×

நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை எதிரொலி மேட்டூர் அணை மீண்டும் நிரம்பியது: ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 35,000 கன அடியாக அதிகரிப்பு

மேட்டூர்: காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக, ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து விநாடிக்கு 35,000 கனஅடியாக அதிகரித்துள்ளது. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பால் நள்ளிரவில் மீண்டும் முழு கொள்ளளவை எட்டியது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையை பொறுத்து ஒகேனக்கல் மற்றும் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரிப்பதும், சரிவதுமாக உள்ளது. இந்நிலையில், நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை வலுத்துள்ளதால் ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் காலை விநாடிக்கு 9,500 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலை 9.30 மணியளவில் 35,000 கனஅடியாக உயர்ந்தது.

இதனால், மெயின்அருவி, ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதன் எதிரொலியாக காவிரியில் பரிசல் இயக்கவும், அருவிகளில் குளிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், ஒகேனக்கல்லுக்கு வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். இதேபோல், மேட்டூர் அணைக்கான நீர்வரத்தும் அதிகரித்துள்ளது. நேற்று காலை 20,626 கனஅடியாக இருந்த நீர்வரத்து மாலையில் 33,420 கனஅடியானது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு விநாடிக்கு 8,000 கனஅடி வீதம் திறக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று மாலை 20,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டது. கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு 900கனஅடியிலிருந்து 500 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது.

அணைக்கு வரும் நீரின் அளவைவிட திறக்கப்படும் நீரின் அளவு குறைவாக இருப்பதால் நீர்மட்டம் நேற்று மாலை 119.74 அடியாக உயர்ந்தது. நள்ளிரவு நேரத்தில் அணையின் நீர்மட்டம் மீண்டும் முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது. நீர் இருப்பு 93.47 டி.எம்.சி. மேட்டூர் அணை மீண்டும் நிரம்பியதையடுத்து, எப்போது வேண்டுமானாலும் உபரிநீர் போக்கியான 16 கண் மதகு வழியாக தண்ணீர் திறக்கப்படலாம் என்பதால் பொதுப்பணித்துறை அதிகாரிகள், பணியாளர்கள் மேட்டூர் அணையின் இடது கரையில் உள்ள வெள்ள கட்டுப்பாட்டு அறையில் முகாமிட்டு 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேட்டூர் அணையில் 2 மாதமாக முழு கொள்ளளவில் நீடித்த நீர்மட்டம் கடந்த மாதம் 23ம் தேதி மாலை 119.95 அடியானது. 19 நாட்களுக்கு பின்பு மீண்டும் 120 அடியை எட்டியுள்ளது சாதனையாக கருதப்படுகிறது.

Tags : Mettur Dam ,Okanagan , Rain reverberates in catchment areas, Mettur Dam refills: Increase in flow to Okanagan to 35,000 cubic feet
× RELATED மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 68 கனஅடி