×

பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை மின்துறை சார்பில் சிறப்பு குழுக்கள் நியமனம்: அமைச்சர் செந்தில்பாலாஜி பேட்டி

சென்னை: வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்சாரத்துறை சார்பில் சிறப்பு குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார். சென்னை, அண்ணாசாலையில் உள்ள மின்வாரிய தலைமையகத்தில்  அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் வடகிழக்கு பருவமழைக்கு மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இயக்குனர்கள், தலைமை பொறியாளர்கள் மற்றும் அனைத்து மேற்பார்வை பொறியாளர்களுடனான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழக தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் ராஜேஷ் லக்கானி, இயக்குநர் சிவலிங்கராஜன் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இந்த ஆய்வுக்கூட்டத்திற்கு பின் அமைச்சர் செந்தில் பாலாஜி நிருபர்களிடம் கூறுகையில்: இந்தாண்டு வடகிழக்கு பருவமழை அதிகமாக இருந்தாலும் எவ்வித பாதிப்புகளும் இல்லாத அளவிற்கு சீரான மின்விநியோகம் செய்வதற்காக நடைபெற்ற பணிகள், நடைபெறும் பணிகள், இன்னும் முடியாமல் உள்ள பணிகளை விரைந்து முடிக்க ஆய்வு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. வடகிழக்கு பருவமழையை சமாளிக்க மின்மாற்றிகள் 14,442, மின்கம்பங்கள் 1,50,932 தயார் நிலையில் உள்ளன. 12,780 கி.மீ அளவிற்கு மின் கம்பிகள் தயார் நிலையில் உள்ளன. தமிழகம் முழுவதும் சேதமடைந்த 39,616 மின்கம்பங்கள் மாற்றப்பட்டுள்ளன. இடையிலே 25,080 புதிதாக மின்கம்பங்கள் மாற்றப்பட்டுள்ளன. 1,759 கி.மீட்டருக்கு மின்கம்பிகள் புதிதாக போடப்பட்டுள்ளன.

சென்னையில் 5 கோட்டங்களில் புதைவட கம்பிகள் பதிக்கும் பணிகள் 2 மாதத்தில் முடிவடைகிறது. அடுத்த 2 மாதங்களில் சென்னையில் உள்ள 7 கோட்டங்களில் பணிகள் நடைபெறவுள்ளன. மின்னகத்தில் மழை காலங்களில் அதிக அழைப்புகள் வரும் என்பதால் கூடுதலாக ஒரே நேரத்தில் 60லிருந்து 75ஆக தொலைப்பேசி இணைப்புகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஐந்து ஆண்டுகளில் தமிழ்நாடு மின்வாரியத்தில் சொந்த நிறுவுதலில் 50 விழுக்காடு மின் உற்பத்தி அதிகரிக்கப்படும். கடந்த ஆண்டு 1 லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்பட்டது. இந்தாண்டும் 50 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கும் திட்டத்தை முதல்வர் விரைவில் தொடங்கி வைக்க உள்ளார்.

Tags : Power Department for Monsoon ,Minister ,Senthilbalaji , Appointment of Special Committees on behalf of Power Department for Monsoon Precautionary Measures: Interview with Minister Senthilbalaji
× RELATED செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் 33ஆவது முறையாக நீட்டிப்பு