×

ஆலந்தூரில் பெட்ரோல் குண்டுவீசி ரவுடிகள் ரகளை வாலிபரை கடத்திய 2 ஆசாமிகள் கைது

ஆலந்தூர்: ஆலந்தூரில் பெட்ரோல் குண்டுவீசி ரவுடிகள் ரகளை செய்த விவகாரத்தில், வாலிபரை கடத்திய ஆசாமிகள் 2 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். ஆலந்தூர் ஆபிரகாம் நகர் பகுதியில் கடந்த 10ம்தேதி இரவு மாஸ்க் அணிந்த 20க்கும் மேற்பட்ட ரவுடிக்கும்பல் பட்டாக்கத்தி மற்றும் ஆயுதங்களுடன் குடியிருப்பு பகுதியில் நுழைந்தனர். அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 5க்கும் மேற்பட்ட பைக்குகளை அடித்து நொறுக்கினர். மேலும் அந்த வழியாக சென்ற நவீன் (20), ஆலந்தூர் ஜின்னா தெரு அபுபக்கர் (20), சபீக் (20) ஆகிய 3 பேரை கத்தியால் வெட்டினர்.  

தகவல் அறிந்து அங்கு சென்ற ரோந்து போலீசார் கும்பலை பிடிக்க முயன்றபோது பெட்ரோல் குண்டை வீசிவிட்டு தப்பி சென்றனர். இதுதொடர்பாக சம்பவ இடத்தில் இருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை கொண்டு  போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, ஆதம்பாக்கம் பகுதியில் ரவுடி நாகூர்மீரான் தலைமையில் ஒரு கோஷ்டியும், ரவுடி ராபின்சன் தலைமையில் ஒரு கோஷ்டியும் கொலை, அடிதடி, கட்டப்பஞ்சாயத்து போன்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததும், ராபின்சன் கோஷ்டியினர் போட்டியின் காரணமாக நாகூர் மீரானை கடந்த ஆண்டு வெட்டி கொலை செய்துள்ளனர். இதற்கு பழிக்குப்பழியாக நாகூர் மீரான் கோஷ்டியினர் ராபின்சனை கொல்ல திட்டமிட்டு வந்துள்ளனர்.

கடந்த இரு நாட்களுக்கு முன் ராபின்சன் தங்கை செரின் மற்றும் அவரது நண்பர் அணில் என்கிற அரவிந்த் என்பவருடன் கிண்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மடுவின்கரையில் உள்ள ஒரு செல்போன் கடையில் ரீசார்ஜ் செய்ய வந்துள்ளார். அங்கு வந்த கிண்டி காவல்நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளி இம்ரான் என்கிற மண்டை இம்ரான் மற்றும் அவரது நண்பர்கள் அரவிந்திடம், எங்கடா ராபின் என்று கேட்டுள்ளனர். அவர் தெரியாது என்றதும் மிரட்டி பைக்கில் கடத்திச்சென்று, மேடவாக்கத்தில் இறக்கிவிட்டு சென்றுள்ளனர்.இதுபற்றி செரின் தனது அண்ணன் ராபின்சனிடம் கூறியுள்ளார்.

இதை தொடர்ந்து ராபின்சன் கூட்டாளிகள் 15க்கும் மேற்பட்டோர் அரவிந்தை கடத்தி  சென்ற   நபர்களை தேடி ஆலந்தூர் ஆபிரகாம் நகர் பகுதிக்கு  பட்டாக்கத்தி மற்றும் பயங்கர ஆயுதங்களுடன் வந்து ரகளையில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்தது. எனவே, பரங்கிமலை போலீசார் தீவிர விசாரணை நடத்தி ரகளையில் ஈடுபட்ட ரவுடிக்கும்பல் 19 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.இந்த வழக்கில் அரவிந்த் என்ற அணிலை கடத்தியதாக கூறப்படும் மண்டை இம்ரான், வீரா (எ) வீரராகவன், ஜெய் (எ) ஜெயக்குமார் ஆகியோரை போலீசார் தேடி வந்தனர்.

இந்நிலையில் அரவிந்த் கடத்தப்பட்ட இடம் கிண்டி காவல்நிலைய எல்லை என்பதால் கிண்டி போலீசாரும் வழக்குபதிவு செய்து கடத்தல் ஆசாமிகளை தேடினர். இந்நிலையில் அரவிந்தை கடத்திய ஆலந்தூர் ஆபிரகாம் நகரைக் சேர்ந்த வீரா (எ) வீரராகவன் (28), தாம்பரம் காந்தி நகரைச் சேர்ந்த ஜெய் (எ) ஜெயக்குமார் (30) ஆகியோரை கிண்டி போலீசார் நேற்று முன்தினம் இரவு தாம்பரத்தில் கைது செய்தனர்.


Tags : Alandur , 2 assailants arrested for abducting a teenager by throwing petrol bombs in Alandur
× RELATED நங்கநல்லூர் வாக்குச்சாவடியில் தேர்தல் அதிகாரி ஆய்வு