×

சின்னாறு அணையில் இருந்து 17 ஏரிகளுக்கு உபரிநீர் கொண்டு செல்ல ₹6.29 கோடியில் இணைப்பு கால்வாய் திட்டம்-பொதுப்பணித்துறை நடவடிக்கை

தர்மபுரி : தர்மபுரி அருகே ₹6.29 கோடியில் இணைப்பு கால்வாய் திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன்மூலம் பாப்பாரப்பட்டி, இண்டூர் பகுதியில் உள்ள 17 ஏரிகளுக்கு 9 ஆண்டிற்கு பின்பு உபரிநீர் கொண்டு செல்லும் வகையில் பொதுப்பணித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.தர்மபுரி மாவட்டத்தில் வாணியாறு, தொப்பையாறு, நாகாவதி, கேசர்குழி, தும்பலஅள்ளி, ஈச்சம்பாடி, சின்னாறு அணை என 8 நீர்த்தேக்கங்கள் உள்ளன. இதில் முக்கிய அணையாக பஞ்சப்பள்ளி சின்னாறு அணை உள்ளது.

இந்த அணைக்கு தளி, பெட்டமுகிலாளம், தேன்கனிக்கோட்டை வன பரப்பு நீர்ப்பிடிப்பு பகுதியாக உள்ளது. இந்த அணைக்கு மழை காலத்தில் தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்படும். இதனால், உபரிநீர் வீணாக காவிரியில் கலந்து கடலுக்கு செல்கிறது. இந்த உபரிநீரை சேமிக்கும் வகையில், சின்னாறு அணை நிரம்பும் காலங்களில் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு ஏரிகளுக்கு திருப்பி விடுவதற்காக, கடந்த 1973ம் ஆண்டு ஜெர்தலாவ் பிரதான கிளை கால்வாய் திட்டத்தின் மூலம், கால்வாய் வெட்டப்பட்டது. இதன்மூலம் சின்னாறு அணை நிரம்பும் காலங்களில் உபரிநீர் திறக்கப்பட்டு, பல்வேறு ஏரிகளில் நிரப்பப்பட்டு வந்தது.

 இந்நிலையில், கடந்த 2008-2013ம் ஆண்டு வரை ₹6.29 கோடி மதிப்பில் ஜெர்தலாவ் கிளை கால்வாய் மூலம், நீர்வள ஆதாரம் குறைந்த பகுதிகளான 17 ஏரிகளுக்கு, கால்வாய் புதியதாக வெட்டப்பட்டது. தொட்லாம்பட்டி ஏரி, பாப்பாரப்பட்டி பெரிய ஏரி, சின்ன ஏரி, அம்மன் ஏரி, கஞ்சன் ஏரி, பிலப்பநாயக்கனஅள்ளி ஏரி, தட்டாரப்பட்டி ஏரி, எர்ரப்பட்டி ஏரி, சிட்லகாரம்பட்டி, வேலம்பட்டி, பள்ளிப்பட்டி ஏரி, பாலவாடி ஏரி, மூக்கனஅள்ளி ஏரி, பேடரஅள்ளி, தளவாய்அள்ளி ஏரி, இண்டூர் ஏரி, தீர்த்தங்குளம் ஆகிய 17 ஏரிகளுக்கு தண்ணீர் வரும் வகையில் இணைப்பு கால்வாய் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 815 ஏக்கர் பாசன வசதி பெறும். மேலும், நிலத்தடி நீர்மட்டம் உயரும். கிணறு மற்றும் ஆழ்துளை கிணறுகளின் நீர்மட்டம் உயரும். பாலக்கோடு, பென்னாகரம், நல்லம்பள்ளி வருவாய் வட்டங்களில் உள்ள 60 குக்கிராமங்கள் பயனடையும்.

 இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டு 9 ஆண்டுகளாகியும், இதுவரை இந்த கால்வாயில் தண்ணீர் திறந்து விடப்படவில்லை. தென்மேற்கு பருவமழை அதிகளவில் பெய்துள்ளது. வடகிழக்கு பருவமழையும் கூடுதலாக பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. பஞ்சப்பள்ளி சின்னாறு அணையின் உபரிநீரை 17 ஏரிகளுக்கும் கொண்டு சென்று, நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டுமென சுற்றுவட்டார பகுதியில் உள்ள 60க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள், பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
 இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:

சின்னாறு அணையின் உபரிநீரை பாப்பாரப்பட்டி, இண்டூர் ஆகிய பகுதிகளில் உள்ள 17 ஏரிகளுக்கு கொண்டு செல்வதற்கு கால்வாய் வெட்டும் பணி, கடந்த 2008ம் ஆண்டு தொடங்கி, 2013ம் ஆண்டு நிறைவடைந்தது. இந்த கிளை கால்வாய் எர்ரனஅள்ளியில் இருந்து தொடங்கி பாப்பாரப்பட்டி வரையும், அங்கிருந்து இண்டூர் வரையும் இரு பிரிவுகளாக சுமார் 25 கி.மீ., தொலைவிற்கு  அமைக்கப்பட்டது. இந்த பணிக்காக நூற்றுக்கணக்கான விவசாயிகள், தங்கள் விவசாய நிலங்களில் ஒரு பகுதியை வழங்கியுள்ளனர்.

ஆனால், கடந்த 10 ஆண்டுகளில் பஞ்சப்பள்ளி அணை 3 முறை நிரம்பி, உபரிநீர் வெளியேறிய போதும், இந்த கால்வாயில் இதுவரை ஒரு முறை கூட தண்ணீர் வரவில்லை. இதனால், 17 ஏரிகளும் தண்ணீர் இன்றி வறண்ட நிலையிலே உள்ளன. கடந்த சில மாதங்களாக பெய்த பருவமழை காரணமாக, சமீபத்தில் சின்னாறு அணை நிரம்பியது. இதைத்தொடர்ந்து பிரதான கால்வாயில் உபரிநீர் திறக்கப்பட்டது. இதன்மூலம் பல்வேறு ஏரிகள் நிரம்பி வருகின்றன. எனவே, பஞ்சப்பள்ளி அணையின் உபரிநீரை, 17 ஏரிகளுக்கு திறக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு விவசாயிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து பொதுப்பணித்துறை பொறியாளர் குமார் கூறுகையில், ‘பருவமழையால் அணைகளில் நீர்மட்டம் அதிகரித்துள்ளது. இதனால், ஏரிகளின் நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது. பஞ்சப்பள்ளி சின்னாறு அணையின் உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணையின் உபரிநீர் சார்ந்த ஏரிகளுக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. அந்த ஏரிகள் அனைத்தும் விரைவில் நிரம்பிவிடும். அடுத்தகட்டமாக பாப்பாரப்பட்டி முதல் இண்டூர் வரை உள்ள 17 ஏரிகளுக்கும் தண்ணீர் திறந்துவிட நடவடிக்கை எடுக்கப்படும்,’ என்றார்.

Tags : Chinnar Dam ,Public Works Department , Dharmapuri: Link canal project has been completed near Dharmapuri at a cost of ₹6.29 crore. By this means Papparapatti in Indore area
× RELATED சிவகங்கை மாவட்டத்தில் தடமில்லாமல்...