நீரவ் மோடி நாடு கடத்தப்பட்டால் தற்கொலை செய்வார் என சாக்குபோக்கு கூறக்கூடாது: லண்டன் நீதிமன்றம் கண்டிப்பு

லண்டன்: ‘இந்தியாவுக்கு நாடு கடத்தினால், சிறையில் நீரவ் மோடி தற்கொலை செய்து கொள்வார் என சாக்குபோக்கு சொல்லக்கூடாது’ என லண்டன் உயர் நீதிமன்றம் கண்டித்துள்ளது. பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13 ஆயிரம் கோடி கடன் வாங்கி மோசடி செய்த, குஜராத் வைர வியாபாரி நீரவ் மோடி லண்டனில் தஞ்சமடைந்துள்ளார். அங்கு கடந்த 2019ம் ஆண்டு கைது செய்யப்பட்ட அவர் சிறையில் அடைக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து, நீரவ் மோடியை இந்தியாவுக்கு நாடு கடத்தலாம் என லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து நீரவ் மோடி தரப்பில் லண்டன் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்த வழக்கு நீதிபதிகள் ஜெர்மி ஸ்டூவர்ட் ஸ்மித், ராபர்ட் ஜே ஆகியோர் கொண்ட அமர்வில் 2வது நாளாக நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நீரவ் மோடி தரப்பில் ஆஜரான வக்கீல், ‘‘நீரவ் மோடியை, மகாராஷ்டிராவில் உள்ள மும்பை ஆர்தர் சிறையில் அடைக்க இந்திய அரசு ஏற்பாடுகளை செய்துள்ளது. ஆனால் அங்கு நீரவ் மோடியின் பாதுகாப்பை உறுதி செய்ய எந்த உத்தரவாதமும் இல்லை. ஒருவேளை நீரவ் மோடி ஆர்தர் சிறையில் அடைக்கப்பட்டால், ஏற்கனவே மனநலம் பாதிக்கப்பட்டுள்ள அவர் இன்னும் மோசமடைந்து சிறையிலேயே தற்கொலை செய்துக் கொள்ளக் கூடிய வாய்ப்புள்ளது’’ என்றார்.

இதைக் கேட்ட நீதிபதிகள், ‘‘இந்தியா இங்கிலாந்தின் நட்பு நாடு, இந்தியா உடனான நாடு கடத்தும் ஒப்பந்தத்தை இங்கிலாந்து கட்டாயம் மதிக்கிறது. எனவே, இந்திய அரசின் உத்தரவாதங்களை நியாயமான முறையில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும். அதில் ஓட்டைகளை கண்டுபிடிப்பதில் குறியாக இருக்கக் கூடாது. எந்த சாக்குபோக்கையும் சொல்லக் கூடாது. இந்திய அரசு தரும் உத்தரவாதம் போதுமானதாக இல்லை என்பது உங்கள் எண்ணமாக இருக்கலாம். நாங்களும் அதே கண்ணோட்டத்தில் பார்க்க முடியாது. அதே சமயம், இந்தியாவில் நீதித்துறை சுதந்திரமாக இருந்தாலும், நிறைவேற்று அதிகாரம் எப்போதும் சட்டத்தின் ஆட்சியைக் கடைப்பிடிப்பதில்லை என்பதால்தான் அரசின் உத்தரவாதங்களை தீவிரமாக ஆய்வு செய்ய வேண்டி உள்ளது.

இதற்கு முன் பல வழக்குகளில் நாடு கடத்தல் நிராகரிக்கப்பட்ட வரலாறுகளும் உள்ளன’’ என்றனர். இதைக் கேட்ட இந்திய அரசு தரப்பு வக்கீல், ‘‘இந்த வழக்கு இந்தியாவில் மிக முக்கியமான வழக்காக உள்ளது. இந்த விவகாரத்தில் இந்திய அரசு, நீரவ் மோடி மீது பல தரப்பு பார்வையும் இருக்கும். எனவே, சிறையில் நீரவ் மோடிக்கு முழுமையான பாதுகாப்புகளும் வசதிகளும் செய்து தரப்படும்’’ என உறுதி அளித்தார். இதைத் தொடர்ந்து தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது.

Related Stories: