×

கும்மிடிப்பூண்டி பாப்பன் சுடுகாட்டில் செல்போன் வெளிச்சத்தில் உடல் அடக்கம்; பாம்பு வந்ததால் மக்கள் அலறல்

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி பாப்பன் சுடுகாட்டில் விளக்கு வெளிச்சம் இல்லாததால் செல்போன் டார்ச் லைட்டில் உடல் அடக்கம் செய்யப்பட்டது. அப்போது பாம்பு வந்ததால் மக்கள் சிதறி ஓடினர். திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி பஜார் ரெட்டம்பேடு பகுதியில் பாப்பன் சுடுகாடு உள்ளது. இந்த சுடுகாட்டில் செடிகள் வளர்ந்து புதர்மண்டி கிடக்கிறது. மேலும் சுடுகாட்டில் விளக்கு வெளிச்சம் கிடையாது. இதனால் பிணத்தை அடக்கம் செய்ய முடியாமலும் ஈமச்சடங்கு உள்ளிட்ட காரியங்கள் செய்ய முடியாமலும் மக்கள் தவித்து வந்தனர்.

சுடுகாட்டில் விளக்கு வெளிச்சம் ஏற்படுத்தி தர வேண்டும் என்று பொதுமக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். கும்மிடிப்பூண்டி கோட்டக்கரை  பகுதியை சேர்ந்த வரதன் (66) என்பவர் நேற்று உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடலை அடக்க செய்ய ஊர்வலமாக கும்மிடிப்பூண்டி ரெட்டம்பேடு சாலையில் உள்ள பாப்பன் சுடுகாட்டுக்கு கொண்டு வந்தனர். அப்போது சுடுகாட்டில் ஈமச்சடங்கு செய்வதற்கு தேவையான குடிதண்ணீர், மின்விளக்கு வசதி இல்லாததால் இருள்சூழ்ந்து காணப்பட்டது.

இதனால் பிணத்தை அடக்க செய்ய கடும் சிரமப்பட்டனர். இருட்டாக இருந்ததால் செல்போன் டார்ச் லைட் வெளிச்சத்தில் பள்ளம் தோண்டி உடல் அடக்கம் செய்தனர். அப்போது திடீரென கூட்டத்தின் நடுவே ஒரு பாம்பு ஓடியதால் மக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். இந்த சம்பவத்தால் சுடுகாட்டில் பெரும் பரபரப்பு நிலவியது. “பாப்பன் சுடுகாட்டுக்கு பேரூராட்சி நிர்வாகம் அடிப்படை வசதிகள் செய்துதரவேண்டும்’ என்று பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்தனர்.

Tags : Kummidipoondi Pappan crematorium , Burial in the light of a cell phone at Kummidipoondi Pappan crematorium; People screamed because the snake came
× RELATED கலைஞர் மகளிர் உரிமை தொகை சமூகநீதி...