×

கன்னியாகுமரி முதல் வட்டக்கோட்டை வரை அதிநவீன படகு சேவை 1ம்தேதி தொடக்கம்-அதிகாரிகள் இன்று ஆய்வு

கன்னியாகுமரி :  கன்னியாகுமரி கடலில் படகு சவாரிக்காக எம்எல். தாமிரபரணி, எம்எல், திருவள்ளுவர் படகுகள் வரும் 1ம் தேதி முதல் சுற்றுலா பயணிகளின் பயன்பாட்டுக்கு வர உள்ளது. இது தொடர்பாக ஆய்வு மேற்கொள்ள சென்னையில் இருந்து உயரதிகாரிகள் இன்று வர உள்ளனர். சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு தினமும் உள்நாடு, வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம்.

இங்கு அதிகாலை சூரிய உதயம், கடல் நடுவே அமைந்துள்ள திருவள்ளுவர் சிலை, விவேகானந்தர் மண்டபம் உள்ளிட்டவை சிறப்பு அம்சங்களாக கருதப்படுகிறது. பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக படகுகளான எம்.எல்.குகன், எம்.எல். பொதிகை, எம்.எல். விவேகானந்தா ஆகியவற்றின் மூலம் சுற்றுலா பயணிகள் விவேகானந்தர் மண்டபத்திற்கு அழைத்து செல்லப்படுகின்றனர். காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை இந்த படகு சேவை நடைபெறும்.

இந்த நிலையில் சுற்றுலா பயணிகள் கடலில் நீண்ட நேரம் பயணம் செய்ய வசதியாக, குளிரூட்டப்பட்ட அதின நவீன சுற்றுலா படகுகளான எம்எல் தாமிரபரணி, எம்எல் திருவள்ளுவர் படகுகள் சுமார் ரூ.4.5 ேகாடி மதிப்பில் வாங்கப்பட்டன. இவை கடந்த 2 வருடங்களாக சுற்றுலா பயணிகள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படாமல் இருந்தன. இதற்கு கன்னியாகுமரி கடலில் ஏற்படும் காற்றின் வேக மாறுபாடு, அடிக்கடி கடல்நீர் மட்டம் உள்வாங்குதல் உள்பட பல்வேறு காரணங்கள் கூறப்பட்டன.

இந்த நிலையில் இந்த இருபடகுகளையும் சுற்றுலா பயணிகள் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கு அதிகாரிகள் பல்வேறு கட்ட ஆய்வு மேற்கொண்டனர். இதையடுத்து வரும் நவம்பர் 1ம் ேததி முதல் படகுகளை இயக்க முடிவு செய்துள்ளனர். இந்த படகுகள் கன்னியாகுமரி பூம்புகார் படகு தளத்தில் இருந்து வட்டக்கோட்டை வரை கடல் வழியாக சுமார் 1 மணி நேரம் பயணம் செய்து விட்டு அழைத்து வர ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

 இதற்கு ஒரு மணி நேரம் கட்டணமாக குளிரூட்டப்பட்ட எம்எல் தாமிரபரணி படகிற்கு நபர் ஒருவருக்கு ரூ.800 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதுபோல் ஏசி வசதி இல்லாத எம்எல் திருவள்ளுவர் படகிற்கு நபர் ஒருவருக்கு ரூ.600 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக ஆய்வு மேற்கொள்ள சென்னையில் இருந்து பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக உயரதிகாரிகள் இன்று கன்னியாகுமரி வருகின்றனர். தொடர்ந்து அவர்கள் ஆய்வு கூட்டமும், அலுவல் கூட்டம் நடத்த உள்ளனர்.

அந்த கூட்டத்தில் படகு சேவை எவ்வளவு நேரம் நடைபெறும். சுற்றுலா பயணிகள் ஆன் லைன் டிக்கெட் எடுப்பது எப்படி? மற்றும் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து முடிவு செய்யப்படும் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Tags : Kanyakumari ,Vattakkottai , Kanyakumari : ML for boating in Kanyakumari sea. Tourism from 1st day of arrival of Thamirabarani, ML, Thiruvalluvar boats
× RELATED கன்னியாகுமரி மாவட்டத்தில் விசைப்படகு...