×

தமிழக அரசின் பொங்கல் பரிசு தொகுப்புடன் மண்பானை இலவசமாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்-மண்பாண்ட தொழிலாளர்கள் கோரிக்கை

ராணிப்பேட்டை : தமிழக அரசின் பொங்கல் பரிசு தொகுப்புடன் மண்பானை, அடுப்பு ஆகியவற்றையும் அரசு கொள்முதல் செய்து குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவசமாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, தமிழ்நாடு மண்பாண்ட தொழிலாளர்கள் நலவாரியம் சார்பில் ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்வு கூட்டத்தில் கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது.

ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நேற்று நடந்தது. மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கி பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். மேலும், பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது உரிய விசாரணை மேற்கொண்டு தீர்வு காண வேண்டும், என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மொத்தம் 217 மனுக்கள் பெறப்பட்டது.

இதில், தமிழ்நாடு மண்பாண்டத் தொழிலாளர்கள் நல வாரியத்தின் ராணிப்பேட்டை மாவட்ட மண்பாண்ட தொழிலாளர்கள் மண்பானை மற்றும் அடுப்புடன் வந்து அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையின்போது குடும்ப அட்டைதாரர்களுக்கு பச்சரிசி, கரும்பு, சர்க்கரை, முந்திரி, ஏலக்காய் உள்ளிட்ட பொங்கல் பரிசுத்தொகுப்பு தமிழக அரசு சார்பில் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. அதுபோல், இந்த ஆண்டு முதல் புத்தாண்டில் விளைகின்ற புதிய அரிசியை புதுப்பானையில் பொங்கலிட களிமண்ணால் தயாரிக்கப்பட்ட புதுப்பானை மற்றும் அடுப்பு ஆகியவற்றை அரசு கொள்முதல் செய்ய வேண்டும்.

பொங்கல் பரிசுத்தொகுப்பு இலவசமாக வழங்குவதுபோல் களிமண் பானை மற்றும் அடுப்பு ஆகியவற்றை பொங்கல் பண்டிகையின்போது குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவசமாக  வழங்க அரசு நடவடிக்கை மேற்கொண்டு மண்பாண்ட தொழிலாளர்கள் வாழ்வில் ஒளியேற்றிட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
கலவை தாலுகா திமிரி ஒன்றியம் ஆருர் கிராமமக்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

ரகுநாதபுரம் நடுநிலைப்பள்ளியில் 1 முதல் 5ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக ஆசிரியர் பற்றாக்குறையாக உள்ளது. இதனால் அங்கு படிக்கும் மாணவர்களின் கல்விநிலை பாதிக்கப்பட்டுள்ளதால் அவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது. எனவே, எங்கள் பகுதியில் அமைந்துள்ள நடுநிலைப் பள்ளிக்கு தேவையான ஆசிரியர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.வாலாஜா தாலுகா விசி மோட்டூர் கிராம மக்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

எங்கள் பகுதியில் அமைந்துள்ள நடுநிலைப் பள்ளியில் 800க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். பள்ளி மாணவர்கள் சென்னை-மும்பை தேசிய நெடுஞ்சாலையை கடந்து வந்து செல்கின்றனர். இந்நிலையில், மேற்கண்ட சாலையின் நடுவே தடுப்புச்சுவர் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இதனால் பள்ளிக்கு வரும் மாணவர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். எனவே, பள்ளிக்கு எதிரே 10 அடி இடைவெளி விட்டு தடுப்புச் சுவர் அமைக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது. வாலாஜா தாலுகா மாங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த மூதாட்டி அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: நான் மேற்கண்ட கிராமத்தில் வசித்து வருகிறேன். எனது கணவர் இறந்துவிட்டார்.

எனக்கு மூன்று மகன்கள் இருந்தனர். இதில், இரண்டு மகன்கள் இறந்துவிட்டனர். இந்நிலையில், எனது மூத்தமகன் என்னை சரிவர பராமரிக்காமல் எனது பிள்ளைகள் இரண்டு பேருக்கும் சேர வேண்டிய சொத்தை வழங்காமல் உள்ளார். எனவே, எனது சொத்தை மீட்டு என்னோடு 4 பாகமாக சமபங்காக பிரிந்து வழங்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது. நெமிலி தாலுகா மேலேரி கிராம மக்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: எங்கள் கிராமத்தில் உள்ள உயர்நிலைப் பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும். மாணவர்களுக்கு தரமான குடிநீர், மதிய உணவு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

துணை ஆரம்ப சுகாதாரம் நிலையம் அமைக்க வேண்டும்.  அரசு நேரடி நெல்கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும். ஏரியில் உள்ள முட்புதர்களை அகற்றிட வேண்டும். மேலேரி கிராமத்தில் இருந்து நகரப்பேருந்து இயக்கிட வேண்டும். மேலேரி-காட்டுப்பாக்கம் இணைப்புச்சாலை கொண்டுவர வேண்டும். தனிநபர் ஆக்கிரமிப்பில் உள்ள கொள்ளாபுரி அம்மன் கோவில்-மேலேரி ஏரி வழிப்பாதையை மீட்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

இதில், டிஆர்ஓ குமரேஷ்வரன், சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் தாரகேஸ்வரி, மாவட்ட வழங்கல் அலுவலர் மணிமேகலை மற்றும் அனைத்து அரசுத்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

Tags : Tamil Nadu government ,Pongal , Ranipet: Along with Pongal gift package of the Tamil Nadu government, the government has also procured pots and stoves for the family card holders.
× RELATED மதுரை மாநகராட்சியில் கால்நடை...