நீலகிரியில் 283 இடங்கள் பேரிடர் பாதிக்கும் அபாயம் 3500 முதல் நிலை மீட்பாளர்களுக்கு பயிற்சி-வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள் தீவிரம்

ஊட்டி : நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு  பருவமழையின்போது ஏற்பட்ட நிலச்சரிவு, மரம் மற்றும் மண்சரிவால் பலர் உயிரிழந்தனர். தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது. அதன்பின்னர் பருவமழைக்கு முன்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைககள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வடகிழக்கு பருவமழை நெருங்குவதையொட்டி முன்னேற்பாடுகளை தீவிரப்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி நீலகிரி மாவட்டத்தில் முன்னேற்பாட்டுப்பணிகள் துரிதமாக நடந்து வருகிறது. குறிப்பாக நீலகிரி மாவட்டத்தில் 283 இடங்கள் பேரிடம் பாதிக்கும் அபாயம் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. இந்த பகுதியை சுற்றி வசிக்கும் கிராம மக்களை பாதுகாக்கும் நடவடிக்கைகளை மும்முரமாக நடந்து வருகிறது.இதன் ஒரு பகுதியாக இயற்கை சீற்றங்களால் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால்  உடனடியாக இலவச தொலைப்பேசி எண்ணான 1077 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு தெரிவிக்க வேண்டும் என கலெக்டர் கேட்டுக் கொண்டுள்ளார்.

நீலகிரி மாவட்ட ஆட்சியர் கூடுதல் அலுவலகத்தில், வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் சார்பில் மாவட்ட அளவிலான முதல் நிலை மீட்பாளர்களுக்கான பேரிடர் மேலாண்மை பயிற்சி நடந்தது.

பயிற்சியனை மாவட்ட கலெக்டர் அம்ரித் துவக்கி வைத்து பேசியதாவது: நீலகிரி மாவட்டத்தில், தென்மேற்கு பருவமழை மற்றும் வடக்கிழக்கு பருவமழை ஆகிய இரண்டு பருவ மழைக்காலங்களிலும் அதிகம் மழை பெய்து வருகிறது. இந்நிலையில், மாவட்டத்தில் உள்ள 3500 முதல் நிலை மீட்பாளர்களுக்கு பல்வேறு கட்டங்களாக பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளது.

 முதல்நிலை மீட்பாளர்கள் இயற்கை இடர்பாடுகள் ஏதும் ஏற்படும் பட்சத்தில் உடனடியாக மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

ஏற்கனவே, முதல்நிலை மீட்பாளர்களுக்கு கிராம அளவிலும், கோட்ட அளவிலும் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து தற்போது மாவட்ட அளவிலான பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. இப்பயிற்சியில், தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை, காவல்துறை, வருவாய்த்துறை,  மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்களால் பயிற்சி அளிக்கப்படுகிறது.

 குறிப்பாக, நீலகிரி மாவட்டத்தில் இயற்கை சீற்றத்தினால் மரங்கள் சாலையில் சாய்வதுண்டு. அதேபோல் சிறிய அளவில் மண்சரிவு ஏற்படுகிறது. இதனை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் மூலம் பொதுமக்களுக்கு எந்தவொரு பாதிப்பும் ஏற்படாதவாறு உடனடியாக சீரமைக்கப்பட்டு வருகிறது. இருந்த போதிலும் தங்கள் பகுதியில் அபாயகரமான மரங்கள் இருக்கும் பட்சத்தில் உடனடியாக மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் அளிக்க வேண்டும். இயற்கை சீற்றங்களால் ஏதேனும் பாதிப்புகள் ஏற்படும் பட்சத்தில் உடனடியாக இலவச தொலைப்பேசி எண்ணான 1077 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ள வேண்டும்.

மேலும், தங்களது கைப்பேசியில் ‘TNSMART’ APP பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி தங்களது பகுதியில் ஏதேனும் இயற்கை சீற்றங்கள் தொடர்பான எச்சரிக்கைகளை பார்த்து தெரிந்து கொள்வதோடு, தங்கள் பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மாவட்ட நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இப்பயிற்சியில் முகாமில், மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்சினி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) தனப்ரியா, பேரிடர் மேலாண்மை தாசில்தார் தினேஷ்குமார் உட்பட அரசுத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: