×

ஆலந்தூரில் நள்ளிரவு பயங்கர ஆயுதங்களுடன் பெட்ரோல் குண்டுவீசி ரகளை ரவுடிகள் உள்பட 19 பேர் அதிரடி கைது

ஆலந்தூர்: ஆலந்தூரில் நள்ளிரவில் பயங்கர ஆயுதங்களுடன் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த ரவுடிகள் கடும் ரகளையில் ஈடுபட்டனர். பெட்ரோல் குண்டுகளை வீசியதால் மக்கள் பீதியில் வீடுகளில் முடங்கினர். மேலும், 3 பேருக்கு சரமாரியாக வெட்டு விழுந்தது. 5க்கும் மேற்பட்ட பைக்குகள் சேதம் அடைந்தன. இதுதொடர்பாக, ரவுடிகள் உள்பட 19 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
ஆலந்தூர் ஆபிரகாம் நகர் பகுதியில் 500க்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் நேற்று முன்தினம் இரவு மாஸ்க் அணிந்த 20க்கும் மேற்பட்ட மர்ம நபர்கள் பட்டாக்கத்தி மற்றும் ஆயுதங்களுடன் குடியிருப்பு பகுதியில் நுழைந்தனர். இதனை பார்த்த பெண்கள் அலறி அடித்து வீட்டிற்குள் ஓடிச்சென்று கதவை மூடிக் கொண்டனர். அந்த கும்பல் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 5க்கும் மேற்பட்ட பைக்குகளை அடித்து நொறுக்கியுள்ளது. மேலும், அந்த வழியாக வந்த நவீன் (20), ஆலந்தூர் ஜின்னா தெருவை சேர்ந்த என்ற அபுபக்கர் (20), சபீக் (20) என 3 பேரை தலை, கை, மற்றும் பின் கழுத்து பகுதியில் பலமாக கத்தியால் வெட்டியுள்ளனர். இதனால் பயந்துபோன  பொதுமக்கள் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

இதனையடுத்து அங்கு வந்த ரோந்து போலீசார் கும்பலை பிடிக்க முயன்றனர். அப்போது அந்த கும்பல் பெட்ரோல் குண்டை வீசிவிட்டு தப்பி சென்றுள்ளனர். இதை தொடர்ந்து, அங்கு வந்த  மடிப்பாக்கம் போலீஸ் உதவி கமிஷனர் பிராங்க் டி ரூபன், இன்ஸ்பெக்டர்கள் செல்லப்பா, சிவக்குமார் மற்றும் போலீசார் சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர். ரவுடிக் கும்பலால் வெட்டப்பட்ட 3 பேரையும் ராயப்பேட்டை, ஸ்டான்லி போன்ற அரசு மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர், சம்பவ இடத்தில் இருந்த சிசிடிவி கேமரா பதிவுகளைக் கொண்டு விசாரணை நடத்தி வந்தனர். அதில், ஆதம்பாக்கம் பகுதியில் நாகூர்மீரான் ரவுடி தலைமையில் ஒரு கோஷ்டியும், ரவுடி ராபின்சன் தலையில் ஒரு கோஷ்டியும், தாங்கள்தான் தாதா என கொலை, வெட்டு குத்து, அடிதடி, கட்டப்பஞ்சாயத்து போன்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்தது.

இதில், ராபின்சன் கோஷ்டியினர் போட்டியின் காரணமாக நாகூர்மீரானை கடந்த ஆண்டு வெட்டி கொன்றுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த நாகூர் மீரான் கோஷ்டியினர் ராபின்சனை கொல்ல திட்டமிட்டு வந்தனர். இந்நிலையில் ராபின்சனின் தங்கை செரின் மற்றும் அவரது நண்பர் அரவிந்த் நேற்று முன்தினம் மதியம் வேளச்சேரியில் உள்ள ஒரு செல்போன் கடையில் ரீசார்ஜ் செய்ய வந்துள்ளார். அப்போது,  அங்கு வந்த  கிண்டி காவல்நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளி இம்ரான் (எ) மண்டை இம்ரான் மற்றும் அவரது நண்பர்கள் அரவிந்திடம், எங்கடா ராபின் என்று கேட்டுள்ளனர். அதற்கு எனக்கு தெரியாது என்றதும், அவரை மிரட்டி பைக்கில் தூக்கிச் சென்றுள்ளனர். பின்னர் மேடவாக்கத்தில் இறக்கி விட்டுவிட்டு சென்றுள்ளனர். இந்த சம்பவம் குறித்து செரின் தனது அண்ணன் ராபின்சனிடம் கூறியுள்ளார். இதையடுத்து, ராபின்சன் கூட்டாளிகள் 15க்கும் மேற்பட்டவர்கள், அரவிந்தை கடத்திச்சென்ற நபரை தேடி ஆலந்தூர் ஆபிரகாம் நகர் பகுதிக்கு  பட்டாக்கத்தி மற்றும் பயங்கர ஆயுதங்களுடன் வந்து ரகளையில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்தது.

இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தி உள்ளது. ஆலந்தூரில் ரவுடிக் கும்பல் நள்ளிரவில் ரகளையில் ஈடுபட்டது தொடர்பாக, பரங்கிமலை, ஆதம்பாக்கம், மடிப்பாக்கம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இதில், ரகளையில் ஈடுபட்ட துரைப்பாக்கம் எழில் நகரை சேர்ந்த கொலை வழக்கு குற்றவாளி அருள்ராஜ் (23), ஆதம்பாக்கம் அம்பேத்கர் நகரை சேர்ந்த நவீன்குமார் (எ) மூளை (23), மணிகண்டன் (எ) டிஜே மணி (23), சஞ்சய் (எ) குண்டு சஞ்சய் (21), கவுதம் (எ) கை (19), ஈஸ்வர் (20), யசுனா (19), முருகன் (21), விக்னேஷ் (எ) வேலா (21), விஜய் (எ) கீஞ்சான் (24), சந்தோஷ் (22,) விஷ்வா (21), பரத் (20) உள்பட 19 பேரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Alandur , 19 people including the petrol bomb raiders arrested with deadly weapons in Alandur
× RELATED ஏழைகளின் சின்னம் ‘மைக்’கா? நாதக வேட்பாளரை கலாய்த்த பெண்கள்