×

ஆலந்தூரில் ரவுடி கோஷ்டிகள் இடையே மோதல்: பெட்ரோல் குண்டுகளை வீசிய 10-க்கும் மேற்பட்டோர் கைது

சென்னை: சென்னையை அடுத்த ஆலந்தூரில் இரண்டு ரவுடிகள் கோஷ்டி மோதலில் பெட்ரோல் குண்டுகளை வீசிய 10-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்துள்ளனர். ஆலந்தூர் ஆபிரகாம் தெருவில் நேற்று இரவு 8 மணியளவில் 20 பேர் கொண்ட கும்பல் கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் வந்தது. அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆட்டோ, மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை அடித்து நொறுக்கியது. பின்னர் அந்த கும்பல் ஆபிரகாம் தெருவில் உள்ள ஒரு ஜீவசமாதி மடத்தில் பெட்ரோல் குண்டை வீசியது.

இதுகுறித்து தகவல் அறிந்ததும், ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் வந்தபோது அங்கு நின்றிருந்த நவீன்(28), தனியார் கூரியர் நிறுவனத்தில் வேலை செய்யும் சபீக், அபுபக்கர் ஆகியோரை வெட்டி விட்டு கும்பல் தப்பி சென்றுள்ளது. பிடிக்க வந்த போலீசார் மீதும் பெட்ரோல் குண்டுகளை வீசிவிட்டு தப்பி சென்றது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் நடத்திய விசாரணையில், ஆதம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த நாகூர் மீரான் தலைமையில் ஒரு ரவுடி கோஷ்டியும், ராபின்சன் தலைமையில் ஒரு கோஷ்டியும் செயல்பட்டு வந்தது தெரியவந்துள்ளது.

கடந்த ஆண்டு நாகூர் மீரானை ராபின்சன் கோஷ்டி கொலை செய்தது. இதனால் ராபின்சனை கொலை செய்ய நாகூர் மீரான் தரப்பு சுற்றி வந்தது. இந்நிலையில் நேற்று மாலை ராபின்சன் தங்கை ஷெரின் தனது நண்பர் அணில் (22) என்பவருடன் கிண்டி மடுவின்கரை அருகே மோட்டார் சைக்கிளில் சென்றபோது, 2 பேர் வழிமடக்கி அணிலை தங்களுடன் அழைத்து சென்றனர். இரவு வீடு திரும்பிய அணில் தன்னை தாக்கியதை ஷெரினிடம் கூறியுள்ளார்.

ஷெரின் தனது அண்ணன் ராபினிடம் கூற அவரது ரவுடி கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் ஆலந்தூர் ஆபிரகாம் தெருவில் பெட்ரோல் குண்டுகளை வீசி ரகளை செய்துள்ளது. இதனையடுத்து ஆதம்பாக்கம் அம்பேத்கார் நகரில் பதுங்கி இருந்த ரவுடி ராபின்சன் கோஷ்டியை சேர்ந்த 10-க்கும் மேற்பட்டோரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த பரங்கிமலை போலீசார் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags : Alandur , Clash between rowdy groups in Alandur: More than 10 people arrested for throwing petrol bombs
× RELATED நங்கநல்லூர் வாக்குச்சாவடியில் தேர்தல் அதிகாரி ஆய்வு