×

குடமுருட்டி ஆற்றின் குறுக்கே புதிதாக கட்டப்பட்ட தடுப்பணை உயரத்தை அதிகரிக்க வேண்டும்-விவசாயிகள் கோரிக்கை

வலங்கைமான் : வலங்கைமான் அடுத்த சந்திரசேகரபுரம் பகுதியில் குடமுருட்டி ஆற்றில் ரூ.3 கோடி மதிப்பீட்டில் புதிய படுக்கை அணை உயரத்தை அதிகரிக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.காவிரியின் கிளை நதிகளில் ஒன்றான குடமுருட்டி ஆறு மூலம் பல ஆயிரம் ஹெக்டேர் விளை நிலங்கள் பாசன வசதி பெறுகின்றது. ஆறுகளில் இரவு பகலாக கடந்த சில ஆண்டுகளாக மணல் அள்ள பட்டதாலும் ஆற்றின் நடுவே உள்ள மண் திட்டுகள் அகற்றப்பட்டதாலும் ஆறுகள் பள்ளமானது. தலைப்பு வாய்க்கால்கள் மேடானது. இதன் காரணமாக ஆற்றில் அளவுக்கு அதிகமாக தண்ணீர் வந்தால் மட்டுமே பாசன வாய்க்கால்களுக்கு தண்ணீர் செல்லும் சூழ்நிலை ஏற்பட்டது.

இதே நிலைமை வலங்கைமான் பகுதிக்கு உட்பட்ட பூண்டி வாய்க்கால், சந்தன வாய்க்கால், தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் தாலுகாவிற்கு உட்பட்ட தில்லையம்பூர், வாய்க்கால் ஆகியவற்றிற்கு ஏற்பட்டது. இந்நிலையில் வாய்க்கால்களின் தலைப்பிற்கு அருகே குடமுருட்டி ஆற்றில் படுக்கை அணை அமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து இருந்தனர். இதை தொடர்ந்து குடமுருட்டி ஆற்றில் சந்திரசேகரபுரம் பகுதியில் படுக்கை அணை கட்டப்பட்டது. இருப்பினும் இந்த அணை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு குறுகிய காலத்திலேயே தனது ஆயுளை முடித்து கொண்டது.

இது குறித்து விவசாயிகளின் கோரிக்கை தினகரனில் படத்துடன் செய்தி வெளியானது. அதனை அடுத்து சில லட்ச ரூபாய் மதிப்பீட்டில் தற்காலிகமாக மரம் மற்றும் மணல் மூட்டைகள், கற்கள் ஆகியவைகளை கொண்டு அடைக்கப்பட்டது. இருப்பினும் இது உரிய பலனை விவசாயிகளுக்கு ஏற்படுத்தி தரவில்லை. இதனால் பொதுப்பணித்துறைக்கு வருவாய் இழப்பும் விவசாயிகளுக்கு மன உளைச்சலும் ஏற்பட்டது.

வலங்கைமான் தாலுகா பூண்டி பகுதியை சேர்ந்த விவசாயிகள் மற்றும் ஆதிச்சமங்கலம், விருப்பாச்சிபுரம், வலங்கைமான் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த சந்தன வாய்க்கால் பாசன விவசாயிகள் ஆகியோர் குடமுருட்டி ஆற்றில் மீண்டும் தரமான படுக்கை அணை அமைத்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். அதனை அடுத்து அதற்கான மதிப்பீடுகள் பொதுப்பணித் துறையின் மூலம் சுமார் ரூ.3 கோடி மதிப்பீட்டில் படுக்கை அணை கட்டும் பணி முடிவுற்றது. அதனையடுத்து சந்தன வாய்க்கால் பூண்டி வாய்க்கால் தில்லையம்பூர் வாய்க்கால் உள்ளிட்ட பாசன வாய்க்கால்களில் தண்ணீர் செல்வதில் எவ்வித தடங்கலும் இல்லை.

கடந்த அதிமுக ஆட்சியில் இதற்கான முன்னெடுப்பு பணிகள் மேற்கொள்ளப்படாத நிலையில் திமுக ஆட்சியில் உரிய நிதி ஒதுக்கி புதிய படுக்கை அணையை குறுகிய காலத்திற்குள் கட்டி பயன்பாட்டிற்கு வந்தமைக்கு விவசாயிகள் தமிழக முதல்வர் மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர், பொதுப்பணித் துறை அலுவலர்கள் ஆகியோருக்கு அப்போது நன்றி தெரிவித்தனர்.

இந்நிலையில் குடமுருட்டி ஆற்றின் குறுக்கே தடுப்பணை புதிதாக கட்டப்பட்ட நிலையிலும் கூட சந்தன வாய்க்கால், பூண்டி வாய்க்கால் மற்றும் தில்லையம்பூர் வாய்க்கால்களில் பாசனத்திற்கு போதிய தண்ணீர் வரவில்லை என விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர். இதன் காரணமாக அப்பகுதியில் விவசாய பணிகள் மேற்கொள்வதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் புதிதாக கட்டப்பட்ட தடுப்பணையினை பொதுப்பணித்துறை உயர் அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து விவசாயிகள் முழுமையாக பயன் பெறும் வகையில் தடுப்பணையில் உயரத்தை அதிகரிக்க வேண்டுமென அப்பகுதி விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Kudamuruti river , Valangaiman : Valangaiman next to Chandrasekharapuram area in Kudamuruti river at a cost of Rs 3 crore new bed dam height.
× RELATED வலங்கைமான் அருகே குடமுருட்டி ஆற்றில்;...