×

கீழ்பென்னாத்தூர், கலசபாக்கம், செங்கம், ஆரணியில் குறைதீர்வு கூட்டம் உரம், விதைகள் தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்-விவசாயிகள் வலியுறுத்தல்

திருவண்ணாமலை : உரம், விதைகள் ஆகியன தட்டுபாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறைதீர்வு கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று வட்டார அளவிலான விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் நடத்தப்பட்டது. அதன்படி, கீழ்பென்னாத்தூர் வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தில் நேற்று வட்டார அளவில் விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் நடந்தது. கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல் பிரிவு) கோ.குமரன் தலைமை தாங்கினார். வேளாண்மை உதவி இயக்குனர் க.சந்திரன் முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் விவசாயிகள் தரப்பில் பேசியதாவது: கரும்பு நிலுவைத்தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கரும்பு கொள்முதல் விலையை நிர்ணயம் செய்ய வேண்டும். உரங்கள், விதைகள் தட்டுப்பாடு இன்றி கிடைக்க செய்ய வேண்டும். அத்தியாவசிய உரங்களை அதிக விலைக்கு விற்கும் உரக்கடைகளின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும். கிராம ஊராட்சிகளில் ஏரி ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும். பயிர் காப்பீடு தொகை உடனே கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தலவாய்குளம் சந்தையில் கால்நடைகளுக்கு முறையான கட்டண விலை நிர்ணயம் செய்ய வேண்டும். நாரியமங்கலம் சாலையில் உலர் களம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தி பேசினர்.

தொடர்ந்து, கீழ்பென்னாத்தூர் தொகுதியில் நிறைவேற்ற வேண்டிய 10 முக்கிய கோரிக்கைகள்  அடங்கிய மனுவை கலெக்டர் பா.முருகேஷிடம் வழங்கிய துணை சபாநாயகர் கு.பிச்சாண்டிக்கு விவசாயிகள் நன்றி தெரிவித்தனர். கூட்டத்தில், தாசில்தார் க.சக்கரை, தனி தாசில்தார் பன்னீர்செல்வம், ஆணையாளர் சு.அருணாசலம், விவசாய சங்க தலைவர் பழனிசாமி, ஆத்மா குழு தலைவர் சிவக்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

கலசபாக்கம்: கலசபாக்கம் அடுத்த தென்பள்ளிப்பட்டு வேளாண்மை விரிவாக்க அலுவலக மையத்தில் வட்டார அளவிலான விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் நடந்தது. உதவி இயக்குனர் சரண்யாதேவி தலைமை தாங்கினார். குறைதீர்வு கூட்டத்திற்கு வர அதிகாரிகளுக்கு சற்று காலதாமதம் ஏற்பட்டது.

இதனால் ஆத்திரமடைந்த சில விவசாயிகள் வெளிநடப்பு செய்து, வேளாண்மை விரிவாக்க அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து, போளூர் ஒன்றியத்தில் பல்வேறு பணிகளை கலெக்டர் பா.முருகேஷ் ஆய்வு மேற்கொள்ள வருவதை அறிந்த விவசாயிகள் திடீரென திருவண்ணாமலை- வேலூர் சாலையில் மறியலில் ஈடுபட முயன்றனர். அவர்களிடம் இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தையும் ஏற்கவில்லை.

இதையடுத்து, அலுவலக மையத்தில் இருந்த விவசாயிகளுடன் அதிகாரிகள் கூட்டத்தை நடத்தினர். இதையறிந்த மறியலில் ஈடுபட்டு கொண்டிருந்த விவசாயிகள் கூட்ட அரங்கில் நுழைந்து கோஷம் எழுப்பினர். அவர்களை போலீசார் சமரசம் செய்தனர்.பின்னர், கடந்த மாதம் கொடுத்த மனுக்கள் மீது என்ன நடவடிக்கை மேற்கொண்டீர்கள் என விவசாயிகள் சிலர் கேட்டனர். அதற்கு உதவி இயக்குனர் சரண்யாதேவி கூறுகையில், கடந்த மாதம் நடந்த குறைதீர்வு கூட்டத்தில் பெறப்பட்ட 36 மனுக்கள் மீது துறைரீதியாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அலுவலக பணிகள் காரணமாக கூட்டத்திற்கு வர சற்று காலதாமதம் ஆகிவிட்டது. எனவே, அதை பொருட்படுத்த வேண்டாம். உங்களது கோரிக்கைகளை தெரிவித்தால் துறைரீதியாக நிறைவேற்ற தயாராக உள்ளோம் என்றார்.

செங்கம்: செங்கம் வேளாண்மை துறை அலுவலக வளாகத்தில் நேற்று வட்டார அளவிலான விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் நடந்தது. ஊரக வளர்ச்சித்துறை தணிக்கை அதிகாரி கருணாநிதி தலைமை தாங்கினார். தாசில்தார் முனுசாமி முன்னிலை வகித்தார். வருவாய் ஆய்வாளர் ஞானவேல் வரவேற்றார்.

கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள், யூரியா, உரம் தட்டுபாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கிராமப்புறங்களில் அரசுக்கு சொந்தமான இடங்கள் இடைத்தரகர் மூலம் விற்கப்படுவதை தடுக்க வேண்டும். விவசாய மின்இணைப்பு கேட்டு உரிய ஆவணங்களுடன் முறையாக விண்ணப்பித்த விவசாயிகளுக்கு இடைத்தரகர்கள் தலையீடின்றி விரைந்து வழங்க வேண்டும். 2020-2021ம் ஆண்டில் மழையால் சேதமடைந்த பயிர்களுக்கு காப்பீடு தொகை பெற்றுத்தர வேண்டும் என வலியுறுத்தி பேசினர்.

அதற்கு அதிகாரிகள், மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். கிராம நிர்வாக அலுவலர் விஜயகுமார் நன்றி கூறினார்.
இதேபோல் மேற்கு ஆரணி வட்டார அளவில் விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் ஆர்டிஓ தனலட்சுமி தலைமையில் நடந்தது.

ரகளையில் ஈடுபட்ட விவசாயிகள்

கலசபாக்கம் வட்டார அளவில் நடந்த விவசாயிகள் குறைதீர்வு கூட்டத்திற்கு அதிகாரிகள் தாமதமாக வந்ததை கண்டித்து விவசாயிகள் சிலர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் உதவி இயக்குனர் சரண்யாதேவி உரிய விளக்கம் அளித்தும் ஏற்காமல், கூட்டத்தை வேறொரு தேதியில் நடத்த வேண்டும் என தெரிவித்தனர். அதற்கு உதவி இயக்குனர், மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி பெற்று  உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.

இதற்கிடையில்,  போராட்டத்தில் ஈடுபட்ட சில விவசாயிகள் கூட்ட அரங்கில் இருந்த  மின்விளக்குகள், மின்விசிறிகள் நிறுத்துவது, ஒலிபெருக்கியின் மின் ஒயர்களை  எடுப்பது, நாற்காலிகளை தட்டுவது என தொடர்ந்து ரகளையில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Tags : Kilibennathur ,Kalasapakkam ,Sengam ,Arani , Thiruvannamalai: Farmers in the Grievance Redressal Meeting said that action should be taken to ensure availability of fertilizer and seeds without shortage.
× RELATED தாலுகா அலுவலகத்தில் திடீர் தீ; தீயணைப்பு துறையினர் அணைத்தனர்