×

தமிழகத்தில் முன்மாதிரி கிராம விருதுக்கு குளூர் ஊராட்சி தேர்வு புதுடில்லி யுனிசெப் அதிகாரிகள் ஆய்வு

மொடக்குறிச்சி : தமிழகத்தில் முன்மாதிரி கிராம விருதுக்குத் தேர்வாகியிருக்கும்  மொடக்குறிச்சி ஒன்றியத்துக்குட்பட்ட குளூர் ஊராட்சியில் புதுடில்லியில்  இருந்து வந்த யூனிசெப் அதிகாரி மகாலட்சுமி தலைமையிலான அதிகாரிகள்  குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். கடந்த ஆகஸ்ட்  மாதம் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையால்  தமிழகத்தில் முன்மாதிரி  கிராம விருதுக்கு மொடக்குறிச்சி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள குளூர் ஊராட்சி  தேர்வாகியுள்ளதாக மாநில அரசு அறிவித்தது.

இந்நிலையில் டில்லி  யுனிசெப் அதிகாரி மகாலட்சுமி தலைமையிலான அதிகாரிகள் கொண்ட குழுவினர் குளூர்  ஊராட்சியில் சுகாதாரம் குறித்தும் பல்வேறு வளர்ச்சி நலத்திட்ட பணிகள்  குறித்தும் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வில் குளூர் ஊராட்சிக்குட்பட்ட  கோவிந்த நாயக்கன் பாளையம் பள்ளியில் உள்ள குழந்தைகளுக்கு இயற்கை சாண  எரிவாயு மூலம் சமைத்து வழங்கி வருவது குறித்து  மொடக்குறிச்சி பிடிஓ சக்திவேலிடம்  யுனிசெப் அதிகாரிகள் விளக்கம்  கேட்டறிந்தனர்.

மேலும்  குளூர் ஊராட்சியில் ஆந்திராவில் இருந்து  வரவழைக்கப்பட்ட 5,400  மரக்கன்றுகள் நடப்பட்டு வளர்ச்சி அடைந்து பசுமையாக  மாறியதையடுத்து  மாமரம், அத்திமரம், மகிழம், திருவோடு மரம், நாவல் உள்ளிட்ட  பல்வேறு மரவகை கன்றுகள் வளர்ந்து நின்று பசுமை ஊராட்சியாக காட்சியளிப்பதை  மொடக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் கணபதி மற்றும்  குளூர் ஊராட்சி  தலைவர் செல்வராஜிடம் யுனிசெப் அதிகாரிகள் ஆர்வமாக கேட்டறிந்தனர்.

 அணைத்து வீடுகளுக்கும் பிளாஸ்டிக் குப்பை பக்கெட்டுகள் வழங்கி மக்கும்  குப்பை, மக்காத குப்பை என பொதுமக்களிடம் தரம் பிரித்து குப்பைகள் வாங்கி  வருவதையும் யூனிசெப் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். தவிர மகாத்மா காந்தி தேசிய  ஊரக உறுதியளிப்பு வேலை திட்டத்தின் கீழ் குளூர் ஊராட்சியில் இரண்டு  தடுப்பணைகள் கட்டப்பட்டு தற்போது தண்ணீர் நிரம்பி வழிகிறது.

 ஊராட்சித் தலைவர் செல்வராஜ் மற்றும் தன்னார்வலர்கள் மூலம் அப்பகுதியில்  மூன்று புதிய குளம் அமைக்கப்பட்டதையும் அக்குளத்தில் தற்பொழுது நீர்  நிரம்பி இருப்பதையும் கண்டு யுனிசெப் அதிகாரிகள் வியந்தனர். குளூர்   ஊராட்சியில் சுகாதாரம், குழந்தைகள் நலம்,  வளர்ச்சி திட்டப் பணிகள்  உள்ளிட்டவைகள் குறித்து புதுடில்லி யுனிசெப் அதிகாரிகள் ஆய்வு  மேற்கொண்டனர். இந்த ஆய்வில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பெருமாள்,  வட்டார ஒருங்கிணைப்பாளர் சுகுணா, இன்ஜினியர் ரமேஷ் மற்றும் மொடக்குறிச்சி  யூனியன் அலுவலர்கள், ஊராட்சி அலுவலர்கள் பலர் உடன் இருந்தனர்.

Tags : New Delhi Unicef ,panchayat ,Tamil Nadu , Modakurichi: In Tamil Nadu selected for the model village award in the Gloor Panchayat under Modakurichi Union.
× RELATED புதுப்பட்டி ஊராட்சியில் அரசு வேளாண் கல்லூரி மாணவிகள் களப்பயிற்சி