×

தஞ்சை பள்ளி மாணவி தற்கொலை உயர் நீதிமன்றம் தெரிவித்த கருத்துகளை நீக்க வேண்டும்: தமிழக காவல் துறை வாதம்

புதுடெல்லி: தஞ்சை பள்ளி மாணவி தற்கொலை தொடர்பான விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்த கருத்துக்களை நீக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் தமிழக காவல்துறை தரப்பில் வாதங்கள் முன் வைக்கப்பட்டுள்ளது. தஞ்சாவூர் அருகே, மைக்கேல்பட்டி துாய இருதய மேல்நிலைப் பள்ளியில் படித்த, அரியலூரை சேர்ந்த 17 வயது மாணவி, பூச்சிக்கொல்லி மருந்து குடித்து  தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பான வழக்கை தற்போது சிபிஐ விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனு, உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி சஞ்ஜீவ் கண்ணா அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, தமிழக காவல் துறை தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வில்சன், ‘மாணவி விவகாரத்தில் தமிழக காவல்துறை தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் பதிவு செய்த கருத்துக்களை நீக்க வேண்டும்,’ என தெரிவித்தார். அப்போது குறுக்கிட்ட மாணவி தரப்பு வழக்கறிஞர், ‘எங்களுக்கு ஆட்சேபனை உள்ளதால் விரிவான வாதங்களை முன்வைக்க வேண்டும்,’ என தெரிவித்தார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ‘இந்த விவகாரத்தில் குழந்தைகள் உரிமைகள் நல பாதுகாப்பு ஆணையம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஆவணங்கள் உட்பட அனைத்தையும் முழுமையாக படிக்க வேண்டியுள்ளது,’ என தெரிவித்து. வழக்கை ஜனவரிக்கு ஒத்திவைத்தனர்.

Tags : Tanjore School Girl Suicide High Court ,Tamil Nadu Police , Tanjore School Girl Suicide High Court Should Dismiss: Tamil Nadu Police Argument
× RELATED பைக் சாகசங்களில் ஈடுபடுவோரை...