×

எதிர்க்கட்சி துணை தலைவர் பதவிக்கும் சண்டை சபாநாயகருக்கு இபிஎஸ், ஓபிஎஸ் கடிதம்: அதிமுகவில் பரபரப்பு

சென்னை: சட்டப்பேரவை வருகிற 17ம் தேதி கூட உள்ள நிலையில் சபாநாயகருக்கு ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் போட்டி போட்டுக் கொண்டு கடிதம் எழுத்தியுள்ளனர். இதனால் சட்டப்பேரவையில் இரு அணியினரும் என்ன செய்யப் போகிறார்களோ என்ற பரபரப்பு அதிமுகவினர் மத்தியில் எழுந்துள்ளது. தமிழக சட்டப்பேரவை தேர்தல் தோல்விக்கு பிறகு அதிமுகவில் ஒற்றைத் தலைமை பிரச்னை விஸ்வரூபம் எடுத்தது. அதிமுகவில் எடப்பாடி, ஓபிஎஸ் இடையில் உச்சக்கட்ட மோதல் தொடர்ந்து வருகிறது. இதைத் தொடர்ந்து கட்சியை முழுமையாக கைப்பற்றுவதற்கான முயற்சியில் எடப்பாடி பழனிசாமி இறங்கியுள்ளார். இதற்காக பொதுக்குழுவை கூட்டி பொதுச் செயலாளர் ஆகி விடலாம் என்று எடப்பாடி நினைத்து இருந்தார். அதற்கு ஓபிஎஸ் உச்ச நீதிமன்றம் மூலம் செக் வைத்தார்.

இதனால், எடப்பாடிக்கு பொதுச் செயலாளர் ஆவதில் பின்னடைவு ஏற்பட்டது. இந்த நிலையில் வருகிற 17ம் தேதி சட்டப்பேரவை கூட உள்ளது. இது தொடர்பாக ஆலோசனை நடத்திய எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவை கூட்டத்தின்போது கட்சி விவகாரத்தை யாரும் பேசக்கூடாது என்று எம்எல்ஏக்களுக்கு உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவுக்கு நேற்று கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், ‘அதிமுக பொதுச் செயலாளர் தேர்தல் நடத்த உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. அதிமுக ஒருங்கிணைப்பாளர் நான் தான். இதனால் சட்டப்பேரவை நிகழ்வுகளில் கட்சி சார்ந்த எந்த முடிவுகள் எடுப்பதாக இருந்தாலும் தன்னை தான் கலந்து ஆலோசிக்க வேண்டும்’’ என்று கூறப்பட்டுள்ளது.

முன்னதாக, ஓபிஎஸ்ஸிடம் இருந்த சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவியை எடப்பாடி பறித்தார். இது தொடர்பாக சபாநாயகருக்கும் எடப்பாடி கடிதம் எழுதியிருந்தார். அதேபோல் ஓபிஎஸ்சும் சபாநாயகருக்கு கடிதம் எழுதியிருந்தார். அதாவது, ‘நான் தான் அதிமுக ஒருங்கிணைப்பாளர். என்ன முடிவு எடுத்தாலும் என்னிடம் தான் கலந்தாலோசிக்க வேண்டும்’ என்று தெரிவித்து இருந்தார். இந்நிலையில் நேற்று காலையில் சபாநாயகருக்கு ஓபிஎஸ் கடிதம் அளித்த நிலையில், அன்று மாலையில் எடப்பாடி தரப்பில் சட்டப்பேரவை செயலாளரிடம் கடிதம் அளிக்கப்பட்டது. அதில், ‘எதிர்க்கட்சி துணை தலைவராக ஆர்.பி.உதயகுமாரை அங்கீகரிக்க வேண்டும். சட்டமன்ற அலுவல் ஆய்வு கூட்டத்தில் அவரை அனுமதிக்க வேண்டும்’ என்று அதில் கூறப்பட்டுள்ளது.

ஓபிஎஸ், இபிஎஸ் போட்டி போட்டு சபாநாயகரிடமும், பேரவை செயலாளரிடமும் கடிதம் அளித்துள்ளது அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக சபாநாயகர் அப்பாவு, ‘‘எதிர்க்கட்சி தலைவர், எதிர்க்கட்சி துணை தலைவர் இருவரும் கடிதங்கள் தந்துள்ளனர். என்னுடைய பரிசீலனையில் உள்ளது. சட்டப்படி என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அது எடுக்கப்படும். யாருக்கு எந்த இருக்கை என்பது என்னுடைய முடிவு’’ என்று தெரிவித்திருந்தார். இந்த நிலையில் வருகிற 17ம் தேதி சட்டப்பேரவை கூட உள்ளது சபாநாயகர் என்ன முடிவு எடுக்க போகிறார் என்பது சட்டப்பேரவை கூடும் போது தான் தெரியவரும். அதே நேரத்தில் ஓபிஎஸ் சந்திப்பை தவிர்க்கும் வகையில் முதல் நாள் கூட்டத்தை புறக்கணிக்க எடப்பாடி முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Tags : EPS ,OPS ,Speaker ,vice ,president ,AIADMK , EPS, OPS letter to Speaker in fight for the post of Opposition Vice President: AIADMK stirs up excitement
× RELATED வேட்பாளர் படிவங்களில் இ.பி.எஸ், ஓ.பி.எஸ்...