×

வரதட்சணை கேட்டு மிரட்டும் மாமனார், மாமியாரை கண்டித்து 6 மாத கர்ப்பிணி, தாய், தந்தையுடன் தற்கொலை முயற்சி-கள்ளக்குறிச்சியில் பரபரப்பு

கள்ளக்குறிச்சி :  கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுகா ஆண்டிக்குழி காலனி பகுதியை சேர்ந்த பழனிவேல் மகள் பிரியதர்ஷினி (20). இவர் உளுந்தூர்பேட்டை பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் டிப்ளமோ நர்சிங் படிக்க செல்லும்போது செம்மணங்கூர் கிராமத்தை சேர்ந்த ரங்கராஜ் மகன் ராஜசேகருடன் (20) பழக்கம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து ஒரு வருடமாக காதலித்து வந்தனர்.  இந்நிலையில் கடந்தாண்டு இருவரும் திருமணம் செய்ததாக கூறப்படுகிறது.

தற்போது பிரியதர்ஷினி 6 மாத கர்ப்பிணியாக உள்ளார். இந்நிலையில் கடந்த ஒரு வருடமாக மாமனார் ரங்கராஜன், மாமியார் அஞ்சலை ஆகிய இருவரும் காதல் கணவருடன் சேர்ந்து வாழவிடாமல் தொந்தரவு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் ரங்கராஜன் உளுந்தூர்பேட்டை காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். அதில் எனது மகனுடன் பிரியதர்ஷினி சேர்ந்து வாழ அனுமதிக்கமாட்டோம் என கூறியதாக தெரிகிறது. இதனையடுத்து இருதரப்பினரையும் போலீசார் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி தம்பதியை சேர்த்துவைத்து அனுப்பிவைத்துள்ளனர்.

இந்நிலையில் தனது மகனுடன் சேர்ந்து வாழ வேண்டுமென்றால் வரதட்சணையாக 50 பவுன் நகை மற்றும் கார் வாங்கி தர வேண்டும், இல்லையென்றால் எனது மகனுடன் உன்னை (பிரியதர்ஷினியை) வாழவிட மாட்டோம் என்று ரங்கராஜனும், அவரது மனைவியும் கூறியதாக தெரிகிறது. இதனையடுத்து பிரியதர்ஷினியின் கணவர் ராஜசேகரை கடந்த 2 மாதங்களாக மறைத்து வைத்து, பிரியதர்ஷினியிடம் பேச விடாமல் தடுத்து கொலை மிரட்டல் விடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது.

இதுசம்பந்தமாக பிரியதர்ஷினி குடும்பத்தினர் உளுந்தூர்பேட்டை மகளிர் காவல் நிலையம் மற்றும் உளுந்தூர்பேட்டை டிஎஸ்பி அலுவலகத்தில் புகார் கொடுத்து 20 நாட்கள் ஆகியும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் மனஉளைச்சலில் இருந்து வந்த 6 மாத கர்ப்பிணியான பிரியதர்ஷினி மற்றும் அவரது தந்தை பழனிவேல், தாய் சுமதி ஆகிய மூன்று பேரும் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு நேற்று மனு அளிக்கவந்தனர்.

அப்போது அவர்கள் கைப்பையில் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெய்யை உடலில் ஊற்றி தற்கொலை முயற்சியில் ஈடுபட முயன்றனர். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு கொடுங்கள் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்கள் என போலீசார் அறிவுறுத்தி அனுப்பிவைத்தனர். பின்னர் கர்ப்பிணி பெண் பிரியதர்ஷினி தனது கணவருடன் சேர்ந்து வாழ நடவடிக்கை எடுக்க வேண்டி ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார். கர்ப்பிணி பெண் தனது தாய், தந்தையுடன் தற்கொலைக்கு முயன்றதால் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : Kalakurichi , Kallakurichi: Priyadarshini (20), daughter of Palanivel, hails from Antikuzhi Colony, Ulundurpet taluk, Kallakurichi district.
× RELATED வீட்டின் கூரையில் கொய்யா மரம்...