×

பிரபலங்கள் அதிர்ச்சி பேஸ்புக்கில் கோளாறு பாலோயர்கள் மாயம்: நிறுவனர் ஸூகர்பெர்க்கும் பாதிப்பு

புதுடெல்லி: பேஸ்புக்கில் பிரபலங்களின் கணக்கில் அவர்களை பின்தொடரும் பாலோயர்கள் எண்ணிக்கை திடீரென வெகுவாக குறைந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த கோளாறை சரி செய்வதாக பேஸ்புக் நிறுவனம் கூறி உள்ளது.அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனமாக மெட்டாவின் சமூக வலைதளமான பேஸ்புக்கை உலகெங்கிலும் கோடிக்கணக்கானோர் பயன்படுத்தி வருகின்றனர். இதில், பலதரப்பு பிரபலங்களை ஏராளமானோர் பாலோயர்களாக பின்தொடர்கின்றனர். இந்நிலையில், பல பிரபலங்களின் கணக்கில் அவர்களை பின்தொடருவோரின் எண்ணிக்கை திடீரென குறைந்துள்ளது. பல பின்தொடர்பவர்கள் மாயமாகி இருப்பதாக புகார் எழுந்துள்ளன.

குறிப்பாக, மெட்டா நிறுவனத்தின் நிறுவனரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான மார்க் ஸூகர்பெர்க் கணக்கில் இருந்து 11.9 கோடி பின்தொடருவோர் மாயமாகி உள்ளனர். தற்போது, அவரை பின்தொடர்வோர் எண்ணிக்கை 10 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்துள்ளது. இது குறித்து, வங்கதேச எழுத்தாளர் தஸ்லிமா நஸ்‌ரீன் தனது டிவிட்டர் பதிவில், ‘பேஸ்புக்கில் சுனாமி உருவாகி உள்ளது. இதில் என்னை பின்தொடரும் 9 லட்சம் பேர் அடித்து செல்லப்பட்டுள்ளனர்.

9 ஆயிரம் பேரை மட்டுமே கரையில் விட்டுச்சென்றுள்ளது’ என குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக மெட்டா நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் கூறுகையில், ‘‘இந்த கோளாறு சரி செய்யப்பட்டு வருகிறது. விரைவில் இயல்பு நிலைக்கு கொண்டுவருவதற்காக பணியாற்றி வருகிறோம். சிரமத்திற்கு மன்னிக்கவும்’’ என தெரிவித்துள்ளார்.



Tags : Facebook ,Zuckerberg , Celebs Shock Facebook Glitch Followers Mayhem: Founder Zuckerberg Is Affected
× RELATED பெண்ணை கர்ப்பமாக்கிய எஸ்ஐ அதிரடி சஸ்பெண்ட்