×

வாடகை தாய் மூலம் குழந்தை பெற்ற விவகாரம் நயன்தாராவிடம் விசாரிக்க 4 அதிகாரிகள் கொண்ட குழு: விதிகள் மீறியது அம்பலம்

சென்னை: வாடகை தாய் மூலம் இரட்டை குழந்தைகள் பெற்ற விவகாரத்தில் நடிகை நயன்தாராவை விசாரிக்க 4 அதிகாரிகள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. ‘நானும் ரவுடிதான்’ படத்தில் கடந்த 2015ம் ஆண்டு நயன்தாரா நடித்தார். இந்த படத்தை விக்னேஷ் சிவன் இயக்கினார். இந்த படத்தின் படப்பிடிப்பில்தான் நயன்தாராவுக்கும் விக்னேஷ் சிவனுக்கும் இடையே காதல் ஏற்பட்டது. 7 வருடமாக காதலித்து வந்த இவர்கள், லிவிங் டூ கெதர் முறையில் வாழ்ந்து வந்தனர். இந்த ஆண்டு ஜூன் 9ம் தேதி மாமல்லபுரத்தில் உள்ள ஒரு ரிசார்ட்டில் திருமணம் செய்துகொண்டனர். திருமணமாகி 4 மாதங்களே ஆன நிலையில் திடீரென கடந்த 9ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை, தங்களுக்கு இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்திருப்பதாக விக்னேஷ் சிவன் டிவிட்டரில் தெரிவித்தார். இந்த தகவல் ரசிகர்களுக்கும் திரையுலகினருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது. 4 மாதங்களுக்குள் எப்படி நயன்தாராவுக்கு குழந்தை பிறந்தது, நடந்தது என்ன என பலரும் கேள்வி எழுப்பினர்.

இது தொடர்பாக விசாரித்ததில், வாடகை தாய் மூலம் நயன்தாரா குழந்தை பெற்றிருப்பது தெரிய வந்தது. அப்படியென்றால் திருமணத்துக்கு முன்பே கடந்த ஆண்டே, நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்வதற்கான அனைத்து நடைமுறைகளையும் முடித்திருக்கிறார்கள். அதற்கு பிறகுதான் அவர்கள் திருமணமே செய்திருக்கிறார்கள். நயன்தாரா, விக்னேஷ் சிவனின் இந்த செயலுக்கு பல தரப்பிலிருந்தும் கண்டனங்கள் குவிந்து வருகிறது.  மருத்துவ ரீதியாக குழந்தை பெற முடியாதவர்கள்தான் வாடகை தாய் மூலம் குழந்தை பெறலாம் என வாடகை தாய் சட்டம் சொல்கிறது. ஆனால், அந்த சட்டத்தை நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் காற்றில் பறக்க விட்டிருப்பதாக புகார் எழுந்துள்ளது.

இதற்கு முக்கிய காரணம், நயன்தாரா இப்போது அடுத்தடுத்து படங்களில் நடித்து வருகிறார். அத்துடன் ஷாருக்கான் ஜோடியாகவும் ‘ஜவான்’ படம் மூலம் பாலிவுட்டில் அறிமுகம் ஆகிறார். இதனால் இந்த சமயத்தில் குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பாமல், பணம், புகழுக்காக வாடகை தாயை நாடியிருப்பதாக கூறப்படுகிறது. திருமணத்துக்காக மண்டபம் புக் செய்து போல்  திருமணத்துக்கு முன்பே வாடகை தாயை தேர்வு செய்துள்ளனர் என சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் எழுந்துள்ளன. விதிமுறைகளை யெல்லாம் மீறி, வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்வதில் நயன்தாரா, விக்னேஷ் சிவன் அவசரம் காட்டியதற்கு ஒரே காரணம், சினிமா புகழ்தான் என ரசிகர்கள் கூறுகின்றனர்.

இந்த விவகாரம் தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனிடம் கேட்டபோது, ‘இது குறித்து விசாரிக்கப்படும்’ என்றார். இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளதால் நயன்தாரா, விக்னேஷ் சிவனையும் அவர்களுக்கு சிகிச்சை அளித்த மருத்துவமனை நிர்வாகத்தையும் விசாரிக்க 4 அதிகாரிகள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இவர்கள் விசாரணையை தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது.


Tags : Nayanthara , 4-member panel to probe Nayanthara's surrogacy case: Violation of rules exposed
× RELATED நயன்தாரா தயாரித்த ‘கூழாங்கல்’ படத்துக்கு விருது