லண்டன்: உலகளவில் 100 கோடி பேருக்கு மனக் கோளாறு உள்ளிட்ட பிரச்னைகள் இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் தெரிவித்தார். உலக மனநல தினத்தை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில், ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் கூறுகையில், ‘உலகளவில் மனநலத்தால் பாதிக்கப்பட்ட மக்களை முன்னுரிமை அடிப்படையில் பாதுகாக்க வேண்டும். தரமான மனநலப் பாதுகாப்பை மேம்படுத்த நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். உலகம் முழுவதும் ஏறக்குறைய 1 பில்லியன் (100 கோடி) மக்கள் மனநலக் கோளாறுடன் வாழ்கின்றனர். மனநலம் என்பது மக்களின் சுகாதாரப் பாதுகாப்பில் இருந்து புறக்கணிக்கப்பட்ட பகுதியாக உள்ளது.
ஒவ்வொரு 1,00,000 பேருக்கும் இரண்டு மனநலப் பணியாளர்கள் மட்டுமே சில நாடுகளில் உள்ளனர். இதுபோன்ற நிலை மிகவும் கவலையளிக்கக் கூடியதாக உள்ளது. கவலை, மனச்சோர்வு போன்ற பிரச்னைகளுக்காக மட்டுமே ஆண்டுக்கு 1 டிரில்லியன் டாலர்கள் செலவாகும். மனநல பாதிப்பால் இளைஞர்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டு வருவதால், அவர்களுக்கான சுகாதார சேவைகளை அதிகப்படுத்த வேண்டும். வன்முறை மற்றும் அதிகார துஷ்பிரயோகம் உள்ளிட்ட பிரச்னைகள் மனநல பாதிப்பை ஏற்படுத்தும் முக்கிய காரணங்களாக உள்ளன. எனவே உலகளாவிய முன்னுரிமை அடிப்படையில் மக்களின் மனநல பாதுகாப்பை உலக நாடுகள் உறுதிப்படுத்த வேண்டும்’ என்று தெரிவித்தார்.