்கள் மற்றும் பக்தர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

Tags : Jalakanda Vinayagar ,Vellore Sattuvachari ,Thirukulam , Jalakanda Vinayagar Temple, Akramipu, 500 years old temple in Thirukkulam, public demand`
× RELATED வேலூர் சத்துவாச்சாரியில் இருந்து...