இமாச்சல் பிரதேச வாக்காளர்கள் காங்கிரசுக்கு ஓட்டுப் போட்டால் அது பாஜகவுக்குதான் செல்லும்; டெல்லி துணை முதல்வர் கருத்து

புதுடெல்லி: இமாச்சல் பிரதேச வாக்காளர்கள் காங்கிரஸ் கட்சிக்கு ஓட்டுப் போட்டால், அந்த வாக்குகள் பாஜகவுக்கு சென்றடைந்துவிடும் என்று டெல்லி துணை முதல்வர் கருத்து தெரிவித்துள்ளார். இமாச்சலப் பிரதேசத்தில் பாஜக ஆட்சி நடைபெறும் நிலையில், இந்தாண்டு இறுதியில் சட்டப் பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன் பிலாஸ்பூரில் நடந்த கூட்டத்தில் பாஜக தேசியத் தலைவர் ஜேபி நட்டா கலந்து கொண்டார். இம்மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி முக்கிய எதிர்கட்சியாக இருந்தும், ஆம்ஆத்மி கட்சி காங்கிரசை முந்திக் கொண்டு தேர்தல் பிரசாரங்களை முன்னெடுத்துள்ளது.

இந்நிலையில் ஆம்ஆத்மி மூத்த தலைவரும் டெல்லி துணை முதல்வருமான மணீஷ் சிசோடியா தனது டுவிட்டர் பக்கத்தில், ‘இமாச்சல் பிரதேசத்தில் சட்டசபை தேர்தல் முடிந்தவுடன், பிரதான  எதிர்க்கட்சியான காங்கிரஸ் எம்எல்ஏக்கள், பாஜகவில் சேர்ந்துவிடுவார்கள். எனவே இமாச்சல் வாக்காளர்கள் காங்கிரசுக்கு வாக்களிக்காமல், எங்களது கட்சிக்கு வாக்களிக்க வேண்டும். காங்கிரசுக்கு போடும் வாக்குகள், பின்னர் பாஜகவுக்கே சென்றுவிடும் என்பதால், வாக்காளர்கள் எச்சரிக்கையுடன் வாக்களிக்க வேண்டும்’ என்று கூறியுள்ளார்.

Related Stories: