நிர்வாகத்தில் பொறுப்புணர்வை கொண்டு வரதகவல் அறியும் உரிமை சட்டம் பயனளிக்கும்-திருப்பதி கூடுதல் எஸ்பி பேச்சு

திருப்பதி : திருப்பதியில் நடந்த நிகழ்ச்சியில் நிர்வாகத்தில் வெளிப்படை தன்மை, பொறுப்புணர்வை கொண்டு வர தகவல் அறியும் உரிமை சட்டம் பயனளிக்கும் என்று கூடுதல் எஸ்பி சுப்ரஜா தெரிவித்துள்ளார். அரசு துறைகளில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை அமல்படுத்துவது குறித்து அனைத்து அரசு அலுவலகங்களில் உள்ள குடிமை தகவல் அலுவலர்கள் மற்றும் மேல்முறையீட்டு அலுவலர்களுடன் ஒரு நாள் விழிப்புணர்வு மாநாடு  திருப்பதி எஸ்வி பல்கலைக்கழக சீனிவாச அரங்கில் நேற்று நடைபெற்றது.தகவல் அறியும் உரிமைசட்டத்தின் அமலாக்கம் பவர் பாயின்ட் பிரசன்டேஷன் மூலம் விளக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அதிகாரி சீனிவாச ராவ், கூடுதல் எஸ்பி சுப்ரஜா உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.அப்போது, அவர் பேசுகையில், ‘ஜனநாயக நாட்டில் மக்களுக்கு தகவல் கிடைக்க இந்திய குடியரசு தகவல் அறியும் உரிமை சட்டம்-2005ஐ கொண்டு வந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 5 முதல் 12 வரை ஆர்டிஐ வாரத்தை கொண்டாடுகிறோம்.

அரசு ஊழியர்களாகிய நாங்கள் 30 நாட்களுக்குள் குடிமக்கள் கோரும் துல்லியமான தகவல்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். கோரப்பட்ட தகவல்கள் கிடைக்கவில்லை என்றால் விண்ணப்பதாரரிடம் மேலும் சில கால அவகாசம் கோரப்படலாம்.

குடிமகன்கள் கேட்கும் தகவல்களில் பிறரை பற்றிய தகவல்களை தேடும்போது, 3ம் தரப்பினரின் அனுமதி கட்டாயம். அவர்கள் மறுத்தால் சட்டத்தின்படி விவரங்களை தெரிவிக்க அனுமதி இல்லை. ஒவ்வொரு சிவில் தகவல் அலுவலரும் அளிக்கும் பதில் விண்ணப்பதாரருக்கு திருப்தி அளிக்கும் வகையில் இருக்க வேண்டும். மேல்முறையீட்டு அதிகாரியிடம் செல்வதை தவிர்க்க முடிந்தவரை சரியான பதிலை விண்ணப்பதாரருக்கு அளிக்க வேண்டும்.

தகவல் அறியும் உரிமை சட்டத்தில் குறிப்பிட்டுள்ளபடி தகவல்களை வழங்க வேண்டும். அலட்சியத்திற்காக அபராதம் விதிக்கக்கூடாது. தகவல் தேடும் நபருக்கு தகவல் எவ்வளவு பயனுள்ளதாக இருக்கும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.சட்டத்தின் கீழ் அனுமதிக்கப்பட்ட தகவல்களை மட்டுமே வழங்க வேண்டும். சில சட்டங்களின் ரகசிய தன்மையை பராமரிக்க வேண்டும்’ என்றார்.

Related Stories: