×

ஊட்டி, ஆடாசோலையில் 12 ஏக்கர் ஆக்கிரமிப்பு மேய்ச்சல் புறம்போக்கு நிலம் மீட்பு

ஊட்டி :  ஊட்டி அருகே ஆடாசோலையில் 12 ஏக்கர் மேய்ச்சல் புறம்போக்கு நிலத்தை வருவாய்த்துறையினர் மீட்டனர்.தமிழகம் முழுவதும் புறம்போக்கு நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி மீட்கும் பணிகளை வருவாய்த்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். நீலகிரி மாவட்டத்திலும் 6 தாலுக்காகளிலும் நீர்நிலை புறம்நோக்கு நிலங்கள், மேய்ச்சல் நிலங்கள், பிற வருவாய்த்துறை சார்ந்த நிலங்கள் அடையாளம் காணப்பட்டு ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகின்றன.

ஆக்கிரமிப்பில் உள்ள நிலங்கள் அளவீடு செய்யப்பட்டு அங்கு விவசாயம் ஏதேனும் செய்திருந்தால் அவையும் அப்புறப்படுத்தப்பட்டு அறிவிப்பு பலகை வைக்கப்பட்டு வருகிறது.
இதன் தொடர்ச்சியாக ஊட்டி வட்டத்திற்குட்பட்ட ஊட்டி ஊரகம், ஆடாசோலை என்னும் இடத்தில் மேய்ச்சல் நிலம் என்ற வகைப்பாட்டில் உள்ள புறம்போக்கு நிலம் 12 ஏக்கர் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. இதுதொடர்பாக ஆக்கிரமிப்பு நிலத்தில் விவசாய பணிகள் ஏதுவும் செய்யக்கூடாது, அதில் இருந்து வெளியேறுமாறும், வருவாய்த்துறை சார்பில் இருமுறை நோட்டீஸ் வழங்கப்பட்டது. இருப்பினும் அவர்கள் வெளியேறவில்லை.

இதனை தொடர்ந்து மாவட்ட கலெக்டர் அம்ரித் உத்தரவின் பேரில், ஊட்டி ஆர்டிஒ., துரைசாமி தலைமையில் வருவாய் ஆய்வாளர் இளங்கோகிலகுரு, கிராம நிர்வாக அலுவலர் ரசியாபேகம் மற்றும் வருவாய்த்துைறயினர் அப்பகுதிக்கு சென்று நிலத்தை ஆய்வு செய்து அளவீடு செய்தனர்.

ஆக்கிரமிப்பில் இருந்த 12 ஏக்கர் நிலத்தில் கேரட், முட்டைகோஸ் உள்ளிட்ட மலை காய்கறிகள் பயிரிடப்பட்டிருந்தது தொியவந்தது. இதனை தொடர்ந்து அந்த இடம் மீட்கப்பட்டு, மேய்ச்சல், நீர்நிலை புறம்போக்கு என்ற பதிவினை கொண்ட அரசுக்கு சொந்தமான இந்த நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளது. இதில் அத்துமீறி யாரும் நுழைய கூடாது. மீறுபவர்கள் மீது கடுமையான குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டது.

 வருவாய்த்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘ஊட்டி வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் ஆக்கிரமிப்பில் உள்ள புறம்போக்கு நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகள் நீதிமன்ற உத்தரவுபடி அகற்றப்பட்டு வருகின்றன. பொதுமக்கள் புறம்போக்கு நிலங்களை ஆக்கிரமிக்க கூடாது, என்றனர்.

Tags : Ooty, Atdacholai , Ooty: The revenue department has recovered 12 acres of grazing land in Atdacholai near Ooty.
× RELATED ஊட்டி, ஆடாசோலையில் 12 ஏக்கர்...