ஆப்ரேசன் ‘மின்னல் ரவுடி வேட்டை’ 3 நாளில் 3,095 ரவுடிகள் கைது: துப்பாக்கி, பட்டா கத்திகள் பறிமுதல்; பி, சி பிரிவில் உள்ள 5 ஆயிரம் ரவுடிகளுக்கு வலை

சென்னை: ஆப்ரேசன் ‘மின்னல் ரவுடி வேட்டை’ மூலம் தமிழகம் முழுவதும் கடந்த 3 நாட்களில் நடத்தப்பட்ட அதிரடி வேட்டையில் கொலை, கொலை முயற்சி மற்றும் கட்டப்பஞ்சாயத்துக்களில் ஈடுபட்டு வந்த 3,095 ரவுடிகளை கைது செய்து அவர்களிடம் இருந்து துப்பாக்கி, அரிவாள், பட்டாக்கத்திகளை போலீசார் பறிமுதல் செய்தனர். தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு முதல்வர் மு.க.ஸ்டாலின் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு பாதுகாக்கும் வகையில் பல்வேறு சிறப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இதற்கிடையே கடந்த மாதம் தமிழகத்தில் தேசிய புலனாய்வு முகமை சோதனை நடத்தினர். அப்போது கோவை, மதுரை, திண்டுக்கல், கடலூர், கன்னியகுமரி, தாம்பரம் உட்பட தமிழகம் முழுவதும் 19 இடங்களில் பெட்ரோல் குண்டுகள் வீச்சி சம்பவங்கள் நடந்தது.

அதைதொடர்ந்து பெட்ரோல் குண்டு வீசிய குற்றவாளிகளை போலீசார் கைது செய்தனர். மேலும், ஆர்.எஸ்.எஸ். அமைப்பு சார்பில் நவம்பர் 6ம் தேதி தமிழகம் முழுவதும் 50 இடங்களில் பேரணி நடக்க உள்ளது. இந்த பேரணியின் போது பெரிய அளவில் அசம்பாவிதங்கள் நடக்கலாம் என்று ஒன்றிய உளவுத்துறை மற்றும் மாநில உளவுத்துறைகள், தமிழக அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ்., பேரணியை நடத்தும் முக்கிய நிர்வாகிகளான மதுரை, கோவை பகுதிகளை சேர்ந்த 4 ஆர்.எஸ்.எஸ் நிர்வாகிகளுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இதற்கிடையே சேலத்தில் தேசிய பாதுகாப்பு முகமை சோதனையில் விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு ஆதரவாக செயல்பட்டு வந்த சேலத்தை சேர்ந்த் நவீன் சக்கரவர்த்தி(24), சஞ்சய் பிகாஷ்(25) ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்களில் தமிழகத்தில் பெரிய அளவில் தாக்குதல் தொடர்பான ஆவணங்கள், அரசியல் தலைவர்களை கொலை செய்யும் வகையில் ஆன்லைன் மூலம் துப்பாக்கி, தோட்டாக்கள் மற்றும் வெடி பொருட்கள் தயாரித்ததற்கான ஆவணங்கள் சிக்கியது. மேலும், தாக்குதல் சம்பவத்தின் போது போலீசாரிடம் சிக்காமல் இருக்க ‘சயனைட்’ குப்பியும் அவர்கள் தயாரித்துள்ளனர்.

அதோடு இல்லாமல் அந்த 2 வாலிபர்களும் ஒருவரை ஒருவர் தொடர்பு கொள்வதற்கு ஏதுவாக ஆன்லைன் மூலம் வாக்கி டாக்கி வாங்கி அதை ரகசியமாக பயன்படுத்தி வந்துள்ளனர். எனவே தமிழகத்தில் பெரிய அளவில் தாக்குதல் சம்பவங்கள் முறியடிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாகவும் ஒன்றிய உளவுத்துறை மற்றும் மாநில உளவுத்துறை எச்சரிக்கையை தொடர்ந்து தமிழகத்தல் கொலை, கொலை முயற்சி, கட்டப்பஞ்சாயத்து என 10க்கும் மேற்பட்ட வழக்குகளில் தொடர்புடைய ரவுடிகள் மற்றும் ஏ.பிளஸ் கேட்டகிரியில் உள்ள தாதாக்கள், ரவுடிகள், பி மற்றும் பி. பிளஸ் ரவுடிகளை கூண்டோடு கைது செய்ய முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி டிஜிபி சைலேந்திரபாபு நடவடிக்கை எடுத்து வருகிறார்.

அந்த வகையில், தமிழகம் முழுவதும் கடந்த 3 நாட்களாக ரவுடிகளுக்கு எதிரான ‘மின்னல் ரவுடி வேட்டை’ என்ற பெயரில் பெரிய அளவில் ரவுடிகள் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் தென் மாவட்டங்களில் பிரபல தாதாவாக வலம் வந்த ராக்கெட் ராஜா உள்ளிட்ட ரவுடிகள் பலர் இந்த மின்னல் ரவுடி வேட்டையில் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை ,மதுரை, கோவை, திருச்சி, சேலம் என 9 மாநகர போலீஸ் கமிஷனர்கள் மற்றும் 37 மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் மேற்பார்வையில் இந்த அதிரடி வேட்டை தொடர்ந்து நடந்து வருகிறது.

கடந்த 3 நாட்களில் ஆப்ரேஷன் ‘மின்னல் ரவுடி வேட்டை’யில் 3,095 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து துப்பாக்கிகள், அரிவாள், பட்டாக்கத்திகள் உள்ளிட்ட கொடூர ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட ரவுடிகளில் பல்வேறு வழக்கில் தலைமறைவாக இருந்த 489 ரவுடிகள். நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டு தலைமறைவாக இருந்து 216 ரவுடிகள் என மொத்தம் 705 ரவுடிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

மீதமுள்ள 2,390 ரவுடிகள் காவல் நிலைய பதிவேடு குற்றவாளிகள் ஆவார்கள். இவர்களிடம் அந்தந்த மாவட்ட கண்காணிப்பாளர்கள் மற்றும் துணை கமிஷனர்கள் முன்னிலையில் நன்னடத்தை பிணை பத்திரம் எழுதி வாங்கப்பட்டுள்ளது. மேலும், சி கேட்டகிரியில் தமிழகம் முழுவதும் 5 ஆயிரம் ரவுடிகள் இருப்பதாக உளவுத்துறை தகவல் அளித்துள்ளது. எனவே, சி கேட்டகிரிக்கு மேல் உள்ள 5 ரவுடிகளை கூண்டோடு கைது செய்வதற்கான நடவடிக்கையில் போலீசார் மாநிலம் முழுவதும் இரவும் பகலுமாக தீவிர வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். பி,சி கேட்டகிரியில் தமிழகம் முழுவதும் 5,000 ரவுடிகள் இருப்பதாக உளவுத்துறை தகவல் அளித்துள்ளது.

Related Stories: