36வது தேசிய விளையாட்டு போட்டி 5வது இடம்பிடித்தது தமிழ்நாடு: 25 தங்கம் வென்று அசத்தல்

அகமதாபாத்: தேசிய விளையாட்டு போட்டித் தொடரில் தமிழகம் 25 தங்கம் உள்பட மொத்தம் 74 பதக்கங்களை கைப்பற்றி 5வது இடம் பிடித்தது. குஜராத் மாநிலத்தில் அகமதாபாத், ராஜ்கோட் உள்பட 6 நகரங்களில் நடைபெற்ற இந்த தொடரில் மாநில, யூனியன் பிரதேச அணிகள் மற்றும் சர்வீசஸ் (ராணுவம்) என மொத்தம் 32 அணிகள் பங்கேற்றன. செப்.27ம் தேதி தொடங்கிய இப்போட்டியில் 8 ஆயிரம் வீரர், வீராங்கனைகள் கலந்துகொண்டு திறமையை வெளிப்படுத்தினர்.

கடைசி நாளான நேற்று  ஆண்கள் வாலிபால் பைனல் கடைசி ஆட்டமாக நடந்தது. அதில் தமிழ்நாடு - கேரளா அணிகள் மோதின. கடும் சவாலாக இருந்த ஆட்டத்தில்  தமிழ்நாடு கடுமையாகப் போராடிய நிலையில், கேரளா 25-23, 28-26, 27-25 என நேர் செட்களில் வென்று தங்கப் பதக்கத்தை கைப்பற்றியது. தமிழ்நாடு வெள்ளிப் பதக்கத்துடன் விடைபெற்றது. முன்னதாக நடந்த 3வது இடத்துக்கான ஆட்டத்தில் அரியானா 3-2 என்ற செட் கணக்கில் குஜராத்தை வீழ்த்தி வெண்கலத்தை வசப்படுத்தியது.

பதக்கப்பட்டியலில் தமிழ்நாடு 25 தங்கம், 22 வெள்ளி, 27 வெண்கலம் என 74 பதக்கங்களுடன் 5 இடத்தை பிடித்தது. நீச்சல் முதல் யோகாசனம் வரை 20 வகையான போட்டிகளில் பங்கேற்ற தமிழ்நாடு, அதிகபட்சமாக தடகளத்தில்  7 தங்கம், 6 வெள்ளி, 5 வெண்கலம் என 18 பதக்கங்களை கைப்பற்றி அசத்தியது. நீச்சல் பிரிவுகளில்  ஒரு தங்கம், 6 வெள்ளி, 3 வெண்கலம் என 10 பதக்கங்களை பெற்றது. ரோலர் விளையாட்டுப் பிரிவிலும் 3 தங்கம் உள்பட 9 பதக்கங்களை தமிழ்நாடு வசப்படுத்தியது.

ராணுவம் முதலிடம்: இந்த தொடரில் அபாரமாக செயல்பட்டு ஆதிக்கம் செலுத்திய சர்வீசஸ் விளையாட்டு கட்டுப்பாட்டு வாரியம் 61 தங்கம், 35 வெள்ளி, 32 வெண்கலத்துடன் மொத்தம் 128 பதக்கங்களை கைப்பற்றி முதல் இடத்தை பிடித்தது. மகராஷ்டிரா  39  தங்கம், 38 வெள்ளி, 63 வெண்கலத்துடன் 140 பதக்கங்களை வென்று 2வது இடத்தையும்,  அரியானா 38 தங்கம் உள்பட 116 பதக்கங்களுடன் 3வது இடத்தையும்,  27 தங்கம் உட்பட 88 பதக்கங்களுடன்  கர்நாடகா 4வது இடத்தையும் பிடித்தன.

Related Stories: