சட்டீஸ்கர் முதல்வருக்கு நெருக்கமான அரசு அதிகாரிகள் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை

ராய்ப்பூர்: சட்டீஸ்கரில் முதல்வர் பூபேஷ் பாகேல் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இந்நிலையில், முதல்வருக்கு நெருக்கமான சில அரசு அதிகாரிகள், மாவட்ட கலெக்டர்கள், அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள் என பலரது வீடுகளில் நேற்று அதிகாலை அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். ராய்ப்பூர், ராய்கர், மகாசமுந்த், கோர்பா என பல்வேறு மாவட்டங்களில் 12க்கும் மேற்பட்ட இடங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டது. அதிகாலை முதல் நேற்றிரவு வரை அதிகாரிகள் சோதனை நடத்தினர். எதற்காக இந்த சோதனை நடத்தப்பட்டது என்ற தகவல்கள் வெளியிடப்படவில்லை. கடந்த மாதம், எக்கு, நிலக்கரி சுரங்க தொழிலதிபர்கள் வீடுகளில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். மேலும், கடந்த ஜூன், ஜூலை மாதத்திலும் நிலக்கரி தொழிலதிபர்கள், முதல்வர் அலுவலக அரசு அதிகாரிகள் வீடுகளில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது. இந்த சோதனைகளைத் தொடர்ந்து தற்போது அமலாக்கத்துறை சோதனை நடத்தி உள்ளது.

* தேர்தலை குறிவைத்து நடக்கும் ரெய்டு

இது குறித்து முதல்வர் பூபேஷ் பாகேல் அளித்த பேட்டியில், ‘தேர்தல் நெருங்க, நெருங்க இப்படிப்பட்ட சோதனைகளும் அதிகரிக்கும். இது, ஒன்றும் கடைசி சோதனை அல்ல. இனியும் தொடரும். தேர்தல் மூலம் நேரடியாக காங்கிரசை எதிர்கொள்ள முடியாத பாஜ, ஒன்றிய விசாரணை அமைப்புகளை குறுக்கு வழியில் பயன்படுத்தி வெற்றி அடைய முயற்சிக்கிறது,’ என்றார். இம்மாநிலத்தில் காங்கிரசின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு நவம்பர் வரை உள்ளது.

Related Stories: