×

பலாத்கார குற்றச்சாட்டில் கைதான கிரிக்கெட் வீரர் சந்தீப் லமிச்சானேவிடம் போலீசார் விசாரணை; 7 நாள் கஸ்டடியில் விசாரிக்க கோர்ட் அனுமதி

காட்மண்ட்: பலாத்கார குற்றச்சாட்டில் கைதாகி சிறையில் உள்ள நேபாளம் கிரிக்கெட் அணியின் கேப்டன் சந்தீப் லமிச்சானேவை 7 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க  அனுமதியளித்து காட்மண்ட் மாவட்ட கோர்ட் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து இன்று காலை அவரை காவலில் எடுத்த காட்மண்ட் போலீசார், அவர் மீதான குற்றச்சாட்டு தொடர்பாக தங்களது விசாரணையை துவக்கினர். நேபாளம் கிரிக்கெட் அணியின் கேப்டன் சந்தீப் லமிச்சானே(22). நேபாளத்தில் இருந்து ஐபிஎல் கிரிக்கெட் அணிக்கு தேர்வான முதல் கிரிக்கெட் வீரர். கடந்த 2018ம் ஆண்டு முதல் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் இடம் பெற்று 3 ஆண்டுகள் ஐபிஎல் தொடர்களில் ஆடியுள்ளார். டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு இவர் தேர்வு செய்யப்பட்டது குறித்து, அப்போது பிரதமர் நரேந்திர மோடி கூறுகையில், ‘நேபாளத்தில் இருந்து சர்வதேச தரத்தில் ஒரு கிரிக்கெட் வீரர், ஐபிஎல் போட்டிகளில் ஆட தேர்வாகியுள்ளார் என்ற செய்தி மகிழ்ச்சியளிக்கிறது.

இதன் மூலம் இந்தியா-நேபாளம் இடையேயான உறவு மேலும் வலுப்படும்’’ என்று பாராட்டு தெரிவித்தார். இந்நிலையில் காட்மண்டில் சிறுமி ஒருவரை, லமிச்சானே பலாத்காரம் செய்ததாக கடந்த மாதம் போலீசாருக்கு புகார் வந்தது. இது தொடர்பாக காட்மண்ட் போலீசார் விசாரணை நடத்தினர். இந்த குற்றச்சாட்டில் முகாந்திரம் உள்ளது என தெரியவந்தது. இதையடுத்து லமிச்சானே மீது உடனடியாக கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. அப்போது அவர் மேற்கிந்திய தீவுகளில் நடந்த கரீபியன் பிரீமியர் லீக் போட்டிகளில் ஆடிக் கொண்டிருந்தார்.

இந்த தகவல் அறிந்ததும் அவர், காட்மண்ட் போலீசாருக்கு மெயில் அனுப்பினார். அதில், ‘அக்.6ம் தேதி காட்மண்ட் திரும்புகிறேன். அப்போது போலீசாரிடம் சரணடைகிறேன். விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்பேன்’ என்று தெரிவித்திருந்தார். அதன்படி கடந்த 6ம் தேதி காட்மண்ட் திரும்பிய அவரை, விமான நிலையத்திலேயே போலீசார் கைது செய்தனர். தற்போது சிறையில் உள்ள அவரை, காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் என காட்மண்ட் மாவட்ட நீதிமன்றத்தில் போலீசார் மனு தாக்கல் செய்திருந்தனர். அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், அவரை 7 நாள் போலீஸ் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க அனுமதியளித்து, நேற்று உத்தரவிட்டது. இதையடுத்து இன்று காலை அவரை காவலில் எடுத்த காட்மண்ட் போலீசார், மாவட்ட தலைமை கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு அழைத்து சென்றனர். அவர் மீதான பலாத்கார குற்றச்சாட்டு தொடர்பான தங்கள் விசாரணையை துவக்கினர்.

Tags : Sandeep Lamichane , Police Interrogates Cricketer Sandeep Lamichane Arrested On Rape Charges; Court allowed 7-day custodial hearing
× RELATED நேபாள கிரிக்கெட் வீரர் லமிச்சனேவுக்கு 8 ஆண்டுகள் சிறை