×

சட்டமன்றப்பொது கணக்கு குழு ஆய்வு ஒகேனக்கல்லில் 25 லட்சம் மீன் குஞ்சுகள் வளர்க்க இலக்கு-அதிகாரிகள் தகவல்

தர்மபுரி : ஒகேனக்கல்லில் ஆய்வு பணியில் ஈடுபட்ட சட்டமன்றப் பேரவை பொது கணக்கு குழுவிடம் அங்குள்ள பண்ணையில் 25 லட்சம் மீன் குஞ்சுகள் வளர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொது கணக்கு குழு உறுப்பினர்கள், தலைவர் செல்வபெருந்தகை தலைமையில் நேற்று தர்மபுரி மாவட்டத்தில் ஆய்வு பணியில் ஈடுபட்டனர். இக்குழுவில் சிந்தனை செல்வன் எம்எல்ஏ, பூண்டி காலைவாணன் எம்எல்ஏ ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

அவர்களை மாவட்ட கலெக்டர் சாந்தி வரவேற்றார். இக்குழுவினர் நேற்று காலை ஒகேனக்கலில் கூடினர். அவர்களுடன் பென்னாகரம் ஜிகேமணி எம்எல்ஏ, தர்மபுரி வெங்கடேஸ்வரன் எம்எல்ஏ ஆகியோரும் கலந்து கொண்டனர். இக்குழுவினர் ஒகேனக்கலில் உள்ள அரசு மீன் பண்ணையை ஆய்வு செய்தனர். அப்போது, மீன் குஞ்சுகளை வளர்ப்பு தொட்டியில் விட்டனர். அப்போது, மேட்டூர் மற்றும் பவானி அணைகளில் இருந்து மீன் முட்டை குஞ்சுகளை வாங்கி வந்து ஒகேனக்கல் மீன் பண்ணையில் விட்டு, உரிய பருவத்திற்கு வந்ததும் விவசாயிகளுக்கு வழங்கி வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். நடப்பாண்டு 25 லட்சம் மீன் குஞ்சுகள் வளர்த்து விவசாயிகளுக்கு வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இதுவரை 17 லட்சம் மீன் குஞ்சுகள் வளர்த்து விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. இன்னும் 8 லட்சம் மீன் குஞ்சுகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என அதிகாரிகள் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து ஒகேனக்கல் முதலைப்பண்ணையை குழுவினர் ஆய்வு செய்தனர். சில முதலைகளின் உடம்பில் காயங்கள் அதிகமாக இருந்தன. உணவுக்காக ஒன்றுக்கொன்று தாக்கிக்கொண்டது ஆய்வில் தெரியவந்தது. இதுதொடர்பாக அங்குள்ள ஊழியர்களிடம் குழுவினர் விசாரித்தனர்.

பண்ணையில் 102 முதலைகள் உள்ளன. இதில் 60 பெண் முதலைகளும், 42 ஆண் முதலைகளும் அடங்கும். 24 தண்ணீர் தொட்டிகள் உள்ளன. இரண்டு நாளைக்கு ஒருமுறை மாட்டிறைச்சி வழங்கப்படுகிறது. இதற்காக  மாதம் ₹1 லட்சம் செலவு செய்யப்படுகிறது. முதலைப்பண்ணையை தினசரி 600 பேர் பார்த்துச்செல்கின்றனர். நுழைவு கட்டணமாக தலா ₹20 வசூலிக்கப்படுகிறது. இதன்மூலம் கிடைக்கும் வருவாய் ஊழியர்களுக்கும், முதலைகளுக்கு வழங்கப்படும் உணவுக்கும் சரியாக உள்ளது என ஊழியர்கள் என்றனர்.

அப்போது, நடப்பாண்டு ₹12.50 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில், ₹8 லட்சம் செலவு செய்துள்ளீர்கள். ஒரு பெண் ஊழியருக்கு ₹10 ஆயிரம் வழங்க கோரி உத்தரவிட்டும், சம்பள உயர்வு வழங்கப்படாதது ஏன் என குழு தலைவர் செல்வபெருந்தகை கேள்வி எழுப்பினர். இதைத்தொடர்ந்து, ஒகேனக்கல் வண்ண மீன் காட்சியகத்திற்கு சென்ற குழுவினர், பூட்டு போடப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சிக்குள்ளாகினர். உடனே, அங்கிருந்த ஒரு ஊழியர் கல்லை எடுத்து பூட்டை உடைக்க முயன்றார்.

அதனை தடுத்த குழுவினர், ஆய்வு செய்யாமல் திரும்பினர். கொரோனா காலகட்டத்திற்கு பிறகு வண்ண மீன் காட்சியகம் மூடியே கிடக்கிறது. அங்கு, வண்ண மீன்கள் இல்லை என ஊழியர்கள் தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து ஒகேனக்கல் மடத்தில் உள்ள ஒகேனக்கல் குடிநீர் வழங்கல் மற்றும் புளோரைடு பாதிப்பு குறைப்பு திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள பிரதான சமநிலை நீர்த்தேக்கத்தின் ராட்சத தொட்டியின்(240 லட்சம் லிட்டர் கொள்ளளவு) மேல்பகுதியில் ஆய்வு செய்தனர். சுத்திகரிப்பு செய்யப்பட்ட குடிநீரை பம்பிங் செய்து எடுப்பதை ஆய்வு செய்தனர்.

பின்னர், பென்னாகரம் போடூர் ஆதிதிராவிடர் அரசு மாணவர் விடுதியை ஆய்வு செய்தனர். அப்போது, மதிய உணவினை சாப்பிட்டு பார்த்தனர். இதே விடுதியை தமிழக முதல்வர் ஆய்வு செய்து, நன்றாக பராமரிக்கப்பட்டு வருவதாக பாராட்டு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து, குழுவின் தலைவர் சென்னையில் உள்ள சம்பந்தப்பட்ட துறை செயலரை செல்போனில் தொடர்பு கொண்டு போடூர் விடுதி நன்றாக இருப்பதாகவும், இதேபோல் தமிழகம் முழுவதும் விடுதிகளை பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக்கொண்டார்.

விடுதியை  விட்டு வெளியே வந்த குழுவினரிடம், போடூர் காலனிக்கு குடிநீர், தெரு விளக்கு, சாலை வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்
தொடர்ந்து பென்னாகரம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆய்வு செய்தனர். அப்போது, பள்ளியில் இருந்த ஆய்வக கட்டடத்தில் இடிக்கப்பட்டு விட்டது. எனவே, புதிய கட்டிடம் கட்டி ஆய்வக வசதி ஏற்படுத்தி தரவேண்டுமென ஆசிரியர்கள் கோரிக்கை வைத்தனர்.

பாலக்கோடு சர்க்கரை ஆலை வளாகத்தில் புதிய ரக கரும்பு சாகுபடி செய்யப்பட்டுள்ளதை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். கடகத்தூர் அரசு தொழிற்பயிற்சி கல்லூரி மாணவிகள் விடுதியை பார்வையிட்டனர். குழுவினரிடம் மாணவர்கள் கல்லூரிக்கு சுற்றுச்சுவர் கட்டித்தர வேண்டும். விளையாட்டுப் பொருட்கள் வாங்கித்தர வேண்டும் என கோரிக்கை வைத்தனர். குழுவினர் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.

ஆய்வின்போது சார் ஆட்சியர் சித்ரா விஜயன், திட்ட இயக்குனர் பாபு, கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் ராமதாஸ்,  நிர்வாகிகள் மடம் முருகேசன், வள்ளியம்மாள் பவுன்ராஜ், ஒன்றிய விவசாய அணி பூவண்ணன், மீனவரணி மிதுன் காளியப்பன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags : Legislative Accounting Committee ,Ogenacal , Dharmapuri: 25 lakh fish fry were found in the farm there, according to the Public Accounts Committee of the Legislative Assembly, which was engaged in inspection work in Okanagan.
× RELATED ஒகேனக்கல்லில் சாலையை கடந்து சென்ற ஒற்றை யானை போக்குவரத்து ஸ்தம்பிப்பு