×

எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கமான கான்ட்ராக்டர் வீட்டில் ஐ.டி. ரெய்டு: பல கோடி மதிப்பிலான ஆவணங்கள் சிக்கின

புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் எடப்பாடி பழனிச்சாமியின் நெருங்கிய ஒப்பந்ததாரரின் பாண்டித்துரையின் புதுக்கோட்டை வீடு, அலுவலகத்தில் 10 பேர் கொண்ட வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.
புதுக்கோட்டையை சேர்ந்தவர் பாண்டித்துரை (47). நெடுஞ்சாலைத்துறை அரசு ஒப்பந்ததாரர். கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் அவரது தந்தை மாணிக்கம் நெடுஞ்சாலை துறையில் பணியாற்றி வந்தார். இதில் அவர் உயிரிழந்ததை தொடர்ந்து வாரிசின் அடிப்படையில் பாண்டித்துரை நெடுஞ்சாலை துறையில் இளநிலை உதவியாளராக பணியில் சேர்ந்தார்.

பின்னர் புதுக்கோட்டையில் நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட அலுவலகத்தில் உதவியாளராக பணி உயர்வு பெற்றார். அப்போது அவரது நெருக்கமானவர்களுக்கு நெடுஞ்சாலையில் சாலையோரம் உள்ள மரங்களுக்கு வர்ணம் பூசும் பணியை டெண்டர் எடுத்து கொடுத்து வந்தார். பின்னர் அதிமுக ஆட்சியில் பல்வேறு அரசு ஒப்பந்தங்கள் எடுக்க வாய்ப்பு கிடைத்ததால் தனது பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்று, நெடுஞ்சாலைத்துறையில் அரசு ஒப்பந்ததாரராக பணி செய்ய தொடங்கினார். அதிமுக ஆட்சியில் எடப்பாடி பழனிசாமி நெடுஞ்சாலை துறை அமைச்சராக இருந்த காலகட்டத்தில், நெடுஞ்சாலை துறையில் சாலையில் பதிக்கக்கூடிய ஒளி பிரதிபலிப்பான், சாலையில் வைக்கக்கூடிய பிரதிபலிப்பு பலகைகள் உள்ளிட்டவைகளை ஒப்பந்தம் எடுத்து செய்து வந்தார்.

தமிழக முழுவதும் பல்வேறு பகுதிகளில் இந்த ஒப்பந்தத்தை எடுத்து செய்து வருகிறார். குறிப்பாக, தரமான பொருட்களை பயன்படுத்துவோம் என்று ஒப்பந்தம் எடுத்துவிட்டு சீனா தயாரிப்பு பொருட்களை உபயோகித்துள்ளார். எடப்பாடி பழனிசாமிக்கும், அதேபோல் ஓபிஎஸ் நெருக்கமானவர்களுக்கும் ஆதரவாளராக இருந்து அவர்களை பயன்படுத்தி பல்வேறு  அரசு ஒப்பந்தத்தை பாண்டித்துரை எடுத்துள்ளார். இந்த ஒப்பந்தத்தின் மூலம் அதிகமாக சொத்து சேர்த்ததாகவும், மேலும் பல இடங்களில் குறிப்பாக கோயம்புத்தூர், பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதிகளிலும்  தோட்டம், வீடு உள்ளிட்டவற்றை வாங்கியதாகவும் கூறப்படுகிறது. தற்போது பாண்டித்துரை கோயம்புத்தூரில் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார்.

இந்நிலையில் பாண்டித்துரை, வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வருமான வரித்துறைக்கு வந்த புகாரின் அடிப்படையில் திருச்சி, கோயமுத்தூர் உள்ளிட்ட பகுதியிலிருந்து வருமானவரித்துறை அதிகாரிகள் 10 பேர், புதுக்கோட்டை பெரியார் நகரில் உள்ள ``ஹரிவே லயன்ஸ்’’ என்ற பெயரில் இயங்கும் பாண்டித்துரை அலுவலகத்தில் நேற்று காலை 8 மணி முதல் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். மேலும் அவருக்கு சொந்தமான பெரியார் நகரில் உள்ள அவரது மற்றொரு வீடு, மேலாளர்  பீட்டர் வீடு, சிப்காட்டில் உள்ள அவரது தொழிற்சாலை, இரண்டு  இடங்களில் உள்ள வீடு என 5 இடங்களில் சோதனை நடைபெற்றது. இதில் 4 இடங்களில்  குறைந்த நேரத்தில் சோதனையை முடித்த வருமான வரித்துறை அதிகாரிகள், பெரியார்  நகர் வீடு மற்றும் அலுவலகத்தில் தொடர்ந்து மாலை வரை சோதனை நடத்தினர். எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கமான ஒப்பந்ததாரரின் பாண்டித்துரையின் வீடு, அலுவலகத்தில் நடந்த சோதனை புதுக்கோட்டையில் பரபரப்ைப ஏற்படுத்தியது.

* பத்து ஆண்டுகளில் பல ஊரில் சொத்து குவிப்பு
கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக நெடுஞ்சாலை துறை ஒப்பந்ததாரராக பாண்டித்துரை செயல்பட்டு வருகிறார். குறிப்பாக இவர், சாலை பணிகள் மேற்கொண்டு வருகிறார். கோயம்புத்தூர் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பணிகளை செய்து வருகிறார். சாலை பணிகள் மட்டுமல்லாது சாலைகளின் நடுவே பெயர் பலகை ஆர்ச் வைக்கும் பணியையும் தமிழக முழுவதும் செய்து வருகிறார். புதுக்கோட்டை, கோயம்புத்தூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் வீடுகள், தோப்புகள் பல கோடிகளில் அசையா சொத்துக்கள் உள்ளதாக கூறப்படுகிறது.

* ரோடு ரோலர் டிரைவர் மகன் கோடீஸ்வரரா?
பாண்டித்துரையின் தந்தை மாணிக்கம் நெடுஞ்சாலை துறையில் ரோடு லோலர் ஓட்டுனராக பணியாற்றி வந்துள்ளார். அவர் இறந்துவிட வாரிசு வேலை வாங்கிய பாண்டித்துரை, இப்போது அரசு ஒப்பந்ததாராகி கோடிக்கணக்கில் சொத்துக்களை குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Edappadi Palaniswami ,I.D. Raid , In the contractor's house close to Edappadi Palaniswami, I.D. Raid: Documents worth crores seized
× RELATED முகவர்கள் கவனமாக செயல்பட வேண்டும்: எடப்பாடி பழனிசாமி