×

இளைஞர் அணி - மாணவர் அணி சார்பில் இந்தி திணிப்பை கண்டித்து 15ம் தேதி தமிழகம் முழுவதும் போராட்டம்: திமுக அறிவிப்பு

சென்னை: இளைஞர் அணி - மாணவர் அணி சார்பில் இந்தி திணிப்பை கண்டித்து வரும் 15ம் தேதி தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்த உள்ளதாக திமுக அறிவித்துள்ளது. இதுகுறித்து திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், மாணவர் அணி செயலாளர் சி.வி.எம்.பி.எழிலரசன் ஆகியோர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: இந்தியத் துணைக் கண்டத்தின் பன்முகத் தன்மையைச் சிதைக்கும் வகையில், ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே மதம், ஒரே உணர்வு, ஒரே பண்பாடு என்ற ஆர்எஸ்எஸ் கருத்தியலை ஒன்றிய பாஜ அரசு செயல்படுத்த முற்படுகிறது. ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையிலான அலுவல் மொழி தொடர்பான நாடாளுமன்றக் குழு அளித்துள்ள அறிக்கையில் (11வது தொகுதி), ஒன்றிய அரசு நடத்தும் ஐஐடி, ஐஐஎம., எய்ம்ஸ் மற்றும் ஒன்றிய பல்கலைக் கழகங்களான உயர்கல்வி நிறுவனங்களில் கட்டாயமாக இந்தி மட்டுமே பயிற்று மொழியாக இருக்க வேண்டுமென்று கட்டாயப்படுத்துவது இந்தி பேசாத மாநிலங்களின் உணர்வுகளுக்கு எதிரானது.

மேலும், ஒன்றிய அரசின் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வுகளிலும் ஆங்கிலத்தை நீக்கி விட்டு, இந்தியில் மட்டும் தேர்வு நடத்தும் பரிந்துரையும் உள்ளது. இது இந்தியைப் படித்தால் மட்டுமே வேலை என்கிற நிலையை உருவாக்கி, இந்தி பேசாத மாநிலங்களில் உள்ள இளைஞர்களின் வேலைவாய்ப்பை பறிக்கும் மறைமுகச் சதித் திட்டமாகக் காட்சியளிக்கிறது.  இந்திய அரசியல் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் தமிழ் உள்ளிட்ட 22 மொழிகள் இடம்பெற்றுள்ளன.  இவை அனைத்தும் சம உரிமை கொண்ட மொழிகளாகும் என்ற நிலையை திடீரென்று மாற்றி, இந்தியைப் பொது மொழியாகத் திணிப்பது எதேச்சதிகாரமானது.

இரண்டு நாட்களுக்கு முன்பாக ஒன்றிய கல்வித்துறை இணை அமைச்சர் ராஜ்குமார் ரஞ்சன் சிங், அனைத்துப் பாடத் துறைகளுக்கும் ஒரே பொது நுழைவுத் தேர்வு இந்திய அளவில் நடத்தப்படும் என்ற அறிவிப்பைத் தெரிவித்துள்ளார். இந்தியாவின் அத்தனை மாநிலங்களிலுள்ள கல்லூரிகளின், அனைத்துப் பாடத் துறைகளுக்கும், தேசிய தேர்வு முகமை மூலமாக ஒரே பொது நுழைவுத் தேர்வு நடத்தப்படும் என்ற திட்டம், இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு முரணானதும், மாநில உரிமைகளை  அடியோடு பறிக்கக்கூடியதாகவும், சமூகநீதிக்கு முற்றிலும் எதிரானதாகவும் உள்ளது.  

இது அனைவருக்குமான சமஉரிமை - சமவாய்ப்பு ஆகிய கோட்பாடுகளை அழிக்கக்கூடியது என்பதால் திராவிட முன்னேற்றக் கழகம் இந்த இந்தித் திணிப்பைக் கடுமையாக எதிர்க்கிறது. பலமொழி கொண்ட இந்திய துணைக் கண்டத்தில், அவரவர் மொழி உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டிய பன்முகத் தன்மையைச் சிதைத்து விட்டு, இந்தி என்ற ஒரு மொழி ஆதிக்கத்தை கொண்டுவருகின்ற செயலின் மற்றொரு வடிவமாக ஏற்கனவே புதிய தேசியக் கல்விக் கொள்கை அமைந்துள்ளது. ஆகவே ஒன்றிய பாஜ அரசின் இந்தித் திணிப்பை  திமுக இளைஞர் அணியும் - மாணவர் அணியும் கடுமையாக எதிர்க்கிறது.

அலுவல் மொழிச் சட்டத்தின் வாயிலாகவும், இந்திய அளவில் அனைத்துப் பாடத் துறைகளுக்கும் ஒரே பொது நுழைவுத் தேர்வுத் திட்டத்தின் மூலமாகவும் இந்தி மொழியை திணிக்க நினைக்கும் ஒன்றிய பாஜ அரசிற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளதை உணர்ந்து உடனடியாக அதனை ஒன்றிய பாஜ அரசு இத்திட்டத்தை கைவிட வேண்டுமென்று வலியுறுத்தி  திமுக இளைஞர் அணியும் - மாணவர் அணியும் இணைந்து, வரும் 15ம் தேதி காலை 9 மணியளவில், அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கிறது. இதில் திமுக இளைஞர் அணி - மாணவர் அணியின் மாவட்ட, மாநகர, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், வட்ட நிர்வாகிகள் மற்றும் இளைஞர் அணியினர் பங்கேற்று தெற்கில் ஒலிக்கும் நமது கண்டனக் குரல் செங்கோட்டையில் எதிரொலிக்கும் விதமாக அமைந்திட அணிதிரண்டு வாரீர்.

Tags : Tamil Nadu ,Hindi ,DMK , Protest on 15th across Tamil Nadu against imposition of Hindi on behalf of youth team - student team: DMK announcement
× RELATED மோடியை மிஞ்சும் வகையில் வியூகம்;...