ஜூனியர் மகளிர் உலக கோப்பை கால்பந்து போட்டி இன்று கோலாகல தொடக்கம்

புவனேஷ்வர்: 16 அணிகள் பங்கேற்கும் ஃபிபா யு 17 மகளிர் உலக கோப்பை கால்பந்து போட்டி 2008ம் ஆண்டு முதல் 2 ஆண்டுக்கு ஒருமுறை நடத்தப்பட்டு வருகிறது. இதன்படி 7வது ஜூனியர் பெண்கள் உலக கோப்பை கால்பந்து போட்டி ஒடிசா மாநிலம் புவனேஷ்வரில் இன்று தொடங்கி வரும் 30ம் தேதி வரை நடக்கிறது. இந்த தொடர் கோவா, நவி மும்பை ஆகிய பகுதிகளிலும் நடைபெறுகிறது. இதில் பங்கேற்றுள்ள 16 அணிகளும் 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பிரிவிலும் 4 அணிகள் இடம் பெற்றுள்ளன. போட்டியை நடத்தும் இந்தியா ‘ஏ’ பிரிவில் இடம் பெற்றுள்ளது.

இதே பிரிவில் அமெரிக்கா, மொராக்கோ, பிரேசில் அணிகளும் உள்ளன. லீக் சுற்றின் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் கால் இறுதி சுற்றுக்கு முன்னேறும். கால் இறுதி ஆட்டங்கள் 21, 22ம் தேதி நடக்கிறது. அரை இறுதி ஆட்டங்கள் 26-ம் தேதியும் இறுதி போட்டி 30-ம் தேதியும் நடத்தப்பட உள்ளன. இந்தியா தனது முதல் ஆட்டத்தில் அமெரிக்காவுடன் இன்று மோதுகிறது. இரவு 8 மணிக்கு புவனேஷ்வரில் உள்ள கலிங்கா மைதானத்தில் இந்த போட்டி நடக்கிறது. போட்டியை நடத்தும் உரிமையை பெற்றுள்ளதால் இந்திய அணி நேரடியாக இந்த தொடரில் விளையாட தகுதி பெற்றது.

ஃபிபா யு 17 உலக கோப்பையில் இந்தியா விளையாடுவது இதுவே முதன்முறை. இந்திய அணியை காட்டிலும் அமெரிக்க அணி வலுவானதாக திகழ்கிறது. வட, மத்திய அமெரிக்கா மற்றும் கரீபியன் சங்க கால்பந்து கூட்டமைப்பு சாம்பியன்ஷிப்பில் பட்டம் வென்ற கையுடன் ஃபிபா உலக கோப்பையில் அமெரிக்க அணி களமிறங்குகிறது. இந்த தொடரில் அமெரிக்க அணி 58 கோல்களை அடித்திருந்தது. அதேவேளையில் அந்த அணிக்கு எதிராக ஒரு கோல் மட்டுமே அடிக்கப்பட்டிருந்தது. இதனால் இன்றைய ஆட்டத்தில் அமெரிக்க அணி, இந்தியாவுக்கு கடும் சவால் அளிக்கும். இந்த போட்டியை ஸ்போர்ட்ஸ்18 சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.

Related Stories: