×

திருவாரூர் ஆலந்தூர் வேணுகோபாலசுவாமி கோயிலுக்கு சொந்தமான 2 சிலைகள் அமெரிக்காவில் கண்டுபிடிப்பு: சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் அதிரடி

வாஷிங்டன்: திருவாரூர் ஆலந்தூர் வேணுகோபாலசுவாமி கோயிலுக்கு சொந்தமான 2 சிலைகள் அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டது. யோக நரசிம்மர் மற்றும் விநாயகர் சிலைகள் அமெரிக்காவில் உள்ள அருங்காட்சியகத்தில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. திருவாரூர் ஆலந்தூர் வேணுகோபாலசுவாமி கோயிலில் உள்ள சிலைகள் மாயமானதாக கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு புகார் அளிக்கப்பட்டிருந்தது. அதன் அடிப்படியில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.

உலகளவில் உள்ள அருங்காட்சியகத்தில் சிலைகளை ஒப்பிட்டு பார்க்கும்போது மாயமான 2 சிலைகளும் அமெரிக்காவில் உள்ள அருங்காட்சியகத்தில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. சிலைகளை மீட்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. ஒன்றிய அரசின் மூலமாக ஆவணங்களை அனுப்பி, யூனிஸ்கோ ஒப்பந்தத்தின் அடிப்படையில் சிலைகளை தமிழகத்திற்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். ஏற்கனவே 2017ம் ஆண்டு இதே கோயிலில் ஸ்ரீதேவி, பூதேவி மற்றும் விஷ்ணு உள்ளிட்ட 3 சிலைகள் போலியாக தயாரிக்கப்பட்டு வேணுகோபால சுவாமி கோயிலில் வைக்கப்பட்டிருப்பதாகவும், அந்த சிலைகள் திருடப்பட்டதாக தான் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

மீதமுள்ள சிலைகளும் இதேபோன்று போலியாக தயாரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருக்கின்றனவா? என்ற சந்தேகத்தின்பேரில், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்திய போது 6 சிலைகள் போலியாக தயாரிக்கப்பட்டு வைக்கப்பட்டது தெரியவந்தது. இது குறித்த விசாரணையின்போது தற்போது, யோக நரசிம்மர் மற்றும் விநாயகர் சிலைகள் அமெரிக்காவில் இருப்பது கண்டறியப்பட்டது. மீதமுள்ள சிலைகளை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags : Tiruvarur ,Alantur Venugopalaswamy Temple ,USA ,Anti-Idol Smuggling Unit , Tiruvarur, Temple, Idols, America
× RELATED 3 ஆண்டாக உரிய நேரத்தில் தண்ணீர் திறப்பு பருத்திக்கு நல்ல விலை கிடைக்கிறது